இளங்காளையை இப்படித்தான் வளர்க்கணும்!

இளங்காளை

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2017

ரு காளை பண்ணையில் அரை மடங்கு என்பது முதுமொழி. காளையின் இனப்பெருக்கத் திறன், அதன் மரபியல் பண்பை மட்டும் சார்ந்திராமல், உணவு மற்றும் பராமரிப்பையும் சார்ந்தே இருக்கும். காளையை மரபியல் அடிப்படையில் தேர்ந்தெடுக்க வேண்டும். உடலியல் மற்றும் உடற்கூறு தோற்றத்தைக் கருத்தில் கொண்டு தேர்ந்தெடுக்க வேண்டும். பிறந்து ஓராண்டுக்குள் அல்லது அதற்கு முன்பே காளைக் கன்றுகளை மற்ற கன்றுகளில் இருந்து பிரித்துக் கவனத்துடன் வளர்க்க வேண்டும்.

வளர்ந்த காளைகளைப் பராமரித்தல்

காளைக் கன்றுகள் பிறந்ததும் அறிவியல் முறையில் அல்லது கிராமிய முறையில் காய்ச்சிய இரும்பால் கொம்புகளின் முனைகளை நீக்க வேண்டும். கொம்புகளால் நமக்கு ஆபத்து ஏற்படுவதைத் தவிர்க்கவே கொம்புகளின் முனைகளை நீக்குகிறோம். உப்புத்தாளைக் கொண்டு அவ்வப்போது கொம்புகளை மெருகேற்றலாம். இதைப் போலவே, அதிகமாக வளர்ந்த குளம்புகளையும் நீக்கிச் சீர்செய்ய வேண்டும். நன்கு பேணப்படாத குளம்புகள் காளைகளுக்கு வலியை ஏற்படுத்தும்.

கிடேரிகளைக் காட்டிலும் காளைகள் வேகமாக வளரும். இன விருத்திக்குப் பயன்படும் காளையானது, பெரிய தலையையும், ஓரளவு தடித்த கழுத்தையும், நன்கு பரந்த மார்பையும் கொண்டதாக இருக்க வேண்டும். காளையின் முதுகு உயரமானது, காளையின் நீளத்தைக் காட்டிலும் குறைவாக இருக்க வேண்டும். இந்த அமைப்பில் இருக்கும் காளைகளை 15 மாத வயதில் தேர்ந்தெடுக்க வேண்டும். காளைகள் 16 முதல் 18 மாதங்களில் இன விருத்திக்குத் தயாராகும். எருமைக் காளைகள் பெரும்பாலும் 4 முதல் 6 மாதங்கள் தாமதமாகவே இன விருத்திக்குத் தயாராகும்.

விந்து சேகரிப்புக்காக வளர்க்கப்படும் காளைகளுக்கு 18 முதல் 24 மாதங்களுக்குள், விந்து சேகரிப்புப் பயிற்சியை அளிக்க வேண்டும். அப்போது காளையின் எடை 300 கிலோவுக்குக் குறையாமல் இருக்க வேண்டும். காளைகளின் வயது முப்பது மாதமாகும் போது, விந்து உற்பத்தி நன்கு வெளிப்படும். விந்தைச் சேகரிக்கத் தொடங்கும் வயதானது பசுக்காளைகளுக்கு மூன்று ஆண்டுகளாகும். எருமைக் காளைகளுக்கு மூன்றரை ஆண்டுகளாகும்.

இளங்காளையைக் கட்டுப்படுத்துதல்

காளைக் கன்றுக்கு 8-12 மாதங்களுக்குள் இரண்டரை அங்குலம் கொண்ட மூக்கு வளையத்தை இட வேண்டும். வயது ஆக ஆக பெரிய வளையத்தைப் பயன்படுத்தலாம். மூக்கு வளையத்தை அணிவிக்கும் போது டிஞ்சர் அயோடினைப் பயன்படுத்த வேண்டும். மூக்கு வளையமானது, அலுமினியம், தாமிரம் போன்ற துருப்பிடிக்காத உலோகங்களால், இரு அரைவட்டமாகச் செய்யப்பட்டுப் பிறகு இணைக்கப்படும். மூக்கு வளையத்தை இடுவதால், காளையை எளிதாகப் பராமரிக்க முடியும். ஏனெனில், காளையின் மூக்கில் தொடுவுணர்வு அதிகம். மூக்கு வளையத்தைக் கயிற்றின் மூலம் இணைத்துக் காளையைக் கட்டுப்படுத்த வேண்டும்.

பயிற்சியளித்தல்

இளங்காளைகளைக் கையாளவும், வழி நடத்தவும் பயிற்சிகள் தேவை. பயிற்சி பெற்ற காளைகளைப் பராமரிப்பது மிகவும் எளிது. நான்கு முதல் ஆறு வயதான காளைகளுக்கு வாய்ப்பூட்டை இட்டால் எளிதாகக் கையாளலாம். பயிற்சியின் போது, பயிற்சியாளர் காளைக்கு முன்னால் நடக்கக் கூடாது. காளையின் பக்கவாட்டில் தான் நடக்க வேண்டும். பயிற்சியின் போது, காளைகளை ஆபத்தான விலங்குகளாகவே கருத வேண்டும்.

உடற்பயிற்சி

வளரும் கன்றுகளுக்கு முறையாகப் பயிற்சியளித்தால், சதை போடுவதையும், குளம்புகள் அதிகமாக வளர்வதையும் தவிர்க்க முடியும். இனப்பெருக்கத்துக்குப் பயன்படுத்தும் காளைகளை, மாட்டு மந்தைகளுடன் விடுதல் கூடாது. இந்தக் காளைகளைப் புறவெளியில் உள்ள கொட்டகையில் தனித்தனியாக வளர்க்க வேண்டும். இதனால், இனப்புணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியும்.

காளைகளின் இனப்பெருக்க உறுப்பைச் சுற்றியுள்ள முடிகளை இரு வாரங்களுக்கு ஒருமுறை, கவனமாக, ஒரு செ.மீ. நீளம் விட்டு வெட்ட வேண்டும். இல்லையெனில், இனப்பெருக்க உறுப்பில் காயங்கள் ஏற்பட வாய்ப்பாகும்.

புணர்ச்சி வேகத்தை நிலைநிறுத்தல்

முதிர்ச்சி அனுபவமின்மை, அசுத்தமான இடங்களில் விந்தைச் சேகரித்தல், உடல் பருமன் ஆகிய காரணிகள், புணர்ச்சி வேகத்தைக் குறைக்கும். அவற்றைக் கண்டறிந்து உடனுக்குடன் சரிசெய்ய வேண்டும். சரியான சூழல் இல்லாத போது, விந்தைச் சேகரிக்கக் கூடாது. விந்தைச் சேகரித்த பிறகே காளையை இடமாற்றம் செய்ய வேண்டும்.

இரண்டு இரண்டரை ஆண்டுகளுக்கு மேலான காளைகளை மட்டுமே, இனப்புணர்ச்சிக்கோ, விந்தைச் சேகரிக்கவோ அனுமதிக்க வேண்டும். வாரம் இருமுறை விந்தைச் சேகரித்தால், முதல் தரமான விந்தைப் பெறலாம். வாரம் இரு முறைக்கு மேல் விந்தைச் சேகரித்தால், விந்தின் அடர்த்திக் குறைவதுடன், கருத்தரிப்பு அளவும் குறையும்.

காளைகளில் இருந்து வெளிப்படும் விந்தின் அளவு, விந்து நகரும் விதம், விந்தின் அடர்த்தி, விந்தில் காணப்படும் குறைகள், குளிரைத் தாங்கும் தன்மை ஆகியவற்றைச் சோதிக்க வேண்டும். புணர்ச்சி வேகம் குறைந்த காளைகளின் வேகத்தை அதிகரிக்க, இன்னொரு காளையைப் புறவெளி முற்றத்தில் அறிமுகப்படுத்த வேண்டும். கோடையில் விந்து உற்பத்திக் குறைவாக இருக்கும். அதனால், காளைகளைக் குளிர்ச்சியான இடத்தில் வளர்க்க வேண்டும். ஒருநாளில் 2-3 முறையாவது காளைகளைக் குளிப்பாட்ட வேண்டும்.

தீவனமளித்தல்

நூறு கிலோ எடையுள்ள காளைக்கு ஒரு கிலோ உலர் தீவனமும், அரை கிலோ அடர் தீவனமும் அன்றாடம் கொடுக்கப்பட வேண்டும். அடர் தீவனத்தில் கால்சியம் அதிகமாக இருந்தால், முதிர்ந்த காளைகளுக்குப் பாதிப்பு உண்டாகும். அதனால், கறவை மாடுகளுக்குத் தரப்படும் அடர் தீவனத்தைக் காளைகளுக்குத் தரக்கூடாது. விந்தைச் சேகரித்து முடித்ததும், அடர் தீவனத்தைக் கொடுக்க வேண்டும். தரமான பசும்புல்லைக் கொடுத்தால், 13-15% செரிக்கும் புரதமுள்ள அடர் தீவனத்தைத் தினமும் 2-3 கிலோ வரையில் கொடுக்கலாம்.

உடல் எடையைப் பொறுத்தும், பொழிவுகளின் தீவிரத்தைப் பொறுத்தும், தீவனத்தின் அளவைக் கூட்டலாம். கோடையில் எருமைக் காளைகளை 2-3 முறை குளிப்பாட்ட வேண்டும். இரவில் வைக்கோலால் படுக்கை அமைத்துக் கொடுத்தல் நல்லது. குளிர் காலத்தில், கடுகு எண்ணெய்யைக் காளைகளுக்குத் தேய்த்து விட வேண்டும். இப்படிச் செய்தால், காளைகள் பளபளப்பாக இருப்பதுடன், விந்து உற்பத்தியும் அதிகமாக ஏதுவாகும்.

விந்தின் நிறமாற்றம், விந்து வெளியாகாமல் இருத்தல் போன்ற சிக்கல்கள் ஏற்பட்டால், காளையின் பிறப்புறுப்பு, விந்தகம், பிறப்புறுப்பின் தோல் பகுதி ஆகியவற்றைச் சோதிக்க வேண்டும். கன்று வீச்சு நோய், விப்ரியோ கருச்சிதைவு நோய், ஓரணு ஒட்டுண்ணிக் கருச்சிதைவு நோய், காசநோய், ஜோனிஸ் கழிச்சல் நோய் போன்ற தொற்று நோய்கள் வராதபடி, காளைகளைப் பாதுகாக்க வேண்டும். இந்த நோய்களுக்கு உள்ளாகும் காளைகளைப் பண்ணையில் இருந்து அகற்றி விட வேண்டும்.


இளங்காளை Prakash 1

மருத்துவர் சு.பிரகாஷ்,

முனைவர் மா.செல்வராஜ், மருத்துவர் சு.அழகர், முனைவர் க.இரவிக்குமார்,

முனைவர் சா.மனோகரன், கால்நடை மருத்துவக் கல்லூரி, நாமக்கல்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading