இறைச்சிக் கோழிக் குஞ்சுகளுக்கு அதன் தாயிடமிருந்து பெறப்பட்ட நோயெதிர்ப்பு சக்தியைக் கணக்கிட்டு, சரியான நாளில் தடுப்பூசியைப் போட்டால், முதல்வகை நோய்த் தாக்கத்தைக் கட்டுப்படுத்தலாம்.
செய்தி வெளியான இதழ்: 2018 செப்டம்பர்.
கம்போரோ என்பது, பிர்னா என்னும் நச்சுயிரியால் ஏற்படும் கொடிய நோய். இறைச்சிக் கோழிகள் குறைந்த காலத்தில் நிறையச் சாப்பிட்டு விரைவாக வளர்வதால், அவற்றுக்கு நோயெதிர்ப்பு சக்தி மிகவும் குறைவு.
எனவே, இந்தக் கோழிகள் கம்போரா நோய்க்கு எளிதில் உள்ளாகும். மேலும், கம்போரா நச்சுயிரி, நோயெதிர்ப்பைத் தரும் பர்சா என்னும் உறுப்பைத் தாக்குவதால், இறைச்சிக் கோழிகள், மற்ற கிருமிகளின் பாதிப்புக்கும் உள்ளாகும்.
பரவும் முறை
கம்போரோ நோய், இறைச்சிக் கோழிகளின் எல்லாப் பருவங்களிலும் தாக்கும். ஒருமுறை ஒரு பண்ணையில் பரவும் நோய்க் கிருமிகள், பல மாதங்களுக்கு அங்கே இருக்கும். இந்நோய் தாக்கிய முதல் 3-5 நாட்களில் 30-60 சதம் வரை இறப்பு நிகழும்.
கோழிகள் வளராமல் போவதால் விற்பனையிலும் சிரமம் இருக்கும். நோயுற்ற கோழிகளின் எச்சம், தீவனம் மற்றும் கருவிகள் மூலம் இந்நோய் மிகுதியாகப் பரவும்.
இதனால் நோயெதிர்ப்பு சக்தியை இழக்கும் கோழிகள், வெள்ளைக் கழிச்சல், சளி, இ.கோலை போன்ற நோய்களுக்கும் உள்ளாகி, நிறையளவில் இறக்க நேரிடும்.
நோய்த் தாக்கம்
இந்நோய், இறைச்சிக் கோழிகளில் இரண்டு வகை தாக்கத்தை உண்டாக்கும். வீரியமிக்க தடுப்பூசியைக் குஞ்சுகளுக்குப் போடுவதால், முதல் வகைத் தாக்கம் ஏற்படும்.
எனவே, குஞ்சுகளின் இரத்தத்தைச் சோதித்து, தாயிடமிருந்து பெறப்பட்ட நோயெதிர்ப்பு சக்தியைக் கணக்கிட்டு, சரியான நேரத்தில் தடுப்பூசியைப் போட வேண்டும்.
இல்லையெனில் இவ்வகை நோய் மிகுதியாகத் தாக்கும். முதல் வகையில் இறப்பு மிகுதியாக இருக்காது. ஆனால், உற்பத்தியைப் பாதிக்கும் வகையில் நோயெதிர்ப்பு சக்தி குறையும்.
இதில், நோய் அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரியாமல், இரண்டாம் கட்ட நுண்ணுயிரிகளின் தாக்கம் கூடுதலாக இருக்கும். இதனால், குஞ்சுகள் பெரிதும் சிறிதுமாக இருக்கும். நோயுற்ற குஞ்சுகள் குறைந்த எடையிலும், அந்த எடையைப் பெறுவதற்கும் நிறைய உண்ண வேண்டியிருக்கும்.
இரண்டாம் வகைத் தாக்கத்தால் கோழிகள் நிறைய இறக்கும். நோயுற்ற முதல் மூன்று நாட்களில் இறப்பு மிகுந்தும், நான்காம் நாளில் இறப்பின் அளவு மிகவும் குறைந்தும் காணப்படும்.
இந்நோய், மூன்று வாரத்துக்கு மேற்பட்ட குஞ்சுகளைத் தாக்கும். இதில், இந்த நோயின் அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரியும். மேலும், தீவனத்துக்கு ஏற்ற வகையில், சரியான எடையை, உரிய நேரத்தில் அடைந்து விடும்.
நோய் அறிகுறிகள்
நோயுற்ற கோழிகள் வெள்ளையாகக் கழியும். நின்று கொண்டே தூங்கும். நடுங்கியபடி இருக்கும். ஒரு கால் அல்லது இரண்டு காலும் செயலிழந்து போகும். காய்ச்சல் இருக்கும். பிரேத சோதனையில், எலுமிச்சை வடிவில் கால்களில் இரத்தம் உறைந்து புள்ளி புள்ளியாகக் காணப்படும்.
தடுப்பு முறைகள்
இறைச்சிக் கோழிக் குஞ்சுகளுக்கு அதன் தாயிடமிருந்து பெறப்பட்ட நோயெதிர்ப்பு சக்தியைக் கணக்கிட்டு, சரியான நாளில் தடுப்பூசியைப் போட்டால், முதல்வகை நோய்த் தாக்கத்தைக் கட்டுப்படுத்தலாம்.
நோயுள்ள பண்ணையில் ஒரு லிட்டர் நீருக்கு, ஒரு மில்லி வீதம் அயோடின் சுத்திகரிப்பானை, பத்து லிட்டர் நீரில் கலந்து கொடுத்தால் இறப்புகளைக் குறைக்கலாம்.
மேலும், அயோடின் கலந்த கிருமி நாசினியைப் பண்ணை முழுவதும் தெளிக்கலாம். உயிர்ச் சத்துகள் டி, இ, செலினியம், சோற்றுக் கற்றாழை ஆகியவற்றைக் கொடுத்தால், கோழிகளில் நோயெதிர்ப்பு சக்தி கூடி, இறப்புக் குறையும்.
பண்ணை மற்றும் பொருள்கள் சுத்தமாக இருக்க வேண்டும். நோயுள்ள பண்ணையில் இருந்து, தீவனம் மற்றும் கருவிகளை வாங்கக் கூடாது. தடுப்பூசிகளை, குளிர்ந்த நிலையில் வைத்திருந்து, சரியான முறையில் போட வேண்டும்.
மருத்துவர் பா.பாலமுருகன், உழவர் பயிற்சி மையம், தேனி, மருத்துவர் இரா.அருண், வேளாண் அறிவியல் மையம், புழுதேரி, கரூர் – 621 313.
சந்தேகமா? கேளுங்கள்!