செய்தி வெளியான இதழ்: 2018 பிப்ரவரி.
நல்ல நிலையில் இருக்கும் பசுக்கள் கூட, சில சமயங்களில் செயற்கை முறைக் கருவூட்டலில் சினையுறாது. இதற்கு முக்கியக் காரணம், கருவூட்டலின் போது சில முக்கியக் கூறுகளை அலட்சியம் செய்வது தான். எனவே, செயற்கை முறை கருவூட்டலின் போது சில உத்திகளைக் கையாள வேண்டும்.
செயற்கை முறை கருவூட்டலுக்கு ஏற்ற காலம்
பசுக்களில் சினை அறிகுறிகள் வந்ததும் அல்லது பருவம் தொடங்கி அதிக நேரம் கழித்து, கருவூட்டல் செய்யக் கூடாது. சினை அறிகுறிகள் தொடங்கி 2-10 நேரம் கழித்துக் கருவூட்டல் செய்தால், மாடுகள் சினையாகும் வாய்ப்புகள் அதிகம்.
கிடேரிகளின் வயது
கிடேரிகளுக்குக் கருவூட்டும் போது, அவற்றின் வயது மற்றும் உடல் எடையைக் கணக்கில் கொள்ள வேண்டும். பொதுவாக, கலப்பினக் கிடேரிகள் 18-24 மாதங்களில் பருவத்துக்கு வரும். அப்போது, கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி, கிடேரியின் உடல் எடையை மனதில் கொண்டு, கருவூட்டல் செய்ய வேண்டும்.
கருவூட்டலுக்கான நேரம்
சினைப் பருவமடைந்த பசுக்களை, வெப்பம் குறைவான நேரத்தில் கருவூட்டுவது மிகவும் நல்லது. வெப்பம் அதிகமாக இருக்கும் போது கருவூட்டல் செய்தால், சினைப் பிடிக்கும் வாய்ப்புகள் குறைவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
அமாவாசை மற்றும் பௌர்ணமியின் போது மட்டும் தான் கால்நடைகளில் சினைப் பருவம் உண்டாகும் என்னும் தவறான கருத்து மக்களிடம் உள்ளது. நல்ல கால்நடைகள் 21 நாட்களுக்கு ஒருமுறை சினைப் பருவத்தை அடையும்.
கருவூட்டலின் போது கால்நடைகளைக் கையாளுதல்
கருவூட்டலுக்கு முன்னும் பின்னும், மாடுகளை மிகவும் அமைதியான சூழலில் கையாள வேண்டும். அதாவது, அவற்றை மிரட்டவோ அல்லது அடிக்கவோ அல்லது மிக விரைவாக ஓட்டிச் செல்லவோ கூடாது. சிலர், கருவூட்டல் செய்த மாடுகளைப் படுப்பதற்கு விடுவதில்லை.
மேலும், தீவனம் மற்றும் தண்ணீர் தருவதையும் பகல் முழுவதும் தவிர்த்து விடுகின்றனர். இது தவறான செயலாகும். இதனால், மாடுகளின் சினைப் பிடிப்பில் கட்டாயம் பாதிப்பு ஏற்படும்.
எனவே, கருவூட்டல் செய்த மாடுகளை, மெதுவாக ஓட்டிச் செல்ல வேண்டும். மேலும், போதுமான பசுந்தீவனம் மற்றும் பிற தீவனங்களை வழங்க வேண்டும். குளிர்ந்த நீரில் குளிப்பாட்டுதல் மிகவும் நல்லது.
கால்நடைகளின் உடல் நலம்
கருவூட்டலுக்கு முன், கால்நடைகளின் நலத்தையும் மனதில் கொள்ள வேண்டும். உடல் நலமுள்ள மாடுகளில், சினைத் தருணத்தில் பிறப்பு உறுப்பிலிருந்து வெளிப்படும் திரவம், வழவழப்பாக, தெளிவாக, கண்ணாடியைப் போல இருக்கும்.
ஆனால், கருப்பையில் நோய்த்தொற்று உள்ள பசுக்களில் வெளிப்படும் திரவம், கலங்கலாக, இரத்தம் அல்லது சீழ் கலந்து காணப்படும். இத்தகைய அறிகுறிகள் தெரிந்தால், கால்நடை மருத்துவரை அணுக வேண்டும்.
ஏனெனில், இந்த அறிகுறிகளைக் கொண்ட மாடுகளை, முறையாக சிகிச்சை செய்த பிறகு தான் கருவூட்ட வேண்டும். பசுக்களைப் போல, எருமைகளில் சினை அறிகுறிகள் மிகத் தெளிவாகத் தெரிவதில்லை. எனவே, எருமைகளை உற்றுக் கவனித்தால் தான், சினைக்கு வந்துள்ள மாடுகளை அடையாளம் காண முடியும்.
கருவூட்டல் முறை
கருவூட்டல் செய்யப் பயன்படும் கருவிகள் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். கருவூட்டலுக்கு முன், மாடுகளில் சினைப் பருவத்தைக் கணக்கிட்டு, நல்ல முறையில் கருவூட்ட வேண்டும்.
கருவூட்டலுக்கு முன், பிறப்பு உறுப்பின் வெளிப்பகுதியைச் சுத்தமான நீரால் கழுவித் துடைக்க வேண்டும். மூன்று முறைக்கு மேல் கருவூட்டல் செய்தும் சினைப் பிடிக்காத பசுக்களில், சிறப்புக் கவனம் செலுத்தி, முறையாகச் சிகிச்சையளிக்க வேண்டும்.
சிலர், செயற்கை முறை கருவூட்டல் செய்த அன்றே, அவற்றைக் காளைகள் மூலமும் கருவூட்டல் செய்கின்றனர். இப்படிச் செய்தல் தேவையற்ற ஒன்றாகும்.
மேலும், பொலிக்காளைக்கு ஏதேனும் நோய் இருந்தால், அதன் தாக்கம், பசுக்களிலும் பரவி, கருத்தரிப்பில் சிக்கலை ஏற்படுத்தும். இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு செயல்பட்டால், பண்ணை இலாப மிக்கதாக இருக்கும்.
சு.பிரகாஷ், ம.செல்வராஜு, கா.இரவிக்குமார், ச.மனோகரன், கி.செந்தில்குமார், கால்நடைப் பெருக்கம் மற்றும் ஈனியல் துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி, நாமக்கல் – 637 002.
சந்தேகமா? கேளுங்கள்!