கோடைக் காலத்தில் கால்நடைகள் பராமரிப்பு!

கால்நடை

செய்தி வெளியான இதழ்: 2018 ஜூன்.

மிழ்நாட்டில் கோடை வெய்யிலால் ஏற்படும் வெப்ப நிலை கூடுதலாக உள்ளது. வறட்சி காரணமாக விவசாயம் செய்ய முடியாமலும், கால்நடைகளை வளர்க்க முடியாமலும், விவசாயிகள் தவித்து வருகின்றனர். இந்த வெய்யில் காலத்தில் கால்நடைகளைப் பக்குவமாகப் பாதுகாக்க வேண்டும்.

கால்நடை – கறவை மாடுகள் பராமரிப்பு

கோடை வெப்பம் கால்நடைகளில் வெப்ப அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதனால், அவற்றின் உடல் வெப்பநிலை கூடுகிறது. எனவே, மாடுகளின் உண்ணும் திறன் குறைந்து, பாலுற்பத்தி, இனப்பெருக்கத் திறன், உடல் வளர்ச்சி ஆகியன பாதிக்கின்றன.

இவற்றைத் தவிர்க்க, சுற்றுச்சூழலில் மாற்றங்களை உண்டாக்க வேண்டும். உயர்தர உணவுகளை அளிக்க வேண்டும். நோய்ப் பராமரிப்பு முறைகளைக் கையாள வேண்டும்.

சுற்றுச்சூழலில் மாற்றங்கள்

மாட்டுக் கொட்டகையின் நீளவாட்டம் கிழக்கு மேற்கில் அமைய வேண்டும். இதனால், சூரியவொளி நேரடியாகக் கொட்டகைக்குள் விழுவதையும், உட்புறக் காற்றின் வெப்ப நிலையையும் குறைக்கலாம். காற்றோட்டம் நன்கு கிடைக்கும் வகையில், கொட்டகையை, வீடுகளில் இருந்து தள்ளி அமைக்க வேண்டும்.

கொட்டகைக் கூரை, தென்னை மற்றும் பனை ஓலைகளில் இருத்தல் வேண்டும். ஆஸ்பெஸ்டாஸ் கூரையாக இருந்தால், இதன் மேல் வைக்கோல், இலைதழை, கீற்றுகள் போன்றவற்றைப் பரப்பி விடலாம்.

மேலும், இதன் மீது காலை, மாலையில் நீரைத் தெளிக்க வேண்டும். கொட்டகையின் பக்கவாட்டில் ஈரமான சாக்குகளைத் தொங்கவிட வேண்டும். கொட்டகையைச் சுற்றி மரங்கள் இருந்தால் வெப்பம் குறையும். கூரையின் மேல் சுண்ணாம்பைப் பூசியும், கொட்டகையின் உட்புற வெப்பத்தைக் குறைக்கலாம்.

மாடுகளின் மேய்ச்சல் நேரத்தை, காலை பத்து மணி வரையிலும், மாலை ஐந்து மணிக்கு மேலும் என மாற்றி அமைக்கலாம். இரவில் கூட மாடுகளை மேய விடலாம். மாடுகளை இரண்டு நேரம் குளிப்பாட்டலாம்.

அருகில் நீர் நிலைகள் இருந்தால், அங்கே எருமை மாடுகளைப் படுக்க விடலாம். காற்றாடியை ஓடவிட்டு, குளித்த மாடுகளின் ஈரத்தை உலர்த்துவதன் மூலம், அவற்றின் உடல் வெப்பத்தைக் குறைக்கலாம்.

தீனி மூலம் வெப்பத்தைக் குறைத்தல்

கோடையில் கால்நடை உணவு, அதிக எரிசக்தியும் புரதமும் உள்ளதாக இருக்க வேண்டும். ஏனெனில், கோடையில் உண்ணுவது குறைந்து நீர் அருந்துவது அதிகமாகும். வெப்ப அயர்ச்சியால் உண்ணும் திறன் 8-12 சதம் குறைகிறது.

இதனால் கொழுப்பு அமில உற்பத்திக் குறைய, பால் உற்பத்தியும் குறைகிறது. இந்நிலையைத் தவிர்க்க, தானிய வகைகளைக் கூடுதலாகவும், பயறு, புல் வகைகளைக் குறைவாகவும் கொடுக்க வேண்டும். பச்சைப்புல் வகைகளை நிறையக் கொடுக்க வேண்டும்.

கோடையில் அடர் தீவனத்தைக் கொடுத்தால் கால்நடைகளின் உற்பத்தித் திறன் பாதிக்காமல் இருக்கும். கறவை மாடுகளுக்கு ஒரு லிட்டர் பாலுக்கு 400 கிராம் வீதம், சினை மாடுகளுக்கு 1.5 கிலோ வீதம் அடர் தீவனத்தைக் கொடுக்க வேண்டும்.

கோடையில் பசுந்தீவனத் தட்டுப்பாட்டைப் போக்க, மூன்று மாதங்களுக்கு முன்பே ஊறுகாய்ப் புல்லைத் தயாரித்து வைத்திருந்து கொடுக்கலாம்.

தேவைக்கு ஏற்ப ஒரு குழியை எடுத்து, அதில் கோ.4, கோ.5 போன்ற புல் வகைகளைச் சிறிய துண்டுகளாக நறுக்கிப் போட வேண்டும். பிறகு, அதன் மேல் 2:1 வீதம், வெல்லம் மற்றும் உப்புக் கரைசலைத் தெளித்து, காற்றுப் புகாமல் மூடி விட்டால், 70 நாட்களில் சத்தான ஊறுகாய்ப் புல் தயாராகி விடும்.

குடிநீர்ப் பராமரிப்பு

சுத்தமான மற்றும் குளிர்ந்த குடிநீரைக் கொடுக்க வேண்டும். இதில், சத்து மாத்திரை அல்லது வைட்டமின் கலவையைக் கலந்து கொடுத்தால் வெப்ப அயர்ச்சி குறையும். குடிநீரின் வெப்பநிலை, கால்நடைகளின் உடல் வெப்ப நிலையை விடக் குறைவாக இருக்க வேண்டும்.

இதற்குக் குடிநீர்த் தொட்டிகளில் பனிக்கட்டிகளைப் போட்டு வைக்கலாம். ஒரு நாளில் 4-5 முறை குடிநீரைக் கொடுக்க வேண்டும். குடிநீர்த் தொட்டி நிழலில் இருக்க வேண்டும்.

நோய்களில் இருந்து காத்தல்

கோடையில் பால் மாடுகளை மடிநோய் தாக்கும் வாய்ப்பு நிறைய உண்டு. அதனால் கொட்டகையின் தரை, மாட்டின் மடி மற்றும் பின் பகுதிகளை ஒரு சத பொட்டாசியம் பர்மாங்கனேட் கரைசலைக் கொண்டு தினமும் சுத்தம் செய்ய வேண்டும்.

கோடையில் பசுக்களில் 20-30 சத அளவில் இனவிருத்தித் திறன் பாதிக்கும். எருமைகளில் சினைக்கால அறிகுறிகள் முழுமையாகத் தெரியாது. நோய்கள் மற்றும் ஒட்டுண்ணிகளால் பாதிக்கப்பட்டு உள்ள மாடுகள், கோடையில் மேலும் பாதிக்கும். இவற்றில் இருந்து கால்நடைகளைப் பாதுகாக்க முறையான மருத்துவர் மூலம் சிகிச்சையளிக்க வேண்டும்.

கோடையில் ஆடுகள் பராமரிப்பு

கறவை மாடுகளைப் போலவே ஆடுகளுக்கும் கொட்டகை இருக்க வேண்டும். குளிப்பாட்டுதல், காற்றாடியைப் பயன்படுத்துதல், மேய்ச்சல் நேரத்தை மாற்றுதல், இரவு மேய்ச்சலுக்கு அனுப்புதல், நல்ல தீவனங்களை அளித்தல், குளிர்ந்த குடிநீரைத் தருதல் போன்ற முறைகளைக் கையாள வேண்டும்.

சிறிய இடத்தில் நிறைய ஆடுகளை அடைக்கக் கூடாது. அடைத்தால் வெப்ப அயர்ச்சி ஏற்படும். செம்மறி ஆடுகளில் முடி வெட்டுவதைத் தவிர்க்க வேண்டும். கோடையில் ஆடுகளின் வளர்ச்சியும் இனவிருத்தித் திறனும் பாதிக்கும். எனவே, ஆடுகளை வெப்ப அயர்ச்சியில் இருந்து பாதுகாக்க வேண்டும்.

கோடையில் கோழிகள் பராமரிப்பு

சுற்றுப்புற வெப்பநிலை கூடக்கூட, கோழிகள் பல மாற்றங்களுக்கு உள்ளாகும். நீரை அருந்தும் அளவு, மூச்சு விடும் அளவு, உடல் வெப்பம் ஆகியன கூடும். இதனால், இரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, உண்ணும் திறன், முட்டை உற்பத்தி, முட்டை எடை, உள்தரம் ஆகியவற்றில் பாதிப்புகள் உண்டாகும்.

எனவே, கோழிக் கொட்டகையின் நீளவாட்டம் கிழக்கு மேற்கில் அமைய வேண்டும். கொட்டகையில் காற்று நன்கு கிடைக்க வேண்டும். இரண்டு கொட்டகைகளுக்கு இடையே பத்து மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். கொட்டகையைச் சுற்றி மரங்கள் இருக்க வேண்டும்.

பனையோலை, தென்னங்கீற்று, வைக்கோலைக் கூரையில் பரப்பி விடுவது நல்லது. கூரையில் நீரைத் தெளித்து விடலாம். சுண்ணாம்பைப் பூசி விடலாம். கொட்டகையின் பக்கவாட்டில் சணல் கோணிகளைத் தொங்க விட்டு நீரைத் தெளித்து விட வேண்டும்.

கோழிகளுக்குக் கூடுதலான இடவசதியை அளிக்க வேண்டும். குளிர்ந்த நீரைக் குடிநீராக ஒரு நாளைக்கு 4-5 முறை கொடுக்க வேண்டும். அதிகாலையிலும் மாலையிலும் தீவனத்தை அளிக்க வேண்டும். கோடையில் குச்சித் தீவனத்தைத் தருவது நல்லது.

இப்படியெல்லாம் செய்தால், கால்நடைகளை, கோடைக்கால வெப்பத்தில் இருந்து காத்து, உற்பத்தித் திறனைக் கூட்டிப் பயனடையலாம்.


PB_DEVAKI

முனைவர் க.தேவகி, முனைவர் க.வேல்முருகன், வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம் – 603 203.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading