My page - topic 1, topic 2, topic 3

கிடேரிகளில் இனப்பெருக்க மேலாண்மை!

கிடேரி

விவசாயமும் விவசாயிகளின் வாழ்வும் மேம்படத் துணை நிற்பவை கால்நடைகள். ஆடு, மாடு என விவசாயப் பணிகளோடு இணைந்துள்ள இந்தக் கால்நடைகளை, புதுப்புது நோய்கள் தாக்குவது, சரியான நேரத்தில் அவற்றுக்குச் சிகிச்சையளிக்க முடியாமல் போவது, சினைப் பிடிப்பில் சிக்கல் ஏற்படுவது போன்றவற்றால், விவசாயிகள் பொருளாதார இழப்பைச் சந்திக்க நேர்கிறது. இவ்வகையில், கிடேரிகளில் இனப்பெருக்கம் சிறப்பாக நடக்கத் தேவையான செயல் முறைகள் குறித்து இங்கே பார்க்கலாம்.

குடற்புழு நீக்கம்

இன்றைய கன்றே நாளைய பசு. எனவே, கன்று பிறந்த 17 ஆம் நாளில் இருந்து ஒரு வாரத்தில் குடற்புழு நீக்க மருந்தை அளிக்க வேண்டும். முதல் மூன்று மாதத்துக்கு ஒருமுறை, சுழற்சி முறையில் குடற்புழு நீக்க மருந்தைக் கொடுக்க வேண்டும்.

ஆல்பென்டசோல், ஃபென்பென்ட்சோல், லீவாமிசோல் ஐவர்மெக்டின் போன்ற குடற்புழு நீக்க மருந்துகளை, கால்நடை மருத்துவரின் மேற்பார்வையில் அளிக்க வேண்டும்.

தீவனம்

கிடேரிகளுக்குத் தரப்படும் தீவனம், சக்தி, புரதம், கனிமம் மற்றும் உயிர்ச் சத்துகள் கலந்த சரிவிகிதத் தீவனமாக இருக்க வேண்டும். இதனால், கிடேரிகளின் கருவுறும் தன்மை, சினைக்காலம், ஈற்றுக்காலம் சிறப்பாக அமையும். எனவே, நல்ல கன்றையும் தரமான பால் உற்பத்தியையும் பெற முடியும்.

இளங்கன்று நிலையில் இருந்தே சரிவிகிதத் தீவனத்தை அளித்தால் தான், சரியான வயதில் 230-250 கிலோ எடை மற்றும் இனப்பெருக்கத் திறனுள்ள கிடேரியாக உருவாகும்.

கிடேரிகளுக்குத் தினமும் 25 கிலோ பசுந்தீவனம், 3 கிலோ அடர்தீவனம், 5 கிலோ உலர்தீவனம் வீதம் கொடுக்க வேண்டும். கருவுறும் தன்மையும், ஈனும் விகிதமும் அதிகரிக்க, காளை மற்றும் கறவை மாடுகளுக்கும் முறையான தீவனத்தை அளித்து நோயின்றிப் பராமரிக்க வேண்டும்.

தாதுப்புகள் மற்றும் உயிர்ச் சத்துகளின் அவசியம்

கிடேரிகளின் உடல் வளர்ச்சி, கருத்தரிப்பு, பராமரிப்பு மற்றும் உற்பத்தியில் தாதுப்புகள் பெரும்பங்கு வகிக்கின்றன. கால்நடைத் தீவனத்தில் இவற்றின் தேவை குறைந்த அளவு தான்.

ஆனாலும், இவை அறவே இல்லா விட்டால் அல்லது தேவைக்குக் குறைவாக இருந்தால், அந்தக் குறையின் அறிகுறிகள் உடலில் உண்டாகும். எனவே, தீவனத்தில் தாதுப்புகளைச் சேர்ப்பதன் மூலம் இதைச் சரி செய்யலாம். இதைச் சரி செய்யா விட்டால் நோயாக மாறும் சூழல் ஏற்படும்.

இந்தத் தாதுப்புகளை, அவசியமான தாதுப்புகள். அவசியமற்ற தாதுப்புகள் என இரு வகையாகப் பிரிக்கலாம். அவசியமான தாதுப்புகளைக் கால்நடைகளுக்குத் தர வேண்டிய அளவைப் பொறுத்து, மிகுதியாகத் தேவைப்படும் தாதுப்புகள், குறைவாகத் தேவைப்படும் தாதுப்புகள் எனவும் பிரிக்கலாம்.

