முக்கூட்டுக் கலப்பினப் பன்றிகள்!

பன்றி

செய்தி வெளியான இதழ்: 2018 ஏப்ரல்.

ந்தியாவில் நிலவும் அதிக வெப்பத்தைத் தாங்கும் சக்தி, சிறந்த நோயெதிர்ப்பு சக்தி கொண்ட நாட்டுப் பன்றிகளின் வளர்ச்சித் திறனை மேம்படுத்த, வெளிநாட்டுப் பன்றிகள் பயன்படுகின்றன. இதற்காக நம் நாடு முழுவதும் ஆய்வுகள் செய்யப்பட்டன.

இதன் விளைவாக, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் மூலம், முக்கூட்டுக் கலப்பினப் பன்றிகள் உருவாக்கப்பட்டன. இந்தப் பன்றிகளை வளர்ப்போர் நல்ல இலாபத்தை ஈட்டும் வாய்ப்பு உள்ளது.

கலப்பினப் பன்றியின் சிறப்புகள்

இந்தக் கலப்பினப் பன்றி, பெரிய வெள்ளை யார்க்ஷயர் 25 சதம், லேண்ட்ரேஸ் 25 சதம், டியூராக் 50 சதம் மரபைக் கொண்டது. விரைவாக வளரும். இறைச்சி மாற்றுத் திறன் அதிகம். 9-10 மாதங்களில் 90-100 கிலோ எடையை அடையும். இதன் இறைச்சியில் புரதம் அதிகமாகவும், கொழுப்புத் தடிமன் 2.46 செ.மீ. எனக் குறைவாகவும் உள்ளன.

குட்டிகள் பராமரிப்பு

பன்றிக்குட்டி பிறந்த நாளில் செய்ய வேண்டியவை: கூர்மையான ஊசிப் பற்களை வெட்டுதல். ஒரு மி.லி. இரும்புச்சத்து ஊசியைப் போடுதல். உடல் எடையைக் கணக்கிடுதல். காது நுனியை வெட்டி அடையாளம் இடுதல். இனவிருத்திக்குத் தேவையில்லாத கிடாக் குட்டிகளில் ஆண்மை நீக்கம் செய்தல்.

இனப்பெருக்க மேலாண்மை

பருவமடையும் வயது: பெண் பன்றி 5-7 மாதம், ஆண் பன்றி 6-8 மாதம்.

இனச்சேர்க்கை வயது: பெண் பன்றி 8-10 மாதம், ஆண் பன்றி 10-12 மாதம்.

உடல் எடை: பெண் பன்றி 80-100 கிலோ, ஆண் பன்றி 80-110 கிலோ.

பருவச் சுழற்சி நாட்கள்: பெண் பன்றி 18-24 நாட்கள்.

சினைக்காலம்: 111-117 நாட்கள்.

பிறக்கும் குட்டியின் எடை: 1.0-2.5 கிலோ.

பாலூட்டும் காலம்: 56 நாட்கள்.

குட்டி பிரிந்த பின் தாய் பருமடைதல்: 3-10 நாட்கள்.

பருவக்கால அறிகுறிகள்

உண்ணாமல் பரபரப்புடன் இருக்கும். இனப்பெருக்க உறுப்பு சிவந்திருக்கும். வழவழப்பான திரவம் சுரக்கும். பற்ற பன்றிகள் மீது தாவும். தாடைகள் மூலம் ஓசை எழுப்பும். இந்த அறிகுறிகள் தென்பட்ட 24 மணி நேரம் கழித்து முதல் முறையும், அடுத்து 8-12 மணி நேரம் கழித்து இரண்டாம் முறையும் இனச்சேர்க்கை செய்ய வேண்டும்.

இடவசதி மேலாண்மை

வளரும் பன்றி: கொட்டிலில் 10-20 சதுரடி, திறந்த வெளியில் 10-20 சதுரடி.

கிடாப் பன்றி: கொட்டிலில் 65-80 சதரடி, திறந்த வெளியில் 80-120 சதுரடி.

சினை மற்றும் ஈன்ற பன்றி: கொட்டிலில் 80-90 சதுரடி, திறந்த வெளியில் 80-120 சதுரடி.

பருவப் பெண்பன்றி: கொட்டிலில் 20-30 சதுரடி, திறந்த வெளியில் 30 சதுரடி.

தீவன மேலாண்மை

பன்றிகளின் உணவுப் பாதை, ஒற்றை இரைப்பையை உடையதாக இருப்பதால், அவற்றின் தீவனத்தில் போதுமான புரதமும் உயிர்ச் சத்துகளும் கட்டாயம் இருக்க வேண்டும். இதற்கு, பன்றிகளின் வளர்ச்சிக்குத் தகுந்து அடர் தீவனத்தை அளிக்க வேண்டும்.

வளர்ந்த ஆண் மற்றும் பெண் பன்றிக்கு ஒரு நாளைக்கு 2.5 கிலோ, சினைப் பன்றிக்கு 3 கிலோ, பாலூட்டும் பன்றிக்கு 3.5 கிலோ வீதம் அடர் தீவனத்தைக் கொடுக்க வேண்டும்.

உணவகக் கழிவுகள் என்றால், தினமும் ஒரு பன்றிக்கு 5-10 கிலோ வரை தரலாம். இப்படித் தீவனத்தைக் கொடுக்கும் போது நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க, உணவுக் கழிவுகளில் நீரைக் கலந்து, கொதிக்க வைத்துத் தர வேண்டும்.

நோய் மேலாண்மை

முக்கூட்டுக் கலப்பினப் பன்றிகளுக்கு, முறையாகக் குடற்புழு நீக்கம் மற்றும் தடுப்பூசியைப் போட வேண்டும்.

குடற்புழு நீக்கம்: பன்றிகளுக்குத் தகுந்த காலங்களில், தவறாமல் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். தாயிடம் இருந்து குட்டிகளைப் பிரிக்கும் போது முதல் முறையும், அடுத்து ஓராண்டு வரையில் இரண்டு மாதத்துக்கு ஒருமுறையும், ஓராண்டுக்கு மேலான பன்றிகளுக்கு ஆறு மாதங்களுக்கு ஒருமுறையும், சினைக் காலத்தில் 90-ஆம் நாளிலும் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.

தடுப்பூசி அளித்தல்: தடுப்பூசிகளை 2-3 மாதங்களுக்கு மேலுள்ள குட்டிகளுக்கு அளித்தல் வேண்டும். கோமாரி நோயைக் கட்டுப்படுத்த, முதலாவதாக ஆறு மாதத்திலும், அடுத்து, நான்கு மாதங்களுக்கு ஒருமுறையும், கோமாரி நோய்த் தடுப்பூசியைப் போட வேண்டும்.

பன்றிக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த, முதலில் 6-8 மாதத்திலும், அடுத்து, ஜூன்- ஆகஸ்ட் காலத்தில் ஆண்டுக்கு ஒருமுறையும் பன்றிக் காய்ச்சல் தடுப்பூசியைப் போட வேண்டும்.

இப்படி, சரியான வளர்ப்பு முறைகளைக் கடைப்பிடித்தால், முக்கூட்டுக் கலப்பினப் பன்றி வளர்ப்பில் மிகுந்த இலாபத்தை அடையலாம்.


PB_DEVAKI

முனைவர் க.தேவகி, முனைவர் க.வேல்முருகன், வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம் – 603 203.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading