பயன்கள் மிகுந்த மீன்கள்!

மீன்

செய்தி வெளியான இதழ்: 2018 மார்ச்.

மீன்களில் 60-80 சதம் ஈரப்பதம், 15-24 சதம் புரதம், 3-5 சதம் கொழுப்பு, 0.4-2 சதம் தாதுப்புகள் உள்ளன. தாவர உணவுகள் மூலம் முழுமையான புரதம் கிடைக்காத நிலையில், முட்டை மற்றும் இறைச்சியை விட, அதிகமான புரதத்தை மீன்கள் அளிக்கின்றன. மேலும், மீன்களில் கொலஸ்ட்ரால் என்னும் கெட்ட கொழுப்பு இல்லை. விலையும் மற்ற இறைச்சி வகைகளை விடக் குறைவு.

மீன்கள் கூட்டம் கூட்டமாக வாழ்கின்றன. அளவு, உருவம், அமைப்பு, உயிரியல் பண்புகள், வாழ்க்கை முறை, வாழிடங்கள் ஆகியவற்றில், மீன்கள் வேறுபட்டு உள்ளன.

நெல்சன் என்னும் ஆய்வாளர், உலகில் 21,723 மீனினங்கள் இருப்பதாகவும், இவற்றில் 4,044 பேரினங்கள் (Genus), 445 குடும்பங்கள் (Family) இருப்பதாகவும், 1981-இல் கூறினார்.

அடுத்து, 1989-இல், ஃபிரான்சிஸ்டே என்னும் மீன்வள ஆய்வாளர், இந்தியாவில் மட்டும் 1,418 இனங்கள், 342 பேரினங்கள் இருந்ததாகக் கூறியுள்ளார்.

மேலும், 254 குடும்பங்கள் மற்றும் 40 வகைகள் உள்ளதாகவும் தகவல் பதிவாகியுள்ளது. உலகிலுள்ள மொத்த மீன் வகைகளில் 80 சதம் இந்தியாவில் உள்ளன. அவற்றில் தமிழகத்தில் மட்டும் 11.72 சத இனங்கள், 23.96 சதம் மற்றும் 51 சதம் குடும்பங்கள் உள்ளன.

இந்தியாவில் 68 சத மீன்கள் இயல்பாகவே, ஏரி, நீர்த்தேக்கம், ஓடை, ஆறு, குளம் மற்றும் கடலிலிருந்து கிடைக்கின்றன. அவ்வகையில், இந்தியாவின் நீர்வளம் மீன்பிடித் தொழிலுக்கு மிகவும் உகந்ததாக உள்ளது.

உலகளவு மீன் உற்பத்தியில், இந்தியா மூன்றாம் இடத்திலும், உள்நாட்டு மீன் உற்பத்தியில் இரண்டாம் இடத்திலும் உள்ளது. மீன்வளத் துறை மூலம், சுமார் 11 கோடி மக்கள், நேரடியாக அல்லது மறைமுகமாக வேலை வாய்ப்பைப் பெறுகின்றனர்.

மேலும், ஆயிரக்கணக்கான மக்களின் துணைத் தொழிலாக உள்ளது. தற்போதைய மீன் உற்பத்தி, கடல் வளம் மூலம் 3.9 கோடி டன்னாக, உள்நாட்டு நீர்வளம் மூலம் 4.5 கோடி டன்னாக உள்ளது. இந்தியாவில் சுமார் 40 வகை மீன்கள், வணிக முக்கியம் பெற்றவையாக உள்ளன.

இந்தியாவின் கடற்கரை மற்றும் ஆற்றுப் படுகைகளில் வாழும் சுமார் 1.5 கோடி மக்களுக்கு, வலுவான வருமானம் மற்றும் வேலை வாய்ப்பை மீன்வளத்துறை வழங்குகிறது.

இது, மக்களிடம் மீன் வளர்ப்பை ஊக்குவித்தல், மீன்விதை வங்கிகளை அமைத்தல், கூடுகளில் மீன் முட்டைகளை வளர்த்தல் ஆகிய பல திட்டங்களைத் தீட்டியுள்ளது.

மேலும் இத்துறை, குறைந்த விலையில் தரமான மீன் புரதத்தை ஏற்றுமதி செய்வதன் மூலம், ஆண்டுக்கு 11,000 கோடி ரூபாய்க்கும் மேலாக, அந்நியச் செலாவணியை ஈட்டித் தருகிறது.

சராசரியாக, இந்தியாவில் உள்ள 291 சிறிய நீர்த் தேக்கங்கள் மூலம் 49.90 சதம், 110 நடுநிலை நீர்த் தேக்கங்கள் மூலம் 12.30 சதம், 21 பெரிய நீர்த் தேக்கங்கள் மூலம் 11.43 சதம், 422 குளங்கள் மூலம் 20.13 சதம் மீன்கள் கிடைக்கின்றன. இந்தியா முழுவதும் ஆறு, கழிமுகம், ஏரி, குளம், குட்டை என, நன்னீர் வளம் நிறைய உள்ளது.

இந்திய மீன்வளம், சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா, கிழக்கு மற்றும் மேற்கு ஆறுகள் என, ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. மேலும், இந்திய ஆற்று மீன்வளம், கங்கை, சிந்து, பிரம்மபுத்திரா ஆறுகள் அடங்கிய, இமாலய ஆற்று வளம் எனவும்,

கிழக்கு மற்றும் மேற்கு ஆறுகள் அடங்கிய, தீபகற்ப ஆற்று வளம் எனவும் இரண்டாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. இவற்றின் துணை ஆறுகள், கிளைக் கால்வாய்கள் மூலம் 930 மீனினங்கள், 326 பேரினங்கள் கிடைக்கின்றன.

தென்னிந்தியாவில் கோதாவரி, காவிரியாற்று மீன்வளம் முக்கியமானது. காவிரி ஆற்றில் 80 மீன் வகைகள், 23 குடும்பங்களைச் சேர்ந்த மீன்கள் உள்ளன. இந்த மீன்கள் மற்ற ஆற்று மீன்களில் இருந்து வேறுபட்டுக் காணப்படுகின்றன.

மீன் வளர்ப்பு – இந்தியா

பொதுவாக மீன் வளர்ப்பை, நன்னீர், உவர்நீர், கடல் நீரில் மேற்கொள்ளலாம். நம் நாட்டில் சுமார் 29,000 கி.மீ. நீள ஆறுகளும், 31,50,000 எக்டர் நீர்த் தேக்கங்களும், 2,00,000 எக்டர் நீர் தேங்கும் சமவெளிகளும், நன்னீர் மீன் வளர்ப்புக்கான பொது நீர்வளங்களாக உள்ளன.

இந்தியாவில் 95 சத மீன் உற்பத்தி நன்னீர் மூலமே நடக்கிறது. இதில், 85 சதத்துக்கும் அதிகமான மீன்கள், கெண்டை மீன்கள் வளர்ப்பு மூலம் கிடைக்கின்றன. இந்தியாவில் கெண்டை மீன் வளர்ப்பு வேகமாக வளர்ந்து வரும் தொழிலாக உள்ளது.

காரணங்கள்

இந்திய தட்ப வெப்பச் சூழலில் நன்கு வளரும் கெண்டை (Carp) மீன்கள், குறுகிய காலத்திலேயே வேகமாக வளர்ந்து வருமானத்தைத் தருகின்றன. தமிழ்நாட்டில் உள்ள நன்னீர் நிலைகளில் பரவலாக உள்ளன.

இதன் தாயகம், ஐரோப்பா மற்றும் ஆசியா ஆகும். எனினும், உலகின் பல நாடுகளில், பணத்துக்காக, நீர்த் தாவர வளர்ச்சியைக் கட்டுப்படுத்த மற்றும் அழகுக்காக வளர்க்கின்றனர்.

கிண்டு என்பதற்குப் புரட்டிப்போடு என்னும் பொருளும் உண்டு. இந்தக் குடும்பத்து மீன்களின் கீழ்வாயில், கிண்டுவதற்கு ஏற்ப, பக்கத்துக்கு ஒன்றாக இரண்டு சிறு பகுதிகள் உள்ளன. அதனால், கிண்டு+ஐ= கெண்டை என்னும் சொல் உருவானது என்பர்.

