My page - topic 1, topic 2, topic 3

கோடையில் கறவை மாடுகளுக்கு ஏற்ற தீவனப் பராமரிப்பு!

மாடு

செய்தி வெளியான இதழ்: 2018 மே.

புவி வெப்பமயத்தால் ஒவ்வொரு ஆண்டும் 0.8-1 டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடிக் கொண்டே இருக்கிறது. இதனால், மக்களைப் போலவே கால்நடைகளும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றன.

கோடையில் உச்சக்கட்ட வெய்யில் காரணமாக, அதிகமாக மூச்சு வாங்குதல், குறைவாக உண்ணுதல், அதிக நேரம் நின்று கொண்டே இருத்தல், உடல் வெப்பநிலை மிகுதல் ஆகிய அறிகுறிகள் கால்நடைகளில் தென்படும்.

முக்கியமாக, ஒட்டுண்ணிகள் பாதிப்பு, சற்றுக் கூடுதலாக இருக்கும். எனவே, கோடையில் பால் உற்பத்திக் குறைவதுடன், கறவை மாடுகள் நோய்ப் பாதிப்புக்கும் உள்ளாகும். இதனால், மிகுந்த பொருளாதார இழப்பு ஏற்படும். எனவே, கோடைக்காலப் பராமரிப்பு மிகவும் முக்கியம்.

செரிமானத்தின் போது சிறிது வெப்பம் மாடுகளின் வயிற்றில் வெளிப்படும். அதனால், மாடுகள் பெரிதாகப் பாதிக்கப்படாது. ஆனால், மற்ற காலத்தைக் காட்டிலும், கோடையில் வெய்யில் பூமியில் நேரடியாக விழுவதால் ஏற்படும் வெப்பமும், செரிமானத்தின் போது ஏற்படும் வெப்பமும் சேர்ந்து, கறவை மாடுகளை மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக்கும்.

கோடைக்காலப் பராமரிப்பு என்பது, தீவனப் பராமரிப்பு மற்றும் பண்ணைப் பராமரிப்பை உள்ளடக்கியது. கோடைக்காலத் தீவனப் பராமரிப்பைப் பற்றி இங்கே காணலாம்.

வெப்பம் குறைந்த அதிகாலை மற்றும் மாலையில் சத்துள்ள தீவனத்தைத் தர வேண்டும். பகலில் 30% தீவனத்தையும் இரவில் 70% தீவனத்தையும் தர வேண்டும். பசுந்தீவனம் செரிக்கும் போது அதிலுள்ள நீர்ச்சத்தின் காரணமாகக் குறைவான வெப்பத்தை மாடுகள் உமிழும்.

ஆனால், உலர் வைக்கோல், சோளத்தட்டைப் போன்றவற்றைச் செரிக்கும் போது மிகுதியான வெப்பத்தை உமிழும். அதற்காக உலர் தீவனத்தின் அளவைக் குறைத்தால், மாடுகளில் உமிழ்நீர்ச் சுரப்புக் குறைந்து, வயிற்றில் அமிலத் தன்மை கூடி, அமில நோய் ஏற்படலாம். இப்பிரச்சனையைப் போக்க கீழ்க்கண்ட முறையைப் பின்பற்றலாம்.

உலர் தீவனங்களைச் சிறிய துண்டுகளாக வெட்டி, பசுந்தீவனத்தில் சேர்த்துக் கொடுத்தால், உலர் தீவனத்தின் மூலம் ஏற்படும் வெப்ப உமிழ்வைச் சற்றுக் குறைக்கலாம். உலர் தீவனத்தை, வெய்யில் குறைவான காலை, மாலையில் தரலாம்.

கோடையில் பசுந்தீவனம் கிடைப்பது சற்று அரிது. பசுந்தீவனம் கிடைத்தால் 20-30 கிலோ தரலாம். இல்லையேல், மண்ணில்லாப் பசுந்தீவன உற்பத்தி மூலம் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்யலாம். 250 கிராம் மக்காச் சோளத்தில் இருந்து 1.50-1.75 கிலோ பசுந்தீவனத்தை உற்பத்தி செய்யலாம்.

ஆனால், இதைக் கறவை மாடுகளுக்கு முழுத் தீவனமாக அளித்தால் செலவு சற்றுக் கூடுதலாக இருக்கும். எனவே, மண்ணில்லாப் பசுந்தீவன உற்பத்தியை மிகுந்த வறட்சியில் மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

முந்நூறு கிலோ எடையுள்ள, 10 லிட்டர் பாலைத் தரும் கறவை மாட்டுக்கு, அதன் உடல் எடையில், பத்தில் ஒரு பங்கு, அதாவது, 30 லிட்டர் நீர் மற்றும் ஒவ்வொரு லிட்டர் பால் உற்பத்திக்கும் 3 லிட்டர் வீதம் 30 லிட்டர் நீர் என, மொத்தம் 60 லிட்டர் நீர் தேவை.

இந்தத் தேவை, கோடையில் இரண்டு மடங்காக இருக்கும். எனவே, கோடையில் குளிர்ந்த, சுத்தமான குடிநீர் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

வெய்யில் காலத்தில், சிறுநீர் வழியாகச் சோடியமும், வியர்வை வழியாகப் பொட்டாசிய அயனியும் வெளியேறுவதால், தீவனத்தில் 30-50 கிராம் தாதுப்புகளைக் கலந்து கொடுக்க வேண்டும்.

கோடையில் கறவை மாடுகளில் சினைப்பருவ அறிகுறிகள் சற்றுச் குறையும். மேலும், உடல் சூட்டை வெளியேற்ற அதிக நேரம் நின்றபடி இருக்கும். எனவே, தாதுப்புக் கலவையைக் கொடுத்தால், சினைப்பருவ அறிகுறிகள் தெளிவாகத் தெரிவதுடன், கால்களுக்கு நல்ல பலம் கிடைக்கும்.

வெப்ப அயர்வைத் தணிக்க, மூலிகை மருந்துகள் மற்றும் நெல்லிக்காய், துளசி, அஸ்வகந்தா போன்றவற்றை மாடுகளுக்குத் தரலாம். ஈஸ்ட் என்னும் நொதிப் பொருளை, கலப்புத் தீவனத்தில் 5-10 கிராம் கொடுத்தால், செரிமானம் விரைவாக நடக்கும். உண்ணும் அளவும் கூடும். சாக்ரோமைசிஸ் சர்விசியே என்னும் நுண் சத்துக் கலவையை, தினமும் ஒரு மாட்டுக்கு 40 கிராம் வீதம் கொடுக்கலாம்.

மாடுகளின் மேய்ச்சல் நேரத்தை மாற்றலாம். குறிப்பாக, காலை 11 மணி முதல் 4 மணி வரையில் மேய்ச்சலைத் தவிர்க்க வேண்டும். வைட்டமின், தாதுப்புகள், நுண் சத்துகள் அடங்கிய கலவையைத் தினமும் கொடுத்தால், வெப்ப அயர்வைக் குறைத்து, பால் உற்பத்தியைச் சீராகப் பெற முடியும்.

கோடையில், பசுந்தீவனத்தை 4-5 முறையாகப் பிரித்தும், கலப்புத் தீவனத்தில் நீரைச் சேர்த்து ஈரமாகவும் தரலாம். பசுந்தீவனம் மிகுதியாகக் கிடைக்கும் போது, அதை ஊறுகாய்ப் புல்லாக மாற்றித் தரலாம்.

காய்ந்த தீவனமாக இருப்பின், யூரியா ஊட்டமேற்றிப் பதப்படுத்திச் சேமித்து வைத்து, கோடையில் கறவை மாடுகளுக்குக் கொடுக்கலாம்.


பா.பாலமுருகன், அ.செந்தில் குமார், சு.முருகேசன், உழவர் பயிற்சி மையம், தேனி.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks