கறவை மாடு வளர்ப்பில் சத்து மருத்துவம்!

மாடு Pachai boomi Cows e7c4f159855f794630fdfbfaf87639cd

ணிக நோக்கிலான பண்ணையில் கறவை மாடுகளை அதிகளவில் பால் உற்பத்திக்கு உட்படுத்துவது முக்கியம். இப்படி, அதிகளவில் பாலைத் தரும் மாடுகளில், பலவகை வளர்சிதை மாற்றக் குறைகள், தொற்று நோய்கள் மற்றும் இனப்பெருக்கச் சிக்கல்கள் ஏற்படுகின்றன.

அவற்றில் குறிப்பாக, பாலில் கொழுப்பின் அளவு குறைதல், குறைவாக உண்ணுதல், இரத்தத்தில் கீட்டோன் மிகுதல், பால் காய்ச்சல், கருப்பை வீக்கம், மடிவீக்கம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

இவற்றுக்குத் தீர்வாக, பல்வேறு நோயெதிர்ப்பு மருந்துகள் இருந்தாலும், சரியான சத்துகள் மற்றும் சுத்தமான பண்ணை நிர்வாகம் இல்லையேல், இந்த நோய்களைக் கட்டுப்படுத்த இயலாது. சத்துக் குறையுள்ள மாடுகளில் பல்வேறு அறிகுறிகள் வெளிப்படும்.

அறிகுறிகள்

பெரும்பாலான மாடுகளில் 10-15%க்கு மேல் வளர்சிதை மாற்றக் குறைகள் இருப்பது. நோய்த் தொற்று இருப்பது. சினைப்பருவ அறிகுறிகள் குறைதல், கருவுறுதல் மற்றும் இனப்பெருக்கத் திறன் குறைதல். பசும்பாலில் கொழுப்புச் சத்து 0.3%க்கு மேல் குறைவாக இருப்பது.

பாலில் துர்நாற்றம் வீசுவது, பால் கெட்டுப் போவது மற்றும் பாலின் சுவை மாறுவது. எதிர்பாராத அளவில் பாலுற்பத்திக் குறைதல். உச்சக்கட்டப் பாலுற்பத்திக் காலத்தில் உற்பத்திக் குறைதல். போதியளவில் உலர் தீவனத்தை உண்ணாமல் இருப்பது.

சரி செய்தல்

தீவனத்தைக் குறைவாக உண்டால்: பாலில் கீட்டோன் கழிவுகளின் அளவைச் சோதிக்க வேண்டும். பதப்படுத்திய தீவனங்களின் அமில மற்றும் காரத் தன்மையைச் சோதிக்க வேண்டும். குடிநீரிலுள்ள நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையை அறிய வேண்டும்.

இரத்தம் கலந்த வயிற்றுப்போக்கு, சீரற்ற இனப்பெருக்கச் சுழற்சி, கருவுறும் திறன் குறைதல் போன்றவை ஏற்பட்டால், தீவனம் மற்றும் தீவனக் கலவையில், பூஞ்சைத் தொற்று உள்ளதா எனச் சோதிக்க வேண்டும்.

மாடுகள் விரும்பி உண்ண ஏதுவாக, வைட்டமின் பி மாத்திரைகள் அல்லது 50-100 கிராம் உலர்ந்த ஈஸ்ட் அல்லது சோடியம் பை கார்பனேட்டைக் கொடுக்க வேண்டும். அவசியமான அமினோ அமிலச் சத்துக் கரைசலைக் கொடுக்க வேண்டும்.

புரதம், மாவு, கொழுப்பு, நார்ச்சத்து, சுண்ணாம்பு, மணிச்சத்து மற்றும் பிற தாதுப்புகள் அடங்கிய சரிவிகிதத் தீவனத்தை அளிக்க வேண்டும்.

வெற்றுப் பசுக்களுக்கு, அடர் தீவனத்தை அதிகமாகத் தரக் கூடாது. மாடு ஈன்று முதல் இரண்டு வாரங்களுக்கு, சுத்தமான மற்றும் தரமான பசுந்தீவனத்தை அதிகமாகத் தர வேண்டும்.

நொதித்த நீரையும் தீவனத்தையும் தரக் கூடாது. ஒரு மாடு ஈன்று 8 மணி நேரத்தில் 75 கிராம் சுண்ணாம்புச் சத்தைக் கொடுக்க வேண்டும்.

இரத்தத்தில் கீட்டோன் மிகுதியாக இருந்தால்: தினமும் 400 முதல் 600 கிராம் புரப்பலின் கிளைக்கால் திரவத்தை, 3 முதல் 5 நாட்கள் வரை வாய்வழியாகச் செலுத்த வேண்டும்.

தினமும் 12 கிராம் நியாசின் என்னும் வைட்டமின் பி-3-ஐ 1-2 வாரம் அளிக்க வேண்டும். ஈனுவதற்கு 2-4 வாரம் முன்பிருந்து, கன்றை ஈன்று 90-120 நாட்கள் வரை, 6 கிராம் வைட்டமின் நியாசினைக் கொடுக்க வேண்டும்.

பால் காய்ச்சல் இருந்தால்: குருதி ஊணீர், சுண்ணாம்புச் சத்து, மணிச்சத்து மற்றும் மக்னீசிய அளவைச் சோதித்தால், பால் காய்ச்சல் உள்ளதா என்பதை அறியலாம். தினமும் 75 கிராம் சுண்ணாம்புச் சத்தை வாய் வழியாகக் கொடுக்க வேண்டும்.

இதில் குணமாகாத மாடுகளுக்கு 900 கிராம் எப்சம் உப்பை, 4 லிட்டர் குடிநீரில் கலந்து வாய் வழியாகக் கொடுத்தால், உணவு மண்டலத்தில் உள்ள நச்சுகள் நீங்கி மாடுகள் நலம் பெறும்.

வைட்டமின் டி3-ஐ 10 மில்லியன் அலகு வீதம் எடுத்து, மாடு ஈனுவதற்கு 24-48 மணி நேரத்தில் கொடுக்க வேண்டும். தினமும் 100 கிராம் அம்மோனிய குளோரைடு கலவையை, ஈனுவதற்கு முன்பு அல்லது ஈன்ற பின்பு இரண்டு நாட்களுக்குக் கொடுக்க வேண்டும்.

கருப்பை வீங்கியிருந்தால்: கருப்பை வீக்க நோய், சுகாதாரமற்ற செயற்கைக் கருவூட்டல் மற்றும் ஈனும் போது மாடுகள் சுத்தமில்லாமல் இருப்பதால் ஏற்படுகிறது. எனவே, ஈனும் இடம் தூய்மையாக இருக்க வேண்டும்.

கறவையில் உள்ள மற்றும் பால் வற்றிய மாடுகளுக்கு, புரதம், தாதுப்பு மற்றும் வைட்டமின் நிறைந்த சரிவிகிதத் தீவனத்தைத் தர வேண்டும். சுகாதார முறையில் செயற்கை முறை கருவூட்டல் செய்யப்பட வேண்டும். நோய்த் தொற்றுள்ள காளையை இனச்சேர்க்கைக்கு உட்படுத்தக் கூடாது.

மடிவீக்க நோய் இருந்தால்: தினமும் 15,000 முதல் 25,000 அலகு வீதம் வைட்டமின் டி-யைக் கொடுக்க வேண்டும். பால் கறவைப் பொருள்களைச் சீரான இடைவெளியில் சுத்தம் செய்ய வேண்டும்.

பால் மடி மற்றும் காம்பில் காயம் மற்றும் நோய்த் தொற்று இருந்தால், கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சை அளிக்க வேண்டும். பாலைக் கறந்த பின்பு கிருமிநாசினி மூலம் காம்புகளைக் கழுவ வேண்டும். மடிநோயுள்ள மாடுகளைப் பராமரிக்கும் ஆட்கள், மடிநோய் பாதிக்காத மாடுகளைப் பராமரிக்கக் கூடாது.


மாடு DR A SABARI NATHAN

மரு.ஏ.சபரிநாதன், மரு.சீ.ரங்கசாமி, மரு.த.சத்திய மூர்த்தி, மரு.து.கோபி கிருஷ்ணன், கால்நடை மருத்துவக் கல்லூரி, சென்னை – 600 007.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading