உடலில் நோயெதிர்ப்பு அமைப்பு என்பது, தீமை செய்யும் நுண் கிருமிகளின் பிடியில் இருந்து உடலைக் காக்கக் கூடியது. இதை வலுப்படுத்த, சத்தான உணவுகள் மிகவும் அவசியம். தினமும் சத்துள்ள உணவுகளை உண்பதன் மூலமே நோயெதிர்ப்பு ஆற்றல் உருவாகும்.
நல்ல உணவு என்பது, முழுத் தானியங்கள், சிறு தானியங்கள், குறைந்த மாவுச்சத்து மற்றும் அதிகப் புரதமுள்ள உணவுகளைக் கொண்டது. இதில், உடலுக்குத் தேவையான சக்தியைத் தரும் கூட்டு கார்போ ஹைட்ரேட்கள், நார்ச்சத்து மற்றும் தாவர வேதிப் பொருள்கள் உள்ளன.
பழங்கள் மற்றும் காய்கறிகளில், வைட்டமின்கள், தாதுப்புகள், நோயெதிர்ப்பு சக்தி, பினாலிக் கூட்டுப் பொருள்கள் மற்றும் எதிர்ப்பு ஒவ்வாமைப் பொருள்கள் உள்ளன. பால், தயிர், யோகர்ட் என்னும் சுவையான தயிர் மற்றும் பால் பொருள்களில், கால்சியமும் புரதமும் மிகுந்துள்ளன.
இவை உடற் செல்களை வலுப்படுத்தும். இவற்றிலுள்ள நல்ல நுண்ணுயிர்கள் நார்ச்சத்தை நொதிக்க வைத்து, குறுகிய சங்கிலியுள்ள கொழுப்பு அமிலங்களை உருவாக்கும். இவை நோயெதிர்ப்பு சக்தியை அளிக்கும்.
மேலும், உணவில் பயன்படும் கிராம்பு, பட்டை, மஞ்சள், சீரகம், இஞ்சி, பூண்டு போன்ற மசாலாப் பொருள்களில், நோய்க் கிருமிகளிடம் இருந்து உடலைக் காக்கும் பண்புகள் உள்ளன.
குறைந்த கொழுப்புள்ள இறைச்சி, மீன், முட்டை, தாவரப் புரத உணவுகளான பீன்ஸ், பருப்பு வகைகள், கொட்டைகள், எண்ணெய் வித்துகள் ஆகியன, நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கும். நார்ச்சத்து மற்றும் தாவர வேதிப் பொருள்கள் அடங்கிய தாவரப் புரதங்கள், உடலில் நோயெதிர்ப்பு ஆற்றலை உறுதி செய்யும்.
வைட்டமின் ஏ, சி, இ, டி, பி6, பி12, இரும்பு, துத்தநாகம், செலினியம், நார்ச்சத்து ஆகியன, நோயெதிர்ப்பு ஆற்றலைக் காப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தினமும் பெரியவர்கள், 30-40 கிராம் நார்ச்சத்து உணவை உண்ண வேண்டும்.
முழுத் தானியங்கள், பருப்புகள், காய்கறிகள், பழங்கள், நொதி உணவுகளான தயிர், யோகர்ட், இட்லி, ஆப்பம், நீராகாரம், ஊறுகாய் போன்றவை, நம் குடலில் நல்ல பாக்டீரியாக்களை உருவாக்கும். இவை, தீய பாக்டீரியாக்களை அழிக்கும்.
சத்துகளும் உணவுகளும்
வைட்டமின் ஏ என்னும் பீட்டா கரோட்டீன்: கீரைகள், பப்பாளி, மாம்பழம், ஆரஞ்சு, மஞ்சள்நிறக் காய்கறிகள், பழங்கள், மாமிசம்.
வைட்டமின் சி: சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு, பப்பாளி, மாம்பழம், திராட்சை, நெல்லிக்காய்.
வைட்டமின் இ: கீரைகள், மீன், கொட்டைகள், எண்ணெய் வித்துகள்.
செலினியம்: வாதுமைக்கொட்டை, மாமிசம், கடல் உணவுகள்.
தாமிரம்: முழுத் தானியங்கள், பீன்ஸ், கொட்டைகள், மீன், எண்ணெய் வித்துகள்.
துத்தநாகம்: மாமிசம், பால், பால் உணவுகள், பருப்புகள்.
வைட்டமின் டி: முட்டை, மீன், பால், பால் உணவுகள், காளான்.
மெக்னீசியம் கொட்டை உணவுகள்
மிதமான பணியில் ஈடுபடும் ஆணுக்கும், பெண்ணுக்கும் தினமும் தேவைப்படும் சத்து விவரங்களை, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும், தேசியச் சத்து நிறுவனமும் பரிந்துரை செய்துள்ளன.
சத்துகள் ஆண் (கிராம்) பெண் (கிராம்)
தானியம், சிறுதானியம்: ஆண் 360 பெண் 300
பருப்பு வகைகள்: ஆண் 120 பெண் 90
கீரை வகைகள்: ஆண் 150 பெண் 150
காய்கறிகள்: ஆண் 200 பெண் 200
கிழங்கு வகைகள் : ஆண் 100 பெண் 100
பழங்கள்: ஆண் 150 பெண் 150
பால்: ஆண் 300 மில்லி பெண் 300 மில்லி
எண்ணெய், கொழுப்பு : ஆண் 30 பெண் 20
எண்ணெய் வித்துகள்: ஆண் 30 பெண் 30
எண்ணெய்யில் பொரித்த உணவுகள், சர்க்கரை இனிப்பு உணவுகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தானியங்களால், உடலில் கொழுப்பும் சர்க்கரையும் கூடும். எனவே, இவற்றைத் தவிர்ப்பதுடன், செரிவுறாக் கொழுப்புள்ள, வனஸ்பதி, விரைவு உணவுகள் மற்றும் அதிகக் கொழுப்புள்ள இறைச்சியியும் குறைக்க வேண்டும்.
புகைக்கும் பழக்கத்தால், கட்டுப்பாடற்ற மூலக்கூறுகளான ப்ரிரேடிக்கல்ஸ் உருவாகி, நோயெதிர்ப்பு சக்தியைக் குறைக்கும். எனவே, சரிவிகித உணவை அன்றாடம் உண்டு உடல் நலத்தைக் காப்போம்.
முனைவர் செ.ஜேசுப்பிரியா பூர்ணக்கலா, உதவிப் பேராசிரியர், வேளாண்மை அறிவியல் நிலையம், வம்பன். முனைவர் கி.சாந்தி, இணைப் பேராசிரியர், சமுதாய அறிவியல் கல்லூரி, மதுரை.