மிகுதியாகத் தேவைப்படும் தாதுப்புகளில், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், சோடியம், குளோரின், பொட்டாசியம், கந்தகம் ஆகியன அடங்கும். குறைவாகத் தேவைப்படும் தாதுப்புகளில், தாமிரம், இரும்பு, கோபால்ட், மாங்கனீசு, அயோடின், துத்தநாகம் ஆகியன அடங்கும்.

இத்தகைய தாதுப்புக் கலவையை, தினமும் 40 கிராம் வீதம் கிடேரிகளுக்குக் கொடுத்து வந்தால், சத்துக் குறைகள் நீங்கிச் சிறப்பாகச் சினைப் பிடிக்கும்.

எனவே, கால்நடைப் பல்கலைக் கழக ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையங்களில் கிடைக்கும் தனுவாசு ஸ்மார்ட் தாதுப்புக் கலவையை வாங்கி, அதிலுள்ள விவரங்கள் மற்றும் வல்லுநரின் ஆலோசனைப்படி, கால்நடைத் தீவனத்தில் சேர்த்துக் கொடுத்தால், தரமான கால்நடைகள் மற்றும் அவற்றின் மூலம் அதிக உற்பத்தியைப் பெற முடியும்.

சினைப் பிடிக்காமல் போவது ஏன்?

கிடேரிகள் சினைப் பிடிக்காமல் போவதற்கு, சத்துக்குறை, தொற்று நோய், பிறவிக்குறை, பாராமரிப்புக் குறை, கருமுட்டை வெளியாவதில் நிகழும் குறை, ஹார்மோன் குறை போன்ற பல காரணங்கள் உள்ளன. எனவே, இவற்றை யெல்லாம் அறிந்து சரிவரப் பராமரித்தால், நல்ல முறையில் கிடேரிகள் சினையாகும்.

மூலிகை மருத்துவம்

கால்நடை மருத்துவத்தில் பலவகைத் தாவரம் மற்றும் தாவரம் சார்ந்த தயாரிப்புகள், நோய்ச் சிகிச்சையில் பயன்படுகின்றன. பக்கவிளைவு இல்லாததால், மூலிகை மருத்துவம் பாதுகாப்பு மிக்கதாகக் கருதப்படுகிறது. சினைப்பருவ அறிகுறிகள் தெரிந்த இரண்டாம் நாளில் இருந்து மூலிகைச் சிகிச்சையைத் தொடங்க வேண்டும்.

கிடேரிக்குத் தினமும் ஒரு முள்ளங்கி வீதம் ஐந்து நாட்களுக்குக் கொடுக்க வேண்டும். அடுத்த நான்கு நாட்களுக்குத் தினமும் ஒரு சோற்றுக் கற்றாழை மடல் வீதம் எடுத்து, சிறிய துண்டுகளாக நறுக்கி உண்ணச் செய்ய வேண்டும். அடுத்த நான்கு நாட்களுக்குத் தினமும் நான்கு கைப்பிடி வீதம் முருங்கைக் கீரையை உண்ணச் செய்ய வேண்டும்.

அடுத்த நான்கு நாட்களுக்குத் தினமும் நான்கு கைப்பிடி வீதம் பிரண்டைத் தண்டை எடுத்து உண்ண வைக்க வேண்டும். அடுத்த நான்கு நாட்களுக்குத் தினமும் நான்கு கைப்பிடி வீதம் கறிவேப்பிலையை எடுத்து மஞ்சளுடன் சேர்த்து அரைத்து உண்ணச் செய்ய வேண்டும்.

இத்தகைய உத்திகளைக் கையாண்டு, கன்றுகளைக் கிடேரிகளாக வளர்த்தால், அவை, தக்க காலத்தில் சிறப்பாகக் கருவுற்று, தரமான உற்பத்தியைத் தரும்.


மரு.ச.இளவரசன், தா.லூர்துரீத்தா, அ.ஷீபா, இரா.ஜோதிப்பிரியா, மண்டல ஆராய்ச்சி மற்றும் கல்வி மையம், புதுக்கோட்டை – 622 004.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks