My page - topic 1, topic 2, topic 3

எருமைகளை வளர்ப்பது எப்படி?

எருமை

செய்தி வெளியான இதழ்: 2018 ஆகஸ்ட்.

ண்டுக்கு ஒரு கன்று என்பது, மாடு வளர்ப்பின் தாரக மந்திரமாகும். ஆனால், எருமை மாடுகளில் ஆண்டுக்கு ஒரு கன்றைப் பெறுவது என்பது மிகக் கடினம். எருமை வளர்ப்பில் ஏற்படும் சிக்கல்களைக் கவனித்து, தீர்வுகளைக் கண்டால் மட்டுமே கன்றுகள் பிறப்பையும், பால் உற்பத்தியையும் பெருக்க முடியும்.

உலகளவில், பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது, தற்போதைய நிலவரப்படி ஆண்டுக்கு 163.7 மில்லியன் டன் பால் இந்தியாவில் உற்பத்தியாகிறது. இதில் எருமை மாடுகளின் பங்கு அதிகம்.

இனப்பெருக்கத்தில் உள்ள சிக்கல்கள்

எருமை வளர்ப்பில் சரியான இனப்பெருக்க முறைகளைக் கையாளவில்லை எனில், ஆண்டுக்கு ஒரு கன்று என்பது சாத்தியமாகாது. எருமை, ஊமைச் சினைப் பருவத்தை வெளிப்படுத்தும் உயிரினம்.

அதாவது, சினைப்பருவ அறிகுறிகள் சரியாக வெளியே தெரியாது. சரியான கால இடைவெளியில் சினைப் பருவத்துக்கு வந்தாலும், பருவ அறிகுறிகள் சரியாக வெளிப்படாது. இதனால் சரியான நேரத்தில் கருவூட்ட முடியாது.

எருமை வளர்ப்பில் இழப்புகளுக்கான காரணங்கள்

இனப்பெருக்க அறிகுறிகளைச் சரியாக வெளிப்படுத்தாமல் இருப்பது. கன்றை ஈன்ற எருமையில் முதல் பருவ அறிகுறி வெளிப்படுவது சரியாகத் தெரியாமல் போவது அல்லது தாமதமாக வெளிப்படுவது. கோடைக்காலக் கடும் வெப்பம் மற்றும் தீவனப் பற்றாக்குறையால் இனப்பெருக்கச் சிக்கல்கள் மற்றும் பால் உற்பத்திக் குறைவு ஏற்படுதல்.

இந்தக் காரணங்களால் ஒரு கன்றுக்கும் மற்றொரு கன்றுக்குமான இடைவெளி அதிகமாகிறது. சரியான சமயத்தில் சினையாகாத எருமையால், தினமும் தீவனப் பயன்பாடு மற்றும் குறைவான பால் உற்பத்தியால், சராசரியாக 150 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.

இதைச் சரியான பராமரிப்பு மூலம் சரி செய்யலாம். அதாவது, எருமை சினைக்கு வந்த நேரத்தைக் குறித்து வைத்துக் கொண்டு, அடுத்த பருவத்துக்கு வரும் சமயத்தைக் கூர்ந்து கவனித்து வர வேண்டும்.

சினை ஊசி போட்ட 60 நாட்களுக்குப் பருவ அறிகுறி தெரியவில்லை எனில், கால்நடை மருத்துவர் மூலம் சினைப் பரிசோதனை செய்ய வேண்டும். கோடைக் காலத்தில் சரிவிகித, சமச்சீர் உணவு தரப்பட வேண்டும்.

கோடையில் எருமைகளை நிழலில் வைத்துப் பாதுகாக்க வேண்டும். மதிய வேளையில் குளிர்ந்த நீரில் குளிப்பாட்டி, உடல் சூட்டைத் தணிக்க வேண்டும். தேவையான அளவில் குடிநீரைக் கொடுக்க வேண்டும்.

சினைப் பருவத்தை அறிதல்

பசுக்களைப் போல எருமைகள் பருவ அறிகுறிகளைப் பளிச்சென வெளிப்படுத்த மாட்டா. மேலும், பருவ அறிகுறிகள் வெளிப்படும் கால அளவும் குறைவாகும். சினைப் பருவத்தில் உள்ள எருமைகள் உண்ணும் தீவன அளவு குறையும். அதனால் கறக்கும் பாலின் அளவும் குறையும். அடிக்கடி சிறுநீர் கழிக்கும். பிறப்பு உறுப்பு ஈரமாக, சிவந்து காணப்படும்.

அறையில் இருந்து கண்ணாடியைப் போன்ற வழவழப்பான திரவம் குறைந்த அளவில் வடியும். எருமைகளை வளர்ப்போர், தினமும் பால் கறக்கும் போதோ அல்லது கறந்த பின்போ, காலை மாலையில் சரியான சினைப் பருவத்தைக் கவனிக்க வேண்டும். இந்த அறிகுறிகள் 12-24 மணி நேரம் வரை மட்டுமே தென்படும்.

சினைப் பிடிக்காமைக்கான காரணங்கள்

இந்தச் சிக்கல் உள்ள எருமையில், சினைப் பருவத்துக்கு வரும் தன்மை, சினைப்பருவ அறிகுறிகள் ஆகியன இயல்பாக இருக்கும். ஆனால், தொடர்ந்து 3-4 முறை கருவூட்டல் செய்தாலும் சினையாகாது. இதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன.

அவையாவன: சுகாதாரமற்ற முறையில் சினையூட்டல் செய்தல். சரியான பயிற்சி இல்லாதவர் மூலம் சினையூட்டல் செய்தல். சுகாதாரமற்ற தொழுவத்தில் ஈனுதல். சுகாதாரமற்ற முறையில் கன்றை வெளியே எடுத்தல். பயிற்சியற்றவர் மூலம் நஞ்சுக்கொடியை எடுத்தல்.

இந்தக் காரணங்களால் கருப்பையில் புண் ஏற்பட்டு தூர்நாற்றத்துடன் சீழ் வடியும். இதனால், தற்காலிக அல்லது நிரந்தர மலட்டுத் தன்மை ஏற்படும். இதைத் தவிர்க்க, கால்நடை மருத்துவர் மூலம், முறையாக அனைத்துச் செயல்களையும் செய்ய வேண்டும்.

முறையான தீவனப் பராமரிப்பு

தீவன மேலாண்மைக் குறைபாடே எருமைகள் சினையாகாமல் இருப்பதற்கு முக்கியக் காரணம். பொதுவாக 6-7 மாதச் சினை மாடுகளே நன்கு கவனிக்கப் படுகின்றன. மற்ற மாடுகளுக்குத் தரப்படும் தீவனத்தின் அளவு மிகவும் குறைவாகும்.

இதனால் அவை போதிய சத்தின்றி மெலிந்து விடுகின்றன. தீவனத்துக்கு மேய்ச்சலையே முழுமையாக நம்பியுள்ளன. அதனால், அந்த மாடுகள் மலட்டுத் தன்மையை வெளிப்படுத்துகின்றன.

வைட்டமின் ஏ நிறைந்த தீவனப் பயிர்களான, தீவனச்சோளம் கோ,எப்,எஸ்,29, கோ 4, சூபாபுல், வேலிமசால், கிளைரிசிடியா, அகத்தி போன்றவற்றை அளித்து எருமைகளை வளப்படுத்தலாம். இவற்றை அன்றாடம் ஒரு எருமைக்குச் சுமார் 20-25 கிலோ வரை கொடுத்தால், அந்த எருமை குறையின்றிச் சினைப்படும்.

குடற்புழு நீக்கம்

எருமைகள் உண்ணும் உணவிலுள்ள முக்கியச் சத்துகளை எடுத்துக் கொள்ளும் குடற் புழுக்கள் அவற்றின் வளர்ச்சியைக் குறைக்கின்றன. எனவே, குடற்புழு நீக்க மருந்தை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கொடுக்க வேண்டும்.

இதனால் குடற்புழுக்கள் நீங்கும். மாடுகள் உண்ணும் தீவனம் உடலில் முழுமையாகக் கிரகிக்கப்படும். விரைவான வளர்ச்சி, காலத்தில் பருவமடைதல், ஊடல் எடை கூடுதல் ஆகிய நன்மைகள் ஏற்படும்.

தாதுப்புக் குறைபாடு

பசுக்கள் மற்றும் எருமைகளில் சினைப்பருவம் வருவது இனப்பெருக்கச் சுரப்பிகளால் நிகழ்கிறது. இந்தச் சுரப்பிகள் நன்றாகச் சுரக்க, தாதுப்புகள் மிகவும் அவசியம். மாடுகள் நல்ல முறையில் சினைப் பருவத்துக்கு வந்தும் சினையாகாமல் போவதற்கு, தாதுப்புக் குறையும் காரணமாகும்.

தாதுப்புகளாகிய கால்சியம், தாமிரம், பாஸ்பரஸ், கோபால்ட், இரும்பு, மாங்கனீசு ஆகியவற்றைச் சரியான அளவில் அளிக்க வேண்டும். சில பகுதிகளின் நிலப்பரப்பில் இந்தத் தாதுப்புகள் குறைவாக இருக்கும்.

ஆகவே, அதில் விளையும் பயிரிலும் அவ்வகைத் தாதுப்புக் குறைவாக இருக்கும். இதனால் தாதுப்புக் குறைபாடு ஏற்படலாம். பாஸ்பரஸ், அயோடின், தாமிரம் போன்ற தாதுப்புகள், மாடுகள் முறையாகச் சினைக்கு வரவும், சினைப் பிடிக்கவும் உதவுகின்றன.

ஆகவே இந்தத் தாதுக்கள் தீவனத்தில் அளவுடன் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்குத் தாதுப்புக் கலவையைத் தீவனத்தில் சேர்க்கலாம்.

எருமை வளர்ப்பில் கடைப்பிடிக்க வேண்டியவை

நாம் ஏற்கெனவே கண்டபடி, இனப்பெருக்கச் சுரப்பிகள் சரியாக இயங்காத போது மாடுகளில் மலட்டுத் தன்மை ஏற்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஜி.என்.ஆர்.எச். சுரப்பி சரியாகச் சுரக்காத போது, கருமுட்டை வெளியாவதில் தாமதம் ஆகலாம். அல்லது வெளிப்படாமல் போகலாம்.

புரோஜெஸ்டிரான் சுரப்புக் குறைவதால், கருவுற்றாலும் அந்தக் கருவைப் பாதுகாக்க முடியாமல் போகலாம். இத்தகைய குறைகளை, கால்நடை மருத்துவர் மூலம் கண்டறிந்து தகுந்த சிகிச்சையளிக்க வேண்டும்.

சரியான கன்று பராமரிப்பு, எருமைகளுக்குப் போதிய, தரமான கலப்பு மற்றும் பசுந்தீவனம் அளித்தல், சினைப் பருவத்தைச் சரியாகக் கண்டறிதல், சரியான நேரத்தில் சினையூட்டுதல், இனப்பெருக்க நோய்களுக்குச் சரியான சிகிச்சை அளித்தல்,

சுத்தம் சுகாதாரமாக எருமைகளை, தொழுவத்தைப் பராமரித்தல் போன்றவற்றை மேற்கொண்டால், எருமை வளர்ப்பில் ஆண்டுக்கு ஒரு கன்றைப் பெற்றுப் பயனடையலாம்.


முனைவர் ச.மனோகரன், முனைவர் ம.பழனிசாமி, காங்கேயம் மாட்டின ஆராய்ச்சி நிலையம், சத்தியமங்கலம், ஈரோடு – 638 402.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks