கால்நடைகள் ஈனும் நாளை அறிவது எப்படி?

கால்நடை

செய்தி வெளியான இதழ்: 2019 ஜனவரி.

ந்தியா வேளாண்மை மிகுந்த நாடு. அதனால், வேளாண்மைக்குப் பயன்படும் கால்நடைகள் வளர்ப்பும் நம் வாழ்க்கையுடன் இணைந்த ஒன்று. கிராமங்களில் ஆடு, மாடு, கோழிகள் இல்லாத வீடே இருக்காது.

இந்தக் கால்நடைகளில் சரியான காலத்தில் இனச் சேர்க்கை நடந்து, சரியான காலத்தில் உற்பத்தி கிடைத்தால் தான், கால்நடை வளர்ப்பின் முழுப் பயனை அடைய முடியும்.

இப்படி இனச் சேர்க்கை செய்யப்பட்ட ஆடுகள், மாடுகள் எப்போது ஈனும் என்னும் விவரத்தை நம் விவசாயிகள் சரியாகத் தெரிந்து வைத்துக் கொள்வது இல்லை. ஈற்றுக் காலம் நெருங்கியதும், கால்நடைகளின் உடலில் நிகழும் மாற்றங்களை வைத்து, உத்தேசமாக ஒரு நாளைச் சொல்லுவார்கள்.

எடுத்துக் காட்டாக, மாடுகளின் மடியில், காம்புகளில் பால் சுரப்பு ஏற்படுதல் மற்றும் புட்டப் பகுதியில் குழி விழுவதை வைத்து, ஏதாவது ஒருநாளைச் சொல்லுவார்கள். அந்த நாள் உறுதியானதாக இருக்காது.

ஆனால், ஒரு கால்நடையின் சினைக் காலத்தைக் கணக்கில் கொண்டு, இனச் சேர்க்கை நாளில் இருந்து அது ஈனும் நாளைத் துல்லியமாகச் சொல்லிவிட முடியும்.

பசுவின் சினைக் காலம் 283 நாட்கள். எருமையின் சினைக் காலம் 309 நாட்கள். பன்றியின் சினைக் காலம் 114 நாட்கள். செம்மறி ஆட்டின் சினைக் காலம் 148 நாட்கள். வெள்