கோடையில் கோழிப்பண்ணைப் பராமரிப்பு!

கோழிப்பண்ணை

திகமான சுற்றுப்புற வெப்பத்தால் ஏற்படும் விளைவுகளை, கோழிப்பண்ணை நிர்வாகம் மற்றும் சரியான தீவன மேலாண்மை மூலம் கட்டுப்படுத்தலாம். அவையாவன: சரியான பொருளைக் கொண்டு கூரையை அமைப்பதன் மூலம், 5-10 டிகிரி செல்சியஸ் வெப்பத்தைக் குறைக்கலாம்.

ஆறு அங்குல அடர்த்தியுள்ள கூரை, கோழிகளுக்கு உகந்த சூழலைக் கொடுக்கிறது. பெரிய பண்ணைகளில் பயன்படும் அலுமினியக் கூரைத் தகடுகள் வெப்பத்தை அதிகமாகத் தாங்கும்.

தரைக்கும் கூரைக்கும் இடையிலான உயரம் போதுமானதாக இருக்க வேண்டும். அதைப்போல, கூரையின் கீழ்ப்பகுதி, சுவரைத் தாண்டி ஒரு மீட்டர் நீட்டிக் கொண்டிருக்க வேண்டும். இதனால், நேரடியாகச் சூரியவொளி பண்ணைக்குள் படுவதையும், மழைநீர் உள்ளே தெறிப்பதையும் தடுக்கலாம்.

அதைப் போல, கூரையின் மேலே இன்னொரு அடுக்கைப் போடுதல், நீர்ப் புகாத வெண்மைச் சாயம் பூசுதல், அலுமினியச் சாயத்தைப் பூசுதல் மூலம், சூரிய ஒளியைப் பிரதிபலிக்கச் செய்யலாம். கூரையின் உட்புறம் கறுப்புச் சாயத்தைப் பூசி, வெப்பத்தை ஈர்க்கச் செய்யலாம்.

வறண்ட பகுதிகளில் கோழிப் பண்ணையின் அமைப்பு, கிழக்கு மேற்காக இருக்க வேண்டும். இதனால், சூரியவொளி அதிகளவில் பண்ணைக்குள் விழுவது தடுக்கப்படும்.

பண்ணையின் அகலம் பத்து மீட்டர் இருக்க வேண்டும். இதைவிட அகலம் கூடினால் காற்றோட்டம் சரியாக இருக்காது. இந்நிலையில் எந்திர முறையில் காற்றோட்டத்தை ஏற்படுத்தலாம்.

குளிர்விப்பான் அல்லது தெளிப்பானை, கூரையின் மேல் பொருத்தி, 10-18 மணி நேரம் இயக்கினால், பண்ணை வெப்பம் குறையும். பண்ணையைச் சுற்றி மரங்களை வளர்த்து நிழலைப் பெறலாம். மேலும், சூறாவளிக் காற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்திப் பண்ணையைக் காக்கலாம். வெப்பத்தைத் தாங்கக் கூடிய கோழிகளை வளர்க்கலாம்.

கோடையில் கோழிகளின் உடலில் வெப்பம் அதிகமாவதைத் தடுக்க, 9 முதல் 18 மணி நேரம் வரையில் தீவனம் அளிப்பதைத் தவிர்க்க வேண்டும். மேலும், தீவனத்தில் உள்ள கார்போ ஹைடிரேட், புரதம் ஆகியவற்றின் அளவைக் குறைத்து, கொழுப்புச் சத்தின் அளவை அதிகப்படுத்த வேண்டும்.

கோழிகள் நெரிசலாக இருப்பதைத் தவிர்க்க, 10 சத அளவில் தளத்தை அதிகப்படுத்த வேண்டும். நனைந்த படுக்கைப் பொருள்கள் அதிக வெப்பத்தை உண்டாக்கும் என்பதால், அந்தப் பொருள்களின் அடர்த்தி, கோடையில் 6 செ.மீ. குறைவாக இருக்க வேண்டும்.


PB_DEVAKI

முனைவர் க.தேவகி, உதவிப் பேராசிரியை, வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading