My page - topic 1, topic 2, topic 3

கால்நடைகளில் ஏற்படும் வயிற்று உப்புசம்!

கால்நடை

செய்தி வெளியான இதழ்: 2018 ஆகஸ்ட்.

டு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள், கிடைக்கும் தீவனத்தை அரை குறையாக மென்று வயிற்றுக்குள் தள்ளிவிட்டு, பிறகு அசை போட்டுச் செரிக்கச் செய்யும் குணமுள்ளவை.

இப்படி வயிற்றில் போகும் தீவனத்தில் உள்ள புரதம், அங்குள்ள பாக்டீரியாக்களுடன் சேர்ந்து செரிக்காமல் போனால் வாயு உற்பத்தியாகும். இதனால், கால்நடைகளின் வயிறு ஊதிப் பெருக்கும்.

இதுவே வயிற்று உப்புசம் ஆகும். இந்த வாயு பெருகுவதால் கால்நடைகளில் மூச்சுத் திணறல் உண்டாகும். சில நேரங்களில் கால்நடைகள் இறக்க நேரிடும்.

எனவே, வயிற்று உப்புசம் மிகவும் ஆபத்தான நோய். உணவுக் குழாயில் ஏற்படும் அடைப்பு, சில சமயங்களில் வயிற்று உப்புசத்தை ஏற்படுத்தும். உணவுக் குழாயில் அடைத்துக் கொள்ளும் பொருள்கள் மற்றும் அதிகமாக வளர்ந்த நிணநீர்க் கட்டிகளால் வயிற்றின் அசைவு பாதிக்கப்படும்.

சில நேரங்களில் அமிலச் சுரப்பு மிகுந்து விட்டாலும் வயிற்று உப்புசம் உண்டாகும். வயிற்றைச் சுற்றியுள்ள வேகஸ் என்னும் நரம்புகள் செயல்படாமல் போனாலும், வாயு வெளியேறும் தன்மை குறைந்து உப்புசம் ஏற்படும்.

தழைச்சத்து நிறைந்த பசுந்தீவனத்தை உண்ணும் கால்நடைகளுக்கு உப்புசம் ஏற்படும். வெங்காயம், முட்டைக்கோசு, காரட் இலைகளை வயிறு முட்டக் கால்நடைகளுக்குக் கொடுத்தால் உப்புசமும் மூச்சுத் திணறலும் உண்டாகும். அலர்ஜி என்னும் ஒவ்வாமையாலும் உப்புசம் ஏற்படும்.

கால்நடை – உப்புச அறிகுறி

சாதாரண நிலையிலுள்ள வயிறு விரிவடையும். வயிற்றைத் தட்டினால் மேசையைத் தட்டுவதைப் போலக் கேட்கும். கால்நடைகள் தீவனத்தைச் சாப்பிடாது; அசை போடாது. கறவை மாடுகளில் பாலின் அளவு குறைந்து விடும். வயிற்று வலி இருக்கும்.

இதைத் தாங்க முடியாத கால்நடைகள், பின்னங் கால்களால் வயிற்றை உதைக்கும். இறுதியில், மூச்சுத் திணறல் ஏற்பட்டு, கால்நடைகள் இறக்க நேரிடும்.

தீர்வு

உப்புசம் உண்டாகக் காரணமான தீவனத்தை அகற்ற வேண்டும். கால்நடைகளின் வாயைத் திறந்து, நாக்கை வெளியே இழுத்து அசை போடுவதைப் போல அடிக்கடி செய்ய வேண்டும்.

கால்நடைகளைக் காலாற நடக்க விடலாம். 20 மில்லி கற்பூரத் தைலத்தில் 400 மில்லி கடலை எண்ணெய்யைக் கலந்து தரலாம். அல்லது 15 கிராம் பெருங்காயத்தைப் பொடித்து, இளம் சூடான அரை லிட்டர் வெந்நீரில் கலந்து தரலாம்.

அல்லது 200 கிராம் சோடியம் பை கார்பனேட்டை ஒரு லிட்டர் நீரில் கலந்து தரலாம். அல்லது 500 மில்லி கடலை எண்ணெய்யை மட்டும் கொடுக்கலாம். இதெல்லாம் முதலுதவி சிகிச்சை மட்டுமே. எனவே, உடனே, கால்நடைகளைக் கால்நடை மருத்துவரிடம் காட்டி சிகிச்சை செய்வது அவசியம்.

ஆலோசனை

பொங்கல் மற்றும் விருந்து போன்ற நாட்களில் மீதமாகும் உணவுகளை மிகுதியாகக் கால்நடைகளுக்குத் தரும் போது அமில நோயால் உப்புசம் ஏற்படும். ஏனெனில், அரிசி, அரிசிச்சோறு, கோதுமை, மாவுப் பொருள்கள் போன்ற உணவுகளைக் கால்நடைகளால் செரிக்க இயலாது.

வழக்கமாகச் சாப்பிடும் தீவனங்களுக்கே தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்பவை கால்நடைகள். அவற்றின் உணவில் திடீர் மாறுதல் உண்டாகும் போது வயிற்று உப்புசம் போன்ற ஆபத்து நேரலாம். நிலைமை மோசமாக இருந்தால், கால்நடை மருத்துவர் மூலம் சிறப்புச் சிகிச்சை அளிக்க வேண்டும்.

வயிற்று உப்புசம் வராமலிருக்க, ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு விடுமுன், சத்துள்ள தீவனங்களைப் போதியளவில் கொடுக்க வேண்டும். மிகவும் தூளான அடர் தீவனம் மற்றும் அழுகிய பொருள்களை மாடுகளுக்குக் கொடுக்கக் கூடாது.


டாக்டர் வி.இராஜேந்திரன், முன்னாள் இணை இயக்குநர், நத்தம், திண்டுக்கல் – 624 401.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks