My page - topic 1, topic 2, topic 3

சந்தைக்குத் தயாராகும் சத்துமிகு நெல்லரிசி!

நெல்லரிசி

செய்தி வெளியான இதழ்: 2018 ஆகஸ்ட்.

ளர்ந்து வரும் நாடுகளில், மிக முக்கியமான உணவுப் பொருளாக விளங்கும் நெல்லரிசியின் பயன்பாடு மிகுந்து வருகிறது. இதில், ஆற்றல், புரதம், கொழுப்பு போன்ற முக்கியச் சத்துகள் மிகுதியாக உள்ளன. இரும்பு, துத்தநாகம், கால்சியம், அயோடின், வைட்டமின்கள் ஏ, பி, சி போன்ற நுண் சத்துகள் குறைவாக உள்ளன.

இந்த நுண் சத்துகள் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு மிகவும் தேவை. நுண்சத்துக் குறை என்பது, இன்று உலகளவில் முக்கியச் சிக்கலாக உள்ளது. இரண்டு மில்லியனுக்கும் மேலான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஆலைகளில் நெல்லை அரைக்கும் போது உடையும் அரிசி, குருணை எனப்படும். இந்த அரிசி குறைந்த விலைக்குக் கிடைக்கும். இருப்பினும் இதை நுகர்வோர் விரும்புவதில்லை. காரணம், இதில் சத்துகள் இருக்காது என்பது தான்.

எனவே, இதிலுள்ள நுண் சத்துக் குறையை நீக்கி, சத்துள்ள அரிசியாகப் பயன்படுத்தும் வகையில், மதுரை சமுதாய அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின், உணவு மற்றும் சத்தியல் துறையில், ஓர் ஆய்வு நடந்து வருகிறது.

பிழிதல் தொழில் நுட்பத்தின் மூலம், சிற்றுண்டி உணவுகள், உறைமயமான காய்கறிப் புரதம், உலர் சூப் வகைகள், உலர் பானக் கலவைகள், ரொட்டித்தூள், மிட்டாய் போன்ற உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

இதைப் போல, பிழிதல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, பேரூட்டங்களையும் நுண்ணூட்டங்களையும் சேர்த்து, இயற்கையான அரிசியைப் போல, குருணை அரிசியை மாற்றிப் பயன்படுத்தலாம். இதற்கு, சத்துகளைச் செறிவூட்டிய அரிசி என்று பெயர். இந்த ஆய்வு தான் இப்போது நடந்து வருகிறது.

அதாவது, பிழிதல் தொழில் நுட்பத்தில், குருணை அரிசி மாவாக அரைக்கப்படுகிறது. பிறகு, வேக வைத்து முழு அரிசியைப் போலவும், சமைக்கும் போது இயற்கை அரிசியின் தன்மையில் இருக்கும் வகையிலும் மாற்றப்படுகிறது.

இதை ஏற்கெனவே வேக வைத்திருப்பதால், மிக விரைவிலேயே வெந்து சோறாகி விடும். இது, இன்றைய அவசர உலக மக்களுக்கு மிகவும் ஏற்றதாக அமைகிறது.

இந்த அரிசியில், வைட்டமின்கள், தாதுப்புகள், பீட்டா கரோட்டின்கள் மற்றும் செயல்பாட்டுப் பொருள்கள் சேர்க்கப்படுகின்றன. பொதுவாக ஒரு சில அரிசி வகைகளை ஊற வைத்துச் சமைக்கும் பழக்கம் நம்மிடம் இருந்து வருகிறது.

ஆனால், இந்த அரிசியை ஊற வைக்கத் தேவையில்லை என்பதால், அதில் சேர்க்கப்பட்ட சத்துகள் அதிலேயே தங்குகின்றன. இந்த அரிசியைச் சமைக்க, 58-60 சத ஈரப்பதம் தேவை. ஐந்து நிமிடங்களில் சோறாகி விடும்.

இந்த ஆய்வின் முடிவு, நுண் சத்துகளை அன்றாட உணவில் கிடைக்கச் செய்யும் வகையில், நுகர்வோரின் உணவுப் பழக்கங்களில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் பயனளிக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

இதைத் தொடர்ந்து, அரிசியில் சேர்க்கப்படும் சத்துகள் உடலால் கிரகிக்கப்படும் தன்மையைக் கண்டறியும் ஆய்வுகள் நடந்து வருகின்றன.


ரா.யோகேஸ்வரி, ஆராய்ச்சி மாணவி, முனைவர் க.ஹேமலதா, சமுதாய அறிவியல் கல்லூரி, வேளாண்மைக் கல்லூரி வளாகம், மதுரை – 625 104.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks