சீனித் துளசி சாகுபடி!

சீனித் துளசி சாகுபடிக்கு நிலத்தை நன்கு உழ வேண்டும். சீனித் துளசிச் செடி 10-15 செ.மீ. உயரம் வரை வளரும். சிவப்பு வண்டல் நிலத்தில் நன்கு வளரும். 

செய்தி வெளியான இதழ்: 2018 அக்டோபர்.

லகத்தில் மக்கள் தொகை பெருகுவதைப் போல, நோய்களும் பெருகிக் கொண்டே உள்ளன. இவற்றுக்கான தீர்வுக்காக, ஆங்கில மருந்து மாத்திரைகளைச் சாப்பிடும் போது பக்க விளைவுகள் உண்டாகின்றன. அதனால், மக்களின் பார்வை இப்போது மூலிகை மருத்துவத்தின் பக்கம் திரும்பி உள்ளது.

மூலிகைகள் பட்டியலில் முக்கியமானது துளசி. அந்த இனத்தைச் சார்ந்தது இனிப்புச் சுவையுள்ள சீனித் துளசி. இதை ஆங்கிலத்தில் ஸ்டீவியா ரியோடியானா என அழைப்பார்கள்.

சீனித் துளசியின் தாயகம் தென்னமெரிக்கா. இது பராகுவேயில் மிகுதியாக உள்ளது. சீனித் துளசி இலையில் உள்ள ஸ்டீவியோசடு 3-10x, ரெபடையோசடு 13x ஆகிய வேதிப் பொருள்கள் தான் இதன் இனிப்புக்குக் காரணம்.

ஜப்பான், கொரியா, சீனா, பிரேசில், கனடா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் சீனித் துளசி கூடுதலாகப் பயிராகிறது. இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில் சாகுபடி செய்யப்படுகிறது. இதன் ஏற்றுமதியில் சீனம் முதலிடம் வகிக்கிறது.

சீனித் துளசிச் செடி 10-15 செ.மீ. உயரம் வரை வளரும். சிவப்பு வண்டல் நிலத்தில் நன்கு வளரும். கார அமிலத் தன்மை 6-7-க்குள், வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் இருக்க வேண்டும்.

சீனித் துளசி சாகுபடிக்கு நிலத்தை நன்கு உழ வேண்டும். ஏக்கருக்கு 10 டன் தொழுவுரம் மற்றும் 100:45:45 கிலோ தழை, மணி, சாம்பல் சத்துகளை அடியுரமாக இட வேண்டும்.

அரையடி இடைவெளியில் நட வேண்டும். வாட்டமின்றிப் பாசனம் செய்ய வேண்டும். சீனித் துளசியில் நமக்குத் தேவை இலைகள் மட்டுமே. எனவே, பூக்கும் போது அவற்றைக் கிள்ளி விட்டால் நன்கு செழித்து வளரும்.

மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை நல்ல மகசூல் கிடைக்கும். ஏக்கருக்கு ஓராண்டில் 3,000 கிலோ காய்ந்த இலைகள் கிடைக்கும். இதனால் கிடைக்கும் வருமானம் ஒரு இலட்சம் ரூபாயாகும்.

20 கிராம் சீனித் துளசி இலைகள் 50 கிராம் நாட்டுச் சர்க்கரைக்குச் சமம். கரும்பை விட 30 மடங்கு இனிப்புச் சுவை உள்ளது. இதில் வைட்டமின்கள் ஏ, சி, கால்சியம், மெக்னீசியம், ஜிங்க் போன்ற சத்துகளும் உள்ளன. எனவே, டீ, காபி, பழச்சாறு, ரொட்டி, ஐஸ்கிரீம் போன்றவற்றில், சர்க்கரைக்குப் பதிலாக இந்த இலைகளைச் சேர்க்கலாம்.

சர்க்கரை நோயாளிகள் இதைப் பயன்படுத்தலாம். சீனித் துளசிச் செடியை வீட்டில் வளர்த்தால் சர்க்கரை தேவைப்படாது. இந்த இலைகளை மென்றால் 5-7 நிமிடம் வரையில் இனிப்புச் சுவை நாவில் அப்படியே இருக்கும்.

நூறு கிராம் சீனித்துளசி இலைகளில், பாலிபீனால் 4.2 கி., ஸ்டீவீயோசைடு 11.3 கி., நீர் 7.7 கி., புரதம் 12.0 கி., கொழுப்பு 2.7 கி., சாம்பல் 8.4 மி.கி., சோடியம் 32.7 மி.கி., பொட்டாசியம் 839 மி.கி., இரும்பு 31.1 மி.கி., கால்சியம் 722 மி.கி. உள்ளன.

இரத்த அழுத்த நோய்க்கு அருமருந்தாக உள்ளது. தினமும் காலையில் இரண்டு இலைகளைச் சாப்பிட்டால், உடல் கனம் குறையும். எல்லாருக்கும் ஏற்றது சீனித் துளசி.

எனவே, துளசிச் செடியைப் புனிதமாக வீட்டில் வளர்ப்பதைப் போல, சீனித் துளசிச் செடிகளை வளர்த்து வெள்ளைச் சர்க்கரைப் பயனைக் குறைப்போம்; நோயற்று வாழ்வோம்.


பா.சரண்யா, சு.சுகுணா, சு.பூங்குழலி, வி.வினோத் குமார், தந்தை ரோவர் வேளாண்மைக் கல்லூரி, பெரம்பலூர் – 621 115.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!