செய்தி வெளியான இதழ்: 2018 மார்ச்.
உலகளவில் பிரபலமான ஞானி சாக்ரட்டீஸ், மருந்துத் தயாரிப்பில் பயன்படுத்திய மரம். அக்கால ஞானிகள் மருத்துவமும் தெரிந்திருப்பார்கள். அரிஸ்டாட்டிலின் மாணவரான அலெக்சாண்டருக்கும் மருத்துவம் தெரியும். அதைப் போல, அரிஸ்டாட்டிலின் குருநாதர் சாக்ரட்டீசும் வைத்திய நிபுணர்.
சாக்ரட்டீஸ் அவருடைய காலத்தில் தனது மருத்துவத்தில், டிராகன் பிளட்டைப் பயன்படுத்தி இருக்கிறார். அப்போது இதன் பெயர் எம்ஜோலோ. ஆனால், இப்பகுதியின் பூர்வக் குடிகள் இதனை, சின்னபார் என்கிறார்கள்.
மாறுபட்ட உருவ அமைப்பைக் கொண்ட பத்து மரங்கள் என, ஒரு பட்டியல் போட்டால், அவற்றில் ஒன்றாக வரும், இந்த டிராகன் பிளட் மரம். இந்த மரத்தில் வடியும் ஒருவகைப் பால்தான் டிராகன் பிளட். இதை அந்த நாட்களில் கம்பளித் துணிகள், மண் பானைகளுக்குச் சாயம் ஏற்ற, மருந்தாக, பெண்கள் உதட்டுச் சாயமாகப் பயன்படுத்தினர்.
சடங்குகள் மற்றும் தகரத்தைத் தங்கமாக்கும் இரசவாதம் செய்யவும் இது தேவை. உள்ளங்கால் அரிப்பு முதல் உச்சந்தலை எரிச்சல் வரை, கொண்டுவா டிராகன் பிளட்டை என்பார்கள், சொகோத்ரா தீவு மக்கள்.
கிரேக்கர்கள், ரோமானியர்கள் மற்றும் அரேபியரின் சளி, ஜூரம், வாய்ப்புண், வயிற்றுப் புண், குடற்புண், தொண்டைப் புண், பேதி, சீதபேதி என, மக்களுக்கு வரும் பாதி நோய்களுக்குச் சஞ்சீவி மூலிகை டிராகன் பிளட் தான்.
பதினெட்டாம் நூற்றாண்டில் இப்பகுதி மக்களுக்குப் பற்பசையும் இந்த டிராகன் பிளட் தான். உங்கள் பற்பசையில் உப்பிருக்கிறதா என்று யாரும் அன்று கேட்கவில்லை.
34 மில்லியன் ஆண்டுகளுக்கு முன், அரேபியாவில் இருந்து பிரிந்த ஒரு தீவு தான் சொகோத்ரா. இத்தீவின் தாவரங்கள், பிராணிகள் எல்லாமே, டிராகன் பிளட் மாதிரி, மாறுபட்ட ஜந்துக்கள் தான். கடும் வறட்சி, கிரானைட் பாறையால் ஆன மலைப்பகுதியில் இந்த மரமும் இருக்கும்.
மரத்தின் தலைப்பகுதி குடையைப் போல இருப்பதால், அதன் நிழல் அடிப்பகுதியில் நீர் ஆவியாவதைத் தடுத்து, தனக்குக் கீழே வளரும் கன்றுகளுக்குச் சாதகமான சூழலை வழங்குகிறது.
கால்நடைகளுக்குத் தீவனம் தர, கயிறு திரிக்க, பிசின் எடுக்க, தேனீப் பெட்டிகள் செய்ய, மருந்துகள் தயாரிக்க என்று, பல வகைகளில் உதவுகிறது, அழிந்து வரும் மரங்களில் ஒன்றான, டிராகன் பிளட் ட்ரீ.
பொதுப் பெயர்: டிராகன் பிளட் ட்ரீ. தாவரவியல் பெயர்: டிரசீனா சின்னபாரி. தாவரக் குடும்பம்: அஸ்பராகேசியே. பூமி செங்குத்தாகப் பிடித்திருக்கும் பச்சைக்குடை மரம் இது.
லேசாய்க் கீறினால் கூட இரத்தச் சிவப்பாய்ப் பாலை வடிக்கும். அதனால் தான் இதன் பெயர் டிராகன் பிளட் ட்ரீ. டிராகனின் இரத்தம் இது போலத்தான் இருக்குமாம். பனை மரத்தைப் போல, இது ஒரு விதையிலை மரம். ஆனாலும், இந்தப் பனைக்குக் கிளையுண்டு. கிளைகள் இரண்டு இரண்டாக, ஒழுங்காகப் பிரியும்.
டிராகன் பிளட் இலைகள்
மரத்தின் கிளைச் சிம்புகளின் நுனிகளில் மட்டுமே இலைகள் இருக்கும். மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் இலைகள் முதிர்ந்து உதிரும். பூக்கள், வெள்ளை அல்லது பச்சையாகப் பூக்கும். இந்தப் பூக்களின் வாசத்தைப் பிடிக்க இரண்டு மூக்கு வேண்டும்.
டிராகன் பிளட் பழங்கள்
பூ காயாகி, கனியாகி, பறவைகளுக்கும் வன விலங்குகளுக்கும் விருந்து வைக்க, ஐந்து மாதங்கள் பிடிக்கும். பச்சை நிறக் காய்கள் கறுப்பு நிறமாக மாறிக் கனிந்து, பின் ஆரஞ்சு கலந்த அழகான சிவப்பு நிறத்தை அடையும்.
மருத்துவம்
கருச்சிதைவு செய்வதற்குக் கைகண்ட மருந்து. இதன் பிசின், வாய் மற்றும் தொண்டைப் புண்ணைக் குணப்படுத்தும். பல் ஈறுகளின் இரத்தக் கசிவைக் கட்டுப்படுத்த, பற்பசைகளில் சேர்க்கபடுகிறது. இதன் வேர், முடக்குவாதத்தைக் குணப்படுத்தும். இலைகள் வாயுவை நீக்கும்.
பருவ மாற்றம்
மாறிவரும் பருவ நிலையில், இந்த மரங்களின் தலைப்பகுதி முழுக் குடையாய் வளர்வதில்லை என்கிறார்கள். இன்னும் ஐம்பது ஆண்டுகளில் தற்போது இருக்கும் மரங்களில் 45 சத மரங்களை இழக்க நேரிடும் என்கிறார்கள் தாவரவியல் நிபுணர்கள்.
எது எப்படி இருந்தாலும் சொகோத்ரா தீவின் அடையாள மரம் டிராகன் பிளட். அடுத்த தலைமுறை பார்க்க, பரவசப்பட, பயன்படுத்த, பாதுகாக்க வேண்டிய மரம்.
தே.ஞானசூரிய பகவான், இயக்குநர், பூமி அறக்கட்டளை, தெக்குப்பட்டு, வாணியம்பாடி வட்டம், வேலூர் மாவட்டம்.
சந்தேகமா? கேளுங்கள்!