செய்தி வெளியான இதழ்: 2018 அக்டோபர்.
குளம்புகள் உள்ள எல்லாக் கால்நடைகளையும் தாக்கிப் பெரியளவில் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் கொடிய நோய் கோமாரி. இது, நச்சுயிரிகளால் ஏற்படுகிறது.
நாட்டு மாடுகள், ஜெர்சி, பிரிசியன் போன்ற கலப்பின மாடுகள், எருமைகள், செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள், பன்றிகள், மான்கள், ஒட்டகம் போன்றவற்றை இந்நோய் தாக்கும்.
இந்த நோயை உண்டாக்கும் நச்சுயிரிகள் ஏழு பெரும் பிரிவுகளாக, சுமார் 60 உட்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளன. எவ்வகை நச்சுயிரி தாக்குகிறது என்பதைக் கண்டறிவது சிரமமாக இருப்பதால், நோய் பாதிப்பைக் குறைப்பதிலும் சிரமம் ஏற்படுகிறது.
இந்நோயால் உயிரிழப்பு இல்லையெனினும் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் பொருளாதாரக் காரணிகள் முடக்கப்படுவதால், அந்தக் கால்நடைகள் பயனற்றுப் போகின்றன. கறவை மாடுகளில் ஏற்படும் மடிவீக்கம், பால் உற்பத்திக் குறைவு, கருச்சிதைவு, கன்றுகள் இறப்பு ஆகியவற்றால் பொருளாதார இழப்பு உண்டாகிறது.
இறைச்சிக்கு வளர்க்கப்படும் கால்நடைகளின் வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. கால் கோமாரி, வாய் கோமாரி என்றும் கால் சப்பை, வாய் சப்பை என்றும் இந்நோய் அழைக்கப்படும். இந்த நச்சுயிரிகள் அனைத்துத் தட்பவெப்ப நிலைகளையும் தாங்கி நெடுநாட்கள் வாழும். மழைக் காலத்தில் இக்கிருமிகள் கால்நடைகளைப் பெருமளவில் தாக்கும்.
நோய் பரவும் முறைகள்
காற்றின் மூலம் எளிதில் பரவும். காற்று வீசும் திசையில் சுமார் 300 கிலோ மீட்டர் வரை இந்நோய் பரவும். இந்நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகள் ஓரிடத்தில் இருந்து வேறு இடங்களுக்குச் செல்லும் போது மற்ற கால்நடைகளுக்கும் பரவும்.
நோயுற்ற கால்நடைகளின் உமிழ்நீர், சிறுநீர், சாணம், கழிவுகள் கலந்த தீவனம், நீர், பண்ணைப் பொருள்கள், வேலையாட்கள், அங்குள்ள பறவைகள், விலங்குகள் போன்றவற்றின் மூலமும் இந்நோய் எளிதில் பரவும். ஒருமுறை பாதித்துக் குணமான பசுக்கள், இந்த நச்சுயிரிகளைப் பரப்பும் வாய்ப்புகள் நிறைய உள்ளன.
நோய் அறிகுறிகள்
மழைக் காலத்தில் இந்நோய் கால்நடைகளைத் தாக்கும். தொடக்கத்தில் காய்ச்சல் மிகுதியாக இருக்கும். வாயிலிருந்து சளியைப் போன்ற நுரையுடன் கெட்டியான உமிழ்நீர், கயிற்றைப் போலத் தொங்கிக் கொண்டிருக்கும். நோயுற்ற மாடுகள் தொடர்ந்து வாயைச் சப்பியபடி இருக்கும்.
நாக்கின் மேல்புறம், மேல்வாய், வாயின் உட்புறம் மெல்லிய நீர்க் கோர்த்த கொப்புளங்கள் தென்படும். ஓரிரு நாட்களில் இந்தக் கொப்புளங்கள் உடைந்து விடும். இதனால், மாடுகள் தீவனம் எடுக்கச் சிரமப்படும்.
குளம்புகளுக்கு இடையிலுள்ள தோலிலும், குளம்புகளுக்குச் சற்று மேலேயுள்ள தோலிலும் புண்கள் ஏற்படும். மிகுந்த வலியால், மாடுகள் அடியெடுத்து வைக்க அஞ்சும். கவனிக்காமல் விட்டு விட்டால் நாளடைவில் குளம்புகள் கழன்று விழ நேரிடும்.
பால் மாடுகள் மற்றும் ஆடுகளின் மடியிலும், காம்புகளிலும், கொப்புளங்கள் ஏற்படுவதால், பால் குறைவும், மடிவீக்க நோயும் உண்டாகும். கோமாரி நோய் தாக்கிய மாடுகளின் பாலைக் குடிக்கும் கன்றுகள் தீவிர இதயத்தசை ஒவ்வாமையால் இறந்து விடும்.
கருவுற்ற கால்நடைகளைத் தாக்கினால் கருச்சிதைவு ஏற்படும். கோமாரியில் இருந்து மீண்ட கால்நடைகளுக்கு, இரத்தச்சோகை, உரோமச் சிலிர்ப்பு, மூச்சிரைப்பு, மடிவீக்க நோய், மலட்டுத் தன்மை போன்றவை ஏற்படுவதால், மிகுந்த பொருளாதாரச் சேதம் உண்டாகும். மூச்சிரைப்பு வருவதால் உழவு மாடுகளின் வேலைத் திறன் பாதிக்கும்.
சிகிச்சை முறைகள்
கோமாரி தாக்கிய கால்நடைகளைத் தனியே பிரித்து வைத்து, சிகிச்சை அளிக்க வேண்டும். குளம்புப் புண்களை ஒரு சத பொட்டாசிய பெர்மாங்கனேட் கரைசல் அல்லது இளஞ்சூடான நீரில் சிறிது உப்பைக் கலந்து கழுவ வேண்டும்.
வாயிலுள்ள புண்களில், கிளிசரின் அல்லது போரிக் பொடியை, தேங்காய் எண்ணெய்யில் குழைத்து ஒரு நாளைக்கு 3-4 தடவை இட வேண்டும். புழுக்கள் நிறைந்த புண்களில், கற்பூரத்தைப் பொடித்து வைத்தால் புழுக்கள் இறந்து விடும்.
அல்லது டர்பன்டைன் எண்ணெய்யைத் தடவலாம். பிறகு, இறந்த புழுக்களை நீக்கிவிட்டு, கிருமிநாசினியை இட்டுக் குணப்படுத்த வேண்டும்.
ஒரு லிட்டர் நீருக்கு 40 கிராம் சலவை சோடா வீதம் கலந்து கொட்டிலைக் கழுவினால், நோய்க் கிருமிகள் அழிந்து விடும். கால்நடை மருத்துவரின் அறிவுரைப்படி, வேறு நச்சுயிரிகள் தாக்காமல், தேவையான தடுப்பு மருந்துகளை நோயுற்ற கால்நடைகளுக்கு அளிக்க வேண்டும்.
மூலிகை மருத்துவம்
கோமாரி வாய்ப்புண் சிகிச்சை: இது வாய்வழி மருந்தாகும். இங்கே கூறப்பட்டுள்ள மருந்து ஒரு மாடு, நான்கு ஆடுகளுக்கு ஆனது.
தேவையான பொருள்கள்: சீரகம் 50 கிராம், வெந்தயம் 30 கிராம், மஞ்சள் பொடி 10 கிராம், கருப்பட்டி அதாவது பனை வெல்லம் 20 கிராம், தேங்காய்த் துருவல் ஒரு தேங்காய்.
செய்முறை: சீரகம், வெந்தயம், மஞ்சள், கருப்பட்டி ஆகியவற்றை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் தேங்காய்த் துருவலைக் கலந்து நன்றாகப் பிசைந்து சிறிய உருண்டைகளாகப் பிடித்து மாட்டுக்குக் கொடுக்க வேண்டும். கடைசி உருண்டையை வெண்ணெய் அல்லது நெய்யில் தடவி வாயின் உட்புறத்தில் தடவினால் நோய் விரைவில் குணமாகும்.
முதலுதவிச் சிகிச்சை
ஒரு நாளைக்கு மூன்று வேளையாக, ஐந்து நாட்களுக்கு வாய்வழியாக மூலிகை மருந்தைத் தர வேண்டும். தடுப்பு மருந்தாக, வாய்வழி மருந்தை ஒரு நாளைக்கு ஒருவேளை வீதம், ஐந்து நாட்கள் தர வேண்டும்.
கோமாரி-கால்புண் சிகிச்சை
தேவைப்படும் பொருள்கள்: குப்பைமேனி 100 கிராம், பூண்டு 10 பல், மஞ்சள் 100 கிராம், நல்லெண்ணெய் 250 கிராம்.
சிகிச்சை: முதல் மூன்று பொருள்களை இடித்து நல்லெண்ணெய்யில் கலந்து காய்ச்ச வேண்டும். பாதிக்கப்பட்ட கால்களை உப்பு மற்றும் மஞ்சள் கலந்த நீரில் கழுவி ஈரத்தை, சுத்தமான, காய்ந்த துணியால் ஒற்றி எடுக்க வேண்டும்.
பிறகு, காய்ச்சி ஆற வைத்த மருந்துக் கலவையை, கோமாரி நோயால் பாதிக்கப்பட்ட கால் குளம்புகளில் தினந்தோறும் இரண்டு வேளை இட்டு வந்தால் கால்புண் குணமாகும்.
நோய்த் தடுப்பு முறைகள்
நோய் வராமல் இருக்க, கன்றுகளுக்கு மூன்றாம் மாதத்தில் முதல் கோமாரி நோய்த் தடுப்பூசியைப் போட வேண்டும். அடுத்து, ஆறு மாதத்துக்கு ஒருமுறை கோமாரி நோய்த் தடுப்பூசியைத் தவறாமல் அளிக்க வேண்டும். நோய் ஏற்படும் காலத்துக்கு ஒரு மாதம் முன்பே தடுப்பூசியைப் போட்டுவிட வேண்டும்.
குறிப்பாக, மழைக் காலத்துக்கு முன்பே கறவை மாடுகளுக்குக் கோமாரி நோய்த் தடுப்பூசியை அளிக்க வேண்டும். நோயுற்ற கால்நடைகளைத் தனியே பிரித்து வைத்து, சிகிச்சை செய்ய வேண்டும். நோயுற்ற கால்நடைகளை, ஏரி, குளம் போன்ற பொது இடங்களில் கழுவுதல், நீரைக் குடிக்க விடுதல் கூடாது.
புதிய கால்நடைகளைப் பண்ணைக்குக் கொண்டு வந்தால், அவற்றைப் பண்ணையில் உள்ள கால்நடைகளில் இருந்து 21 நாட்கள் தனியே பிரித்து வைக்க வேண்டும். கோமாரி தாக்கிய பகுதியிலிருந்து கால்நடைகளை வாங்கக் கூடாது.
மேலும், இந்தச் சமயத்தில் மாடுகளைச் சந்தையில் வாங்கவோ விற்கவோ கூடாது. 3-4 சத சோடியம் மற்றும் சோடியம் ஹைடிராக்சைடு, பொட்டாசியம் ஹைடிராக்சைடு கிருமிநாசினி கரைசலை, தரையில் தெளிக்க வேண்டும். ப்ளீச்சிங் பொடியைத் தரையில் தூவியும் இந்தக் கிருமிகளை அழிக்கலாம்.
நோயுற்ற கால்நடைகளின் பாலை, கன்றுகளுக்குத் தரக் கூடாது. மற்ற மாடுகள், பண்ணைக்கு உள்ளே வராமலும், பண்ணை மாடுகள் வெளியே போகாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பண்ணைக்குள் பார்வையாளர்கள் மற்றும் வாகனங்கள் உள்ளே வராமல் கண்காணிக்க வேண்டும். நோய்க் கிருமிகள் தொழுவத்தில் நிலைத்திருக்க வாய்ப்பு உள்ளதால், அவ்வப்போது கிருமிநாசினி மூலம் கொட்டிலைச் சுத்தம் செய்ய வேண்டும். இந்த நோயின் அறிகுறிகள் தென்பட்டால், கால்நடை மருத்துவரை உடனே அணுகி, சிகிச்சை பெற வேண்டும்.
முனைவர் க.தேவகி, முனைவர் க.வேல்முருகன், வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம் – 603 203.
சந்தேகமா? கேளுங்கள்!