கோடையில் கோழிகளைப் பராமரிப்பது எப்படி?

கோழி

செய்தி வெளியான இதழ்: 2018 மார்ச்.

ந்திய நாட்டுக் கோழிகள், செந்நிறக் காட்டுக் கோழிகள் வம்சாவளியில் வந்தவை. இன்றைய பண்ணைக் கோழிகள் அனைத்தும் நம் நாட்டுக் கோழியின் பரம்பரையைச் சார்ந்தவையே.

ஆனால், இவற்றை வீரிய இனமாக மேற்கத்திய நாடுகள் விற்பனை செய்து வருகின்றன. மற்ற கால்நடைகளை ஒப்பிடும் போது கோழிகள் தான் தீவனத்தை அதிகளவில் விலங்கினப் புரதமாக மாற்றுகின்றன. கோழி வளர்ப்பு, வேலை வாய்ப்பைப் பெருக்க, புரதப் பற்றாக்குறையைப் போக்க உதவுகிறது.

இந்தியாவில் கோழிப்பண்ணைத் தொழில் ஆண்டுக்கு 8-10 சதவீத வளர்ச்சியைப் பெறுவதாக இக்ரா நிறுவனம் கூறியுள்ளது. கோழிமுட்டை உற்பத்தி 2000-இல் 3,000 கோடியாக இருந்தது. இது 2012-இல் 6,600 கோடியாக உயர்ந்து உள்ளது.

கோழி இறைச்சி உற்பத்தி 2000-இல் பத்து இலட்சம் டன்னாக இருந்தது. 2012-இல் 34 இலட்சம் டன்னாக உயர்ந்து சாதனை படைத்து உள்ளது. உலகிலேயே முட்டை உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்துக்கு வந்தும், ஒருவர் சாப்பிடும் முட்டையின் அளவு 28லிருந்து 55ஆக மட்டுமே கூடியுள்ளது. ஆனால், நாம் சாப்பிட வேண்டியது ஒரு நாளைக்கு அரை முட்டை வீதம் ஆண்டுக்கு 180 முட்டைகள்.

தமிழ்நாட்டில் கோழிப்பண்ணைத் தொழிலில், 1970 ஆம் ஆண்டு வீரிய இனக் கோழிகள் வந்ததில் இருந்து வெண்மைப் புரட்சி உருவானது. கோழிப் பண்ணைத் தொழில் நாள்தோறும் வளர்ந்து வேகமாக முன்னேறி வருகிறது.

இந்நிலையில், பல நோய்களால், கோடை வெப்பத்தால் பாதிக்கப்படும் கோழிகள், உற்பத்தித் திறனை இழப்பதால், பொருளாதார இழப்பு அதிகளவில் ஏற்படுகிறது.

தமிழ்நாட்டில் கோடைக்காலம் என்பது, மார்ச் மாதம் கடைசி வாரம் தொடங்கி ஜூன் மாதத்தில் முடிவடையும். கோழிகள் 23 டிகிரி செல்சியசில் இருந்து 29 டிகிரி செல்சியஸ் வரையான வெப்பத்தை மட்டுமே தாங்கும்.

பண்ணையின் வெப்பநிலை 32 டிகிரி செல்சியசுக்கு மேல் கூடும் போது, தீவனத்தை உண்பது குறைந்து விடும். இளம் கோழிகளிலும், இறைச்சிக் கோழிகளிலும் வளர்ச்சி பாதிக்கப்படும். முட்டை உற்பத்தியும் தரமும் குறைந்து விடும். வெப்பநிலை 38 டிகிரி செல்சியசுக்கு மேல் கூடினால், கோழிகள் இறந்து போகும் வாய்ப்பு அதிகம்.

வெப்ப அழுத்தம்

சுற்றுப்புற வெப்பநிலை மிகும் போதும், வெப்பநிலை மிகுவதும் குறைவதுமாக இருக்கும் போதும், வெப்ப அழுத்தம் ஏற்படுகிறது. வட இந்தியாவில் வெப்பத் தாக்கம் காரணமாக, வயதானவர்கள் பலர் இறந்து விடுவதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

அதைப் போலவே இளம் கோழிகளை விட, வயதான கோழிகள் தான் வெப்பத் தாக்கத்தால் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றன. மனிதர்களுக்கு வியர்வைச் சுரப்பிகள் இருப்பதைப் போல, கோழிகளுக்கு வியர்வைச் சுரப்பிகள் கிடையாது.

எனவே, கோழிகள் வெப்பத்தை வெளியேற்ற, வாயைத் திறந்து திறந்து மூடி மூச்சு விடும். இதனால், இரத்தத்தில் உள்ள பை கார்பனேட் அதிகமாக வெளியேறுவதால் கார அமிலத் தன்மை மிகவும் பாதிக்கப்படும்.

மேலும், மின் அயனி என்னும் எலக்டிரோலைட் இழப்பும், சோடியம் பொட்டாசியம் பை கார்பனேட் இழப்பும் ஏற்படும். இதனால், நோய் எதிர்ப்பாற்றல் குறைவதோடு, நோய்த் தாக்கம் அதிகமாகி விடுகிறது.

வெப்ப அயர்ச்சிக்கான காரணங்கள்

கோழிகளுக்குத் தேவையான அளவில் குடிநீரை வழங்காமல் குறைந்தளவில் வழங்குவது, கோழி வீட்டின் உயரம் குறைவாக இருப்பது, பண்ணையைச் சுற்றிலும் நிழல் தரும் மரங்கள் இல்லாத நிலை, போதுமான காற்றோட்டம் கிடைக்காமல் போவது, பண்ணையில அதிக எண்ணிக்கையில் கோழிகளை வளர்ப்பது ஆகியவற்றால், கோழிகள் வெப்ப அயர்ச்சிக்கு உள்ளாகி அதிகளவில் இறந்து விடுகின்றன.

கோழிகளில் வெப்ப அழுத்த அறிகுறிகள்

அதிகமாகவும், வேகமாகவும் மூச்சு விடுவதால், நீரை நிறையக் குடித்தல். இறக்கைகளைத் தளர்வாகப் படரச் செய்தல். தலை மற்றும் கொண்டையை நீரில் நனைத்தல், குறைவாகத் தீவனம் எடுத்தல். கழிச்சல். வளர்ச்சியும், உடல் எடையும் குறைதல்.

முட்டைக் கோழிகளில் 10 சதம் வரை முட்டை உற்பத்திக் குறைதல். மேலும், தரம் குறைந்த முட்டைகள், சிறிய முட்டைகள், முட்டை ஓடு குறை மற்றும் தோல் முட்டை இடுதல் ஆகியன வெப்பத் தாக்க அறிகுறிகள் ஆகும்.

கோடை வெப்பத்தைச் சமாளிக்கும் விதம்

கோழிப் பண்ணையில், குடிநீர், தீவன மேலாண்மையில், நோய்த்தடுப்பு முறைகளில் கவனம் செலுத்த வேண்டும். கோழிப் பண்ணையை மேடான, காற்றோட்டமான, நல்ல நிழல் தரும் மரங்கள் இருக்கும் இடத்தில் அமைக்க வேண்டும்.

பண்ணையின் பக்கச்சுவர் 1-1.5 அடிக்குமேல் இருக்கக் கூடாது. இதன் மீது கம்பிவலை 6-7 அடி இருக்கும்படி அமைக்க வேண்டும். பண்ணையைக் கிழக்கு மேற்காகக் கட்ட வேண்டும். அப்போது தான் வெப்பத் தாக்கம் ஏற்படாமல் இருக்கும்.

கம்பி வலையில் உள்ள ஒட்டடை மற்றும் தூசியை அடிக்கடி நீக்கிச் சுத்தமாக வைத்துக் கொள்வதால் 50 சத அளவில் காற்றோட்டம் அதிகமாகும்.

கோழிப் பண்ணைக் கூரை ஆஸ்பெஸ்டாஸ் தகடாக இருந்தால், வெளிப்புறம் வெள்ளைச் சுண்ணாம்பால் பூச வேண்டும். ஆஸ்பெஸ்டாஸ், மங்களூர் ஓடு, தகரங்களால் அமைக்கப்பட்ட கொட்டிலாக இருந்தால், அதன் மேல் தென்னங் கீற்று, பனையோலை, விழல் புல், வைக்கோல் ஆகியவற்றை வேய்ந்து வெப்பத்தைத் தடுக்கலாம்.

கூரைமீது ஒரு நாளைக்கு 3-4 தடவை நீரைத் தெளிக்க வேண்டும். பண்ணை அகலம் 30 அடிக்கு மேல் இருக்கக் கூடாது. அப்படியிருந்தால் பண்ணையின் உட்புறக் காற்றோட்டம் தடைபட்டு, வெப்பத் தாக்கம் அதிகமாகும்.

எனவே, 22-25 அடி அகலத்தில் பண்ணையை அமைப்பதே சிறந்தது. கோழிகளின் எண்ணிக்கையை வைத்து, பண்ணை நீளத்தை அமைத்துக் கொள்ளலாம்.

கிழக்கிலும் மேற்கிலும் நெடுஞ்சுவரைக் கட்டுவதால், வெய்யில் நேரடியாகப் பண்ணைக்குள் பரவுவதைத் தடுத்து விடலாம். பண்ணையின் உச்சி உயரம் 12-15 அடி இருக்க வேண்டும். அப்போது தான் வெளிச்சமும், காற்றோட்டமும் அதிகமாகி வெப்பத் தாக்கம் குறையும்.

கூரையின் வெளிப்புறம், கம்பி வலையின் இணைப்பில் இருந்து, 2.5-3 அடி வரை வெளியில் நீட்டி இருக்க வேண்டும். எப்போதும் வெளிப்புறம் திறக்கும்படி கதவுகளை அமைக்க வேண்டும். ஒரு பண்ணைக்கும் அடுத்த பண்ணைக்கும் இடையே 100 முதல் 300 அடி இடைவெளி இருக்க வேண்டும்.

கம்பிவலை உயரத்தில் அகலவாக்கில் குறுக்கே மூங்கிலைக் கட்டி அதன் மேல் வைக்கோலைப் பரப்பினால் வெப்பத் தாக்கம் குறையும். கொடிகளையும் கூரையின் மேல் படர விடலாம்.

கம்பி வலை மீது, பழைய கோணிப் பைகளை நீரில் நனைத்துக் கட்டலாம். இறைச்சிக் கோழிப் பண்ணையில் பழைய ஆழ்கூளத்தை இரண்டு அங்குலம் வெட்டி எடுத்து விட்டு, புதிய ஆழ்கூளத்தைப் போட வேண்டும். பண்ணையில் மின் விசிறிகளை வைத்தும் வெப்பத்தைக் குறைக்கலாம். பண்ணையைச் சுற்றிலும் ஐந்தடிப் பரப்பில் நீரைத் தெளிக்க வேண்டும்.

குடிநீரின் அவசியம்

கோழிகளுக்குச் சுத்தமான குடிநீரை மட்டுமே வழங்க வேண்டும். குடிநீரில் பிளீச்சிங் பொடியைக் கலந்து கொடுத்தால், நீரின் மூலம் ஏற்படும் நோய்களைத் தடுக்கலாம். குடிநீர்த் தொட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். சிறிய பண்ணையாக இருந்தால் மண் சட்டிகளில் குடிநீரை வைத்து வெப்பத் தாக்கத்தைக் குறைக்கலாம்.

ஐஸ் கட்டிகளைக் குடிநீர்த் தொட்டிகளில் போட்டு வைக்க வேண்டும். பெரிய பண்ணைகளில் நீர்த் தெளிப்பான்களை அமைக்கலாம். வெய்யில் சூட்டைத் தணிக்க, இளநீர், தர்பூசணி, முலாம் பழம், கம்மங்கூழ், நுங்கு போன்றவற்றை நாம் சாப்பிடுவதைப் போல,

கோழிகளில் வெப்ப அயர்வைத் தடுக்க, எலக்டிரோலைட் மற்றும் வைட்டமின் சத்துகளைக் குடிநீரில் கலந்து கொடுக்க வேண்டும். குளுக்கோஸ் பொடியை, 1 லிட்டர் நீருக்கு 10 கிராம் வீதம் குடிநீரில் கலந்து தர வேண்டும்.

நூறு கோழிகளுக்கு ஒரு கிராம் வைட்டமின் சி, வைட்டமின்கள் ஏ1, டி3, ஈ, கே 4 மில்லி மற்றும் பி காம்ப்ளக்ஸ் டானிக் மருந்தை, ஒரு லிட்டர் நீருக்கு 20 மி.லி. வீதம் கலந்து தர வேண்டும். அதிக வெப்பத்தில் மூச்சுவிடத் திணறும் கோழிகள், அடிக்கடி அலகைத் திறந்து மூடும். கழுத்தை நீட்டிக் கொண்டு வாய் வழியே மூச்சு விடும்.

இந்த நேரங்களில் குளுக்கோசை நீரில் கலந்து தர வேண்டும். மிகவும் தளர்ந்த கோழிகளைத் தனியாகப் பிரித்து, குளிர்ந்த நீருள்ள தொட்டியில் கழுத்து வரை முக்கியெடுக்க வேண்டும். நாட்டுக் கோழிகள் வாயைத் திறந்து மூச்சு விடும் போது, வாய்க்கால் ஓரமாகவும், மர நிழலிலும் அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொள்ளும்.

வாயைத் திறந்து மூச்சை விடும் போது, கார்பன் டை ஆக்சைடு அதிகளவில் வெளியேறி விடும். இதனால், முட்டை ஓடு மெல்லியதாக இருக்கும். நீரில் சமையல் சோடாவைக் கலந்து கொடுத்தால், முட்டை ஓடுகளின் தரம் நன்றாக இருக்கும்

தீவன மேலாண்மை

கோழிகள் கோடையில் குறைவாகவே சாப்பிடும். எனவே, வெப்பம் அதிகமாக இருந்தால் கோழிகளுக்குத் தீவனம் தரக் கூடாது. அதிகாலை, அந்திசாயும் போது மற்றும் இரவில் விளக்கைப் போட்டு, தீவனத்தை இட வேண்டும். ஒரு நாளில் குறைந்தது 5-6 முறை தீவனம் வழங்க வேண்டும்.

வெப்ப அழுத்தத்தைக் குறைக்க, தீவனத்தில் சோடியம் பை கார்பனேட் என்னும் சமையல் சோடா, எலக்டிரோலைட் வைட்டமின்கள் ஏ, ஈ, கே, பி2, தாதுப்புகள் மற்றும் அமினோ அமிலங்கள், மெதியோனின், லைசின் ஆகியவற்றை 10-15 சதவீத அளவில் கூடுதலாகத் தீவனத்தில் கலந்து இட வேண்டும்.

வைட்டமின் சி-யை, தீவனத்தில் கலந்து தந்தால், வெப்ப அழுத்தம் குறைவதோடு, நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வைட்டமின் டி3-யைக் கொடுத்தால் முட்டை ஓட்டின் தரம் நன்றாக இருக்கும்.

கோழிகள் விரும்பி உண்ணும் வகையில், தீவனச் சுவையைக் கூட்ட, மொலாசஸ் என்னும் கரும்புச் சர்க்கரைப் பாகைச் சேர்த்துத் தர வேண்டும். தீவனத்தில், சிறிது நீரைச் சேர்த்துப் பிசைந்து தந்தாலும் கோழிகள் விரும்பி உண்ணும்.

நோய்த்தடுப்பு மேலாண்மை

கோழிகளில் வெப்பத் தாக்கம் ஏற்படுவதால், மைக்கோ பிளாஸ்மோசிஸ், வெள்ளைக் கழிச்சல் நோய், சிறு மூச்சுக்குழல் நோய், மேல் மூச்சுக்குழல் நோய், இரத்தக் கழிச்சல் போன்றவை ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு.

ஆகவே, கோடைக்காலம் தொடங்கு முன்பே, நோய் எதிர் இயக்க அளவைச் சரி பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பூசி மற்றும் குடற்புழு நீக்க மருந்துகளை அவ்வப்போது தவறாமல் கொடுக்க வேண்டும். உயிரியல் பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடித்தால், நோய் வராமல் தடுக்க முடியும்.


கோழி Dr.Jegath Narayanan e1612953778555

டாக்டர் ஏ.ஆர்.ஜெகத் நாராயணன், மேனாள் மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை, சேலம் – 636 008.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading