My page - topic 1, topic 2, topic 3

வெய்யில் காலத்தில் ஆடுகள் பராமரிப்பு!

ஆடு

செய்தி வெளியான இதழ்: 2019 ஜூலை.

வெய்யில் காலத்தில் தீவனப் பற்றாக்குறை ஏற்படுவதால், ஆடுகளைக் குறைந்த விலைக்கு விற்பதைத் தவிர்க்க வேண்டும். இந்தக் காலத்தில் போதுமான பசுந்தீவனம் கிடைக்காமல் போவதால் ஆடுகளில் நோயெதிர்ப்பு சக்தி குறையும்.

எனவே, ஆட்டம்மை, ஆட்டுக்கொல்லி, வாய்ப்பூட்டு நோய், அடைப்பான் நோய் போன்ற தொற்று நோய்கள் ஏற்பட்டு ஆடுகள் பெருமளவில் இறக்க நேரும். இதைத் தடுக்க, தடுப்பூசிகளைப் போடலாம். சரியான பராமரிப்பை மேற்கொள்ளலாம்.

மேலும், ஆட்டுக் கொட்டிலைச் சுற்றி, நிழல் தரும் சூபாபுல், வேம்பு, முருங்கை, அகத்தி மரங்களை நடுவதால் போதிய பசுந்தீவனம் கிடைக்கும். அதைப் போல, மழைக் காலத்தில் ஊறுகாய்ப் புல்லைத் தயாரித்து வைத்துக் கொண்டால் கோடைக்காலத் தீவனப் பற்றாக்குறையைச் சரி செயயலாம்.

மேலும், சுத்தமான மற்றும் குளிர்ந்த குடிநீரை, வெந்தயம் கலந்து ஒருநாளைக்கு 4-5 முறை வழங்க வேண்டும். இராகிக்கூழை ஒருநேரம் ஆடுகளுக்குத் தரலாம்.

இதனால், தேவையான சத்துகள் கிடைப்பதோடு, உடல் வெப்பநிலையும் குறையும். எனவே, தொற்றுநோய்த் தாக்கம் குறையும். தினமும் காலை 11 முதல் மாலை 3 மணிவரை ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பக் கூடாது.

தினமும் வேப்பிலையைத் தீவனமாகக் கொடுத்தால், நுண்ணுயிர் மற்றும் நச்சுயிர் நோய்த் தாக்குதலில் இருந்து ஆடுகளைக் காக்கலாம். நிழலான பகுதிகளில் ஆட்டுக் கொட்டிலை அமைத்தால், அதிக வெப்பத் தாக்குதலைத் தவிர்க்கலாம்.

சினையாடுகள் மற்றும் ஆட்டுக் குட்டிகளைப் பிரித்து, நல்ல தீவனம் மற்றும் பராமரிப்பை மேற்கொண்டால், கோடைக்கால நோய்களைத் தவிர்த்து அதிக இலாபத்தை அடையலாம்.

கோடைக்கால நோயெதிர்ப்பு மூலிகைக் கலவையைத் தாயாரித்து வாரம் ஒருமுறை வழங்குவது, தொற்று நோய்களில் இருந்து ஆடுகளைக் காப்பாற்ற உதவும்.

ஐம்பது ஆடுகளுக்கான மூலிகைக் கலவைத் தயாரிப்பு

தேவையான பொருள்கள்: மருதாணியிலை 2 கிலோ,

சின்ன வெங்காயம் 2 கிலோ,

வேப்பிலை 2 கிலோ,

கறிவேப்பிலை 2 கிலோ,

மஞ்சள் 250 கிராம்,

சீரகம் 250 கிராம்,

வெந்தயம் 250 கிராம்,

தேங்காய் இரண்டு மூடி,

விளக்கெண்ணெய் 250 மில்லி,

வெல்லம் 250 கிராம்.

செய்முறை: இவை அனைத்தையும் ஒன்றாக அரைத்து, சுத்தமாக, குளிர்ந்த இடத்தில் வைத்து, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொடுக்க வேண்டும்.


முனைவர் ஜி.கலைச்செல்வி, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம், சென்னை 600 051.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks