கோடை வெப்பத்தில் கோழிகளைப் பராமரிக்கும் முறைகள்!

கோழி hen

செய்தி வெளியான இதழ்: 2014 மே.

கோடை வெப்பத்தில் கோழிகளுக்கு வெப்ப அயர்ச்சி ஏற்பட்டு கோழிகளில் இறப்பு விகிதம் அதிகரிக்கிறது. எனவே, கோழிப் பண்ணையாளர்கள் கோடைக்காலப் பராமரிப்பு முறைகளைப் பற்றிய அறிவியல் உண்மைகளை அறிந்து கொண்டு கோழி வளர்ப்பில் ஈடுபட வேண்டும். இது குறித்து, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் திண்டுக்கல் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் எஸ்.பீர் முகம்மது, உதவிப் பேராசிரியர் முனைவர் ப.சங்கர் ஆகியோர் கூறும் கருத்துகள்:

கோழிகளுக்கு வியர்வைச் சுரப்பிகள் கிடையாது. எனவே, கோழிகள் கோடை வெப்பத்தைத் தணிக்க, சற்றுக் குளிர்ச்சியான குடிநீர்க் குழாய்களுக்கு அருகில் அல்லது குளிர்ச்சியான இடங்களில் குழிகளைத் தோண்டிப் படுத்துக்கொண்டு உடல் வெப்பத்தை தணிக்கிறது.

பண்ணைகளில் உள்ள கோழிகளுக்கு மதியம் மற்றும் மாலை நேரம் என ஒரு நாளைக்கு 3, 4 முறைகள் தண்ணீரைத் துளிகளாகத் தெளிக்கக்கூடிய இயந்திரங்களைக் கொண்டு கோழிகளின் மீது சீராகப் படும்படிச் செய்வதன் மூலம் கோழிகளுக்கு வெப்ப அயர்ச்சி ஏற்படாமல் தடுக்கலாம். பொதுவாகக் கோடைக் காலத்தில் பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளில் தீவனம் உட்கொள்ளும் திறன் குறைந்து, தண்ணீரை உட்கொள்ளும் அளவு அதிகரிக்கும்.

ஆகையால், தீவனத்தை உட்கொள்ளும் அளவை அதிகரிக்க, ஒரு நாளைக்கு 2, 3 முறை, தீவனத்தைக் காலை மற்றும் மாலையில் கிளறி விட வேண்டும். தண்ணீர்த் தொட்டிகளில் இருந்து குழாய்கள் மூலம் வரும் நீரை, கோழிகள் மதிய வேளையில் குடிக்கும் போது குடிநீர் மிகவும் சூடாக இருக்கும். இதனை அருந்தும் கோழிகளின் உடல் வெப்பநிலை அதிகரித்து வெப்ப அயர்ச்சி ஏற்படலாம். எனவே, மதிய நேரத்தில் குழாய்களில் உள்ள நீரை 2, 3 நிமிடங்கள் வெளியே திறந்து விட்டு, தண்ணீர் குளிர்ச்சியாக உள்ளதா என்பதை உறுதி செய்த பிறகு, கோழிகளுக்குத் தண்ணீரைத் திறந்து விட வேண்டும்.

தீவனங்களில் எரிசக்தி அளவைக் குறைத்தும், (மாவுச்சத்து) புரதம், வைட்டமின்கள், ஆன்ட்டி ஆக்சிடென்ட் மற்றும் தாதுப்புகளின் அளவை அதிகரித்தும் கொடுக்க வேண்டும். கோழித் தீவனத்தில் ஆன்ட்டி ஆக்சிடென்ட், வைட்டமின் – ஈ 250 மி.கி./கிலோ, வைட்டமின் – சி 400 மி.கி./கிலோ, எலக்ரோலைட் மற்றும் மெத்தியோனின் போன்ற, வெப்ப அயர்ச்சியைப் போக்கக்கூடிய மருந்துகளைக் கால்நடை மருத்துவரின் பரிந்துரைப்படி வழங்க வேண்டும். ஒரு கிலோ சோடியம் பை கார்பனேட்டை ஒரு டன் கோழித் தீவனத்தில் சேர்ப்பதன் மூலம் முட்டைகள் உடைவது குறையும். கோடையில் கோழிகளின் உடலில் கொழுப்புப் படிவது அதிகரிக்கும். இதனைத் தடுக்க கொளின் குளோரைடை ஒரு டன்னுக்கு 500 கிராம் வீதம் சேர்க்க வேண்டும்.

எரிசக்தியைத் தரும் மாவுப் பொருள்களுக்குப் பதிலாகத் தீவனத்தில், விலங்கின் கொழுப்பு அல்லது தாவர எண்ணெய் மூலம் 0.5 இருந்து 1 சதம் கிடைக்குமாறு முட்டைக்கோழித் தீவனத்திலும், 5 சதம் வரை கறிக்கோழித் தீவனத்திலும் சேர்த்துக் கொள்ளலாம்.

கோடைக்காலத்தில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தீவனம் வழங்கக் கூடாது. அதிகாலை மற்றும் இரவு நேரத்தில் மட்டுமே கோழிகளுக்குத் தீவனம் அளிக்க வேண்டும். கோடைக் காலத்தில் முட்டைக் கோழிகளில் தோல் முட்டைகளின் உற்பத்தியைத் தடுக்க, ஒரு கோழிக்கு 2 கிராம் வீதம் கிளிஞ்சல் தூளைத் தூவ வேண்டும்.
கோழிப் பண்ணையாளர்கள் மதியம் மற்றும் மாலை நேரத்தில் 3 முதல் 5 ம்றை, பண்ணைகளில் உள்ள கோழிகளை நன்கு உற்று நோக்க வேண்டும்.

இதுவரை சொல்லப்பட்ட மேலாண்மை முறைகளைக் கோடைக் காலத்தில் கடைப்பிடித்தால், கோழிகளுக்கு ஏற்படும் வெப்ப அயர்ச்சியைத் தடுத்து உற்பத்தியைப் பெருக்கலாம்.


துரை. சந்தோசு

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading