இந்தியாவில் உள்ள மொத்தப் பரப்பளவு 328.7 மில்லியன் எக்டர். இதில், 140.1 மில்லியன் எக்டரில் பயிர் செய்யப்படுகிறது. இதில் 1.5 மில்லியன் எக்டரில் இயற்கை வேளாண்மை நடைபெறுகிறது.
உலகளவில் இயற்கை விளை பொருள்கள் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 2.59 சதமாகும். தற்போது, உணவே மருந்து என்பதை உணர்ந்த மக்கள், இயற்கை விளை பொருள்களை வாங்குவதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றனர். ஏனெனில், நவீன வேளாண்மையில் விளையும் பொருள்களில் கலந்திருக்கும் எஞ்சிய நஞ்சால் உடல் நலம் பாதிக்கப்படுவதாக மக்கள் கருதுகின்றனர்.
இதனால், இயற்கை விளைபொருள் அங்காடிகள் பரவலாக முளைத்து வருகின்றன. மேலும், இந்தப் பொருள்களின் விலையும் 20-30 சதம் வரை கூடுதலாக உள்ளது. அப்படி வாங்கினாலும், இப்பொருள்களின் உண்மைத் தன்மையில் மக்களுக்கு ஐயம் ஏற்படுகிறது.
இந்த ஐயம் மக்களுக்கு வரக்கூடாது என்பதற்காக ஏற்படுத்தப்பட்டது தான் அங்ககச் சான்றிதழ். இயற்கை விளை பொருள்கள் என்று ஏற்றுமதி செய்ய வேண்டுமானால், இந்தச் சான்றிதழ் அவசியமாகும்.
எனவே, இந்தச் சான்றிதழை எளிதாகப் பெறும் வகையில், மாநில அரசு, தமிழ்நாடு அரசு அங்ககச் சான்றளிப்புத் துறையை (TNOCD- Tamil Nadu Organic Certification Department) ஏற்படுத்தி உள்ளது. இத்துறை, APEDA- Agricultural and Processed Food Products Export Development Authority யின் வழிகாட்டுதலில், கோவையில் 2007 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.
மேலும், ISCOP- Indian Society for Certification of Organic Products என்னும் தனியார் அமைப்பும் அங்ககச் சான்றை வழங்குகிறது. இயற்கை வேளாண்மையில் ஈடுபடுவோர், தனி ஆளாகவோ அல்லது குழுவாகவோ இணைந்து, இந்த அமைப்புகள் மூலம் அங்ககச் சான்றைப் பெறலாம்.
விவசாயிகள் மட்டுமின்றி, தேனீ வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, வனப்பொருள்கள் சேகரிப்பில் உள்ளோரும், தங்களின் பொருள்களுக்கு அங்ககச் சான்றைப் பெறலாம்.
வழி முறைகள்
சாகுபடி மற்றும் பயிர்ப் பாதுகாப்பு முறைகள், இயற்கை வழியில் இருக்க வேண்டும். பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி, செயற்கை உரங்கள், மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளைப் பயன்படுத்தக் கூடாது.
ஆண்டுப் பயிராக இருந்தால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பும், பல்லாண்டுப் பயிராக இருந்தால், மூன்று ஆண்டுகளுக்கு முன்பும், அங்ககச் சான்றளிப்புத் துறையின் வழி முறைகளைப் பின்பற்ற வேண்டும்.
இயற்கை உரம், தாவரப் பூச்சி விரட்டிகள் மற்றும் இடுபொருள்களை, வேறு நிறுவனத்தில் இருந்து வாங்கினால், அந்த நிறுவனம், இரசாயனம் மற்றும் வேறு மாசற்ற பொருள்கள் என, தரச்சான்றைப் பெற்றிருத்தல் வேண்டும்.
பண்ணையின் செயல் முறைகள் அனைத்தும் பதிவேட்டில் பதியப்பட வேண்டும். எடுத்துக் காட்டாக, இடுபொருள்கள், பயிர்ச் சுழற்சி, வரவு செலவுக் கணக்குகள் மற்றும் அன்றாடப் பணிகள் பதிவு செய்யப்பட வேண்டும். பக்கத்து வயல்களின் கழிவுநீர் மற்றும் தெளிக்கப்படும் எவ்வித இரசாயன மருந்தும் கலக்கக் கூடாது.
விண்ணப்பித்தல்
சான்றுக்குப் பதிவு செய்யும் விவசாயிகள், TNOCD (www.tnocd.net.) என்னும் பக்கத்தில் இருந்து விண்ணப்பத்தைத் தரவிரக்கம் செய்யலாம். இத்துடன், ஆதார் அட்டை நகல், மார்பளவு நிழற்படம் இரண்டு, எப்.எம்.பி. வரைபடம், மண் மற்றும் நீர் பரிசோதனை விவரம்,
நிலப்பட்டா, சிட்டா, பயிர்த் திட்டம், பான் அட்டை நகல் ஆகியவற்றைச் சேர்த்து, பதிவுக் கட்டணத்தை வரைவோலையாக எடுத்து அனுப்ப வேண்டும். ஐந்து ஏக்கருக்குக் கீழ் இருந்தால், ரூ.2,700, ஐந்து ஏக்கருக்கு மேல் இருந்தால் ரூ.3,200 பதிவுக் கட்டணமாகும்.
சான்றிதழ்
பதிவு செய்து 3-4 மாதத்துக்குள் சான்றளிப்பு நிறுவன ஆய்வாளர்கள் ஆய்வு செய்து, வாய்ப்புச் சான்றிதழை வழங்குவார்கள். இந்த சான்று கிடைத்த பிறகு, காத்திருப்புக் காலம் தொடங்கும். இக்காலத்தில், அமைப்பின் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
பதிவு செய்யப்பட்ட நிலம், சான்றளிப்பு ஆய்வாளர்களின் கண்காணிப்பில் இருக்கும். இந்தச் சான்றை ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டும்.
மாடித்தோட்டம், நாற்றங்கால் மற்றும் பிற இடுபொருள்களுக்கு அங்ககச் சான்று
இதற்கும் மேற்கண்ட வழிமுறைகளே பொருந்தும். முறைப்படி விண்ணப்பித்த பிறகு, ஆய்வுகளை மேற்கொண்டு, காத்திருப்புக் காலச் சான்றிதழும் இலட்சினையும் (லோகோ) வழங்கப்படும்.
இதைக் கொண்டு, அங்ககப் பொருள்கள் என்று விற்பனை செய்யலாம். ஆனால், ஏற்றுமதி செய்ய முடியாது. மூன்று ஆண்டுக்குப் பிறகு, அங்ககச் சான்றைப் பெற்றுத் தான் ஏற்றுமதி செய்ய இயலும். இதிலும், அங்ககச் சான்றைப் பெற்ற நிறுவனத்திடம் இருந்தே இடுபொருள்களைப் பெற வேண்டும்.
அங்கக விளைபொருளை அறிதல்
தமிழ்நாட்டில் விற்பனையாகும் பொருள்களில் அங்கக விளை பொருள்களை அறிவதற்கு ஏதுவாக, ஜெய்விக் பாரத் என்னும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய நிறுவனத்தின் இலட்சினை இருக்கும்.
முகவரி
அங்ககச் சான்றைப் பெற விரும்புவோர், இயக்குநர், விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்றளிப்புத் துறை, 1424, தடாகம் சாலை, ஜி.சி.டி. அஞ்சல், கோயம்புத்தூர் – 641013 என்னும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். மின்னஞ்சல்: tnocdcbe@gmil.com
மு.ம.மௌதம், முனைவர் பட்ட ஆய்வு மாணவர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோவை.
சந்தேகமா? கேளுங்கள்!