கெண்டை மீன், தனது மேலுதட்டின் மீதுள்ள இரண்டு இணை குட்சை மீசைகளின் உதவியால், ஆற்றின் அடியில் இரையைத் தேடியபடி மெதுவாக நீந்தும். இந்த மீன்கள், வெபுரியன் என்னும், சிறந்த ஒலியுணர் உறுப்பைப் பெற்றுள்ளன.

டிரைபோலோடன் (Tribolodan) என்னும் பேரினம் மட்டும், உப்பு நீரிலும் வாழும். நெடுங்காலமாக மனிதன் உண்ணும் மீன் வகைகளில், கெண்டை மீன்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன.

ஆற்றில் வாழும் சில கெண்டை மீன்களின் தேவைகளும், நடத்தைகளும், கட்டமைப்பும் வேறாக உள்ளன. இவை, மற்ற மீன்களை உண்பதில்லை. பூச்சிகளின் லார்வாக்கள், மெல்லுடலிகள், புழுக்கள் போன்ற நுண்ணிய சிற்றுயிரிகளை, நீர்த் தாவரங்களை மட்டுமே உணவாகக் கொள்ளும்.

கெண்டை மீன்கள் வளர்ப்பும், குஞ்சு உற்பத்தித் தொழில் நுட்பங்களும் சரியான நிலையை எட்டியுள்ளன. அதனால், தட்டுப்பாடு இல்லாமல் மீன் குஞ்சுகள் கிடைக்கின்றன.

இந்தியாவில் கெண்டை மீன்களின் தேவை அதிகமாக இருப்பதால், இங்கு விற்பனை வாய்ப்பு அதிகம். இந்த மீன்கள், தாவரப் பொருள்கள், கழிவுகள் மற்றும் சிறிய உயிரிகளை உணவாகக் கொள்வதால், குறைந்த செலவில் அதிகளவில் உற்பத்தி செய்யலாம்.

எனவே, இந்தத் தொழிலுக்கு அதிக முதலீடு தேவையில்லை. ஓரளவுக்கு நோயெதிர்ப்பு ஆற்றல் இந்த மீன்களுக்கு இருப்பதால், இந்த மீன்கள், சுற்றுப்புறச் சூழலிலுள்ள இடர்களைத் தாங்கி வளரும்.

தனித்தனி இனமாக வளர்ப்பதை விட, பல பெருங்கெண்டை மீன் இனங்களை, ஒரே குளத்தில் எளிதாக வளர்க்கலாம். இது கூட்டுமீன் வளர்ப்பு எனப்படும்.

மீன் இனவிருத்தி

கட்லா, ரோகு, மிர்கால், வெள்ளிக் கெண்டை, புல்கெண்டை மீன்கள், இரண்டு வயதில் இனவிருத்திக்குத் தயாராகும். இணக்கமான தட்ப வெப்பச் சூழலில், ஆறு போன்ற ஓடும் நீர்நிலைகளில், இயற்கையாகவே இனவிருத்தி செய்யும் இந்த மீன்களை, குளங்களில், தகுந்த காலநிலை நிலவும் போது, தூண்டுதல் முறையில் இனப்பெருக்கம் செய்யலாம்.

கூட்டுமீன் வளர்ப்பு

பெருங்கெண்டை இனங்கள் ஒவ்வொன்றும் மாறுபட்ட உணவுப் பழக்கத்தைக் கொண்டவை. எனவே, மீன் குளத்தில் ஏதாவது ஒரு வகையை மட்டும் வளர்த்தால், அந்த இனம் அதன் தன்மைக்கு ஏற்ற இயற்கை உணவை மட்டுமே பெருமளவில் பயன்படுத்தும்.

இந்நிலையில், நீரில் உருவாகும் பிற இயற்கை உணவு வகைகள் முழுதாகப் பயன்படாமல் கழிவாகவே போகும். இந்த நிலையைத் தவிர்க்க, பல்வேறு கெண்டை இனங்களை ஒன்றாக வளர்க்கலாம். இதனால், ஒரே உணவுக்கான தேடலும் போட்டியும் தவிர்க்கப்படும்.

இந்தியக் கெண்டை மீன்கள்

திணை: விலங்கினம். தொகுதி: முதுகுநாணி. வகுப்பு: மெள்ளெலும்புத் துடுப்பிகள். துணை வகுப்பு: பெருமாறாத் துடுப்பிகள். உள்வகுப்பு: துருத்தி வாய்கள். பெருவரிசை: வெபுரியன் ஒலியுணர் உறுப்பிகள்.

வரிசை: முதுகுத் துடுப்பிகள். குடும்பம்: கெண்டை மீன்கள். பேரினம்: 12-15 எண்ணிக்கை. இனம்: 180-210 எண்ணிக்கை. இவை, கெண்டை, கெளுத்தி, நெத்திலி, நெய்மீன், அயிரை, விரால்.

இந்தியப் பெருங்கெண்டை இனங்கள்

கட்லா: தமிழில் தோப்பா மீன், கங்கைக் கெண்டை எனப்படும். கங்கை ஆற்றைப் பிறப்பிடமாகக் கொண்ட கட்லா மீன், இந்தியப் பெருங்கெண்டை இனங்களில் மிக வேகமாக வளரும் தன்மை மிக்கது. பெரிய தலை, அகன்ற உடலைக் கொண்ட இவ்வினம், நீரின் மேற்பரப்பில் அதிகமாக இருக்கும்.

விலங்கின நுண்ணுயிர் மிதவைகள், பாசிகள் மற்றும் மட்கிய பொருள்களை உண்ணும். இதன் உணவுப் பழக்கத்துக்கு ஏற்ற வகையில், சற்று மேல்நோக்கி வாய் அமைந்துள்ளது.

அதிகளவில் அங்கக உரங்கள் சேரும் குளத்தில் இம்மீன் வேகமாக வளர்வதால், பொதுக் குட்டைகளில் வளர்க்கப்படுகிறது. மிதவை உயிரிகளால் குளத்தில் ஏற்படும் கலங்கல் தன்மையைக் குறைக்க, கட்லாவுடன் இறால்கள் சேர்த்து வளர்க்கப் படுகின்றன.

நன்னீரிலும் உவர்நீரிலும் வளர்க்கப்படும் கூட்டு மீன் வளர்ப்பில், 10-30 சத அளவில் கட்லா மீன்கள் சேர்க்கப்படுகின்றன. முறையாகக் கட்லாவை வளர்த்தால், ஓராண்டில் ஒரு மீனின் எடை 1-1.5 கிலோ வரையில் இருக்கும். இம்மீன் இரண்டு வயதுக்கு மேல் இனப்பெருக்க நிலைக்கு வரும்.

ரோகு: கெண்டை மீன் இனங்களில் ரோகு சுவையாக இருக்கும். இதன் தலை சிறியதாக, வாய் நேராக, கீழ்த்தாடை உதடு சுருக்கங்களாக இருக்கும். நன்கு வளர்ந்த மீன், ஓரளவு நீளமாக உருண்டையாக இருக்கும்.

செதில்கள் சிவப்பாக இருக்கும். அழுகும் தாவரம், மிதக்கும் பாசி, நீரிலுள்ள திடப்பொருளில் படியும் பாசி ஆகியவற்றை விரும்பி உண்ணும்.

மேலும், நாம் இடும் உணவுகளையும் விரும்பிச் சாப்பிடும். ரோகு மீன்களை நாம் இடும் உணவுகளைக் கொண்டே வளர்க்க முடியும். இதனால், பல இடங்களில், ரோகு மீன்கள் மட்டும் தனியாக வளர்க்கப்படுகின்றன.

ரோகு மீன்களுக்கு விற்பனை வாய்ப்பு அதிகமாக இருப்பதால், கூட்டுமீன் வளர்ப்பில், இந்த மீன்கள் 25-50 சதம் இருப்பு வைக்கிறார்கள். இம்மீன், ஓராண்டில் முக்கால் கிலோ முதல் ஒரு கிலோ வரையில் வளரும்.

மிர்கால்: நீரின் அடியில் இம்மீன்கள் வாழும். அங்கே கிடக்கும் கழிவுகள், மட்குப் பொருள்கள், சேற்றிலுள்ள சிறிய உயிரினங்கள் ஆகியவற்றை உண்டு வாழும். இம்மீனின் வாய் சற்று உள்ளடங்கி, கீழ்நோக்கி இருக்கும். நீண்ட உடலுடன் வால் துடுப்பின் கீழ்ப்பகுதி சிவப்பாக இருக்கும். ஓராண்டில் 500-750 கிராம் வளரும்.

அயல்நாட்டுக் கெண்டைகள்

வெள்ளிக் கெண்டை: சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்ட இம்மீன், ஓராண்டில் 1.5-0.750 கிலோ வரை வளரும்.

புல்கெண்டை: இதுவும் சீனத்தில் இருந்து வந்தது தான். ஓராண்டில் 1-1.5 கிலோ வரை வளரும்.

சாதாக்கெண்டை: இதில் மூன்று வகைகள் உள்ளன. கண்ணாடிக் கெண்டை பாங்காக்கில் இருந்து வந்தது. ஆண்டுக்கு 1-1.5 கிலோ வரை வளரும். கண்ணாடிக் கெண்டை அழகுக்காக வளர்க்கப்படுகிறது. இதில், தங்கமீன், கோய் கெண்டை என இரு வகைகள் உள்ளன.

தமிழ்நாட்டில் மீன் வளர்ப்பு

தேசியளவில், மீன்பிடிப்பு மற்றும் வளர்ப்பில் நான்காவது மாநிலமாகத் தமிழ்நாடு விளங்குகிறது. 1076 கி.மீ. நீளமுள்ள கடற்கரை, தமிழகத்தில் உள்ளது. மேலும், அகலமான கண்டத்திட்டும் மீன் வளத்துக்கு முக்கியக் காரணம்.

தமிழகக் கடற்கரையை ஒட்டியுள்ள 13 மாவட்டங்களில், சுமார் 591 மீனவக் கிராமங்கள் உள்ளன. கடல் சார்ந்த மீன் உற்பத்தியில் 40 சதம், தஞ்சை, நாகை, திருவாரூர், இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து கிடைக்கிறது.

தமிழ்நாட்டில், 370 எக்டர் பரப்பில் உள்நாட்டு நீர் நிலைகள், 63,000 எக்டர் பரப்பில் கழிமுகம், காயல்கள் மற்றும் சதுப்பு நிலங்கள் உள்ளன. எண்ணூர், பழவேற்காடு ஆகிய ஏரிகளில், இறால் மீன்கள் செயற்கை முறையில் வளர்க்கப் படுகின்றன.

மீன் பிடிப்புக்கும், கடல்சார் தொழிலுக்கும் இராமேசுவரம் பெயர் பெற்றது. இந்தத் தீவில் பிடிக்கப்படும் மீன்களைப் பதப்படுத்தி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.

இந்திய மீன்வள நிறுவனங்கள்

மத்திய மீன்வளக் கல்வி நிலையம், மும்பை, மராட்டியம். மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு நிலையம், சென்னை, தமிழ்நாடு. மத்திய நன்னீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம், பாரக்பூர், மேற்கு வங்கம்.

மத்திய நன்னீர் மீன் வளர்ப்பு நிலையம், கொச்சி, கேரளம். குளிர்நீர் மீன்வள ஆராய்ச்சி இயக்ககம், பிம்டால். தேசிய மீன் மரபணு வளக்குழு, லக்னோ, உத்தரப்பிரதேசம். மீன்வளத் துறை, தமிழ்நாடு அரசு.


முனைவர் மு.பஷீரா ஜான், உதவிப் பேராசிரியர், விலங்கியல் துறை, இராணி மேரி கல்லூரி, சென்னை – 600 004.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!