My page - topic 1, topic 2, topic 3

கறவை மாடுகளில் குளம்புகள் பராமரிப்பு!

கறவை மாடு

செய்தி வெளியான இதழ்: 2018 ஏப்ரல்.

ரிவரக் கவனிக்கப்படாத கால் குளம்புகள் கறவை மாடுகள் நடக்கும் போதும், நிற்கும் போதும் வலியை ஏற்படுத்தும். காயமுள்ள குளம்புகள் மூலம் பரவும் நுண்ணுயிரிகள், குளம்பு அழுகல், மூட்டு வீக்கம் போன்ற நோய்களை உண்டாக்கும்.

மேலும், இத்தகைய குளம்புகள், பால் உற்பத்தியை வெகுவாகப் பாதிப்பதுடன், சில சமயம் மாடுகள் சரிவர உண்ண முடியாத நிலையையும் உண்டாக்கும். இதனால், கிடோசிஸ் ஏற்பட்டு இறப்புக்கூட நிகழலாம். எனவே, கறவை மாடுகளின் குளம்புகள் பராமரிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

குளம்புகள் பாதிக்கப்பட்டிருப்பதன் அறிகுறிகள்

குளம்புகள் அளவுக்கு அதிகமாக வளர்ந்து வளைந்து இருக்கும். மாடுகள் தாங்கித் தாங்கி நடக்கும். சில சமயம் நடக்கும் போது தடுமாறிக் கீழே விழுந்து விடவும் வாய்ப்புண்டு. மாடுகள் வழக்கத்துக்கு மாறாக நெடுநேரம் படுத்துக் கொண்டிருக்கும். சரிவரத் தீவனம் எடுக்காமல் சோர்ந்து காணப்படும். பால் உற்பத்தியும் குறையும்.

வளர்ந்த குளம்புகளைச் சீரமைத்தல்

மாடுகளுக்கு இலாடம் அடிக்கும் தொழிலாளர்கள், அதிகமாக வளர்ந்துள்ள குளம்புகளை உளியின் மூலம் வெட்டிச் சரி செய்வார்கள். இப்படி இரண்டு ஆண்டுக்கு ஒருமுறையாவது சீர்ப்படுத்தி வந்தால், குளம்புகளால் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கலாம். சரியாக இருக்கும் குளம்புகள், கறவை மாடுகளுக்கு நன்மை பயப்பதால், பால் உற்பத்தியும் சீராக இருக்கும்.

பராமரிக்கப்படாத குளம்புகளின் நிலை

குளம்புகளில் புண்கள் ஏற்படலாம். இந்தப் புண்கள் ஆழமாக இருந்தால், குளம்புகளில் ஓட்டையை ஏற்படுத்தி விடும். இதனால் கடினப் பகுதிக்கு அடுத்துள்ள மெல்லிய சதைப்பகுதி வெளியே தெரியும்.

மாடுகள் நடக்கும் போது இப்பகுதி, கல் மற்றும் ஆணிகளால் எளிதில் காயமடைய ஏதுவாகும். இதனால், கால்களில் வீக்கம் ஏற்படும். இத்தகைய அறிகுறிகள் இருந்தால், உடனே அருகிலுள்ள கால்நடை மருத்துவரை அணுகி, சிகிச்சை அளிப்பது அவசியம்.

குளம்புகளைத் தாக்கும் நோய்

குளம்புகளைத் தாக்கும் குளம்பு அழுகல் நோய் மழைக் காலத்தில் ஏற்படும். இந்நோய் ஏற்பட்டால் உடனே கால்நடை மருத்துவரை அணுகித் தக்க சிகிச்சை அளிப்பது அவசியம்.

குளம்புகள் பராமரிப்பில் கவனிக்க வேண்டியவை

கறவை மாடுகளை வாங்கும் போது, கால் குளம்புகள் சரியாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். குளம்புகள் கறுப்பாக இருக்க வேண்டும். குளம்புகளுக்கு இடையில் இடைவெளி குறைவாக உள்ள மாடுகளை வாங்க வேண்டும்.

தீவனத்தில் தாதுப்புகளின் அளவு, குறிப்பாக, கால்சியம் பாஸ்பரசு சரியான அளவில் இருக்க வேண்டும். இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை குளம்புகளை வெட்டிச் சரி செய்ய வேண்டும். கூரிய கற்கள் உள்ள பகுதிகளில் மாடுகளை நடக்க விடக் கூடாது.

குளம்பழுகல் நோயைக் கட்டுப்படுத்த, தினமும் மாடுகளை 1 சத பார்மலின் அல்லது 5 சத துத்தநாகக் கரைசலில் நடக்கச் செய்ய வேண்டும்.

இப்படி, கறவை மாடுகளின் குளம்புகளைப் பராமரித்தால், கறவை மாடுகள் நலமாக இருக்கும். பால் உற்பத்திப் பெருகும். பண்ணையில் இலாபம் அதிகரிக்கும்.


சு.பிரகாஷ், ம.செல்வராஜு, கா.ரவிக்குமார், ச.மனோகரன், கி.செந்தில்குமார், கால்நடை மருத்துவக் கல்லூரி, நாமக்கல் – 637 002.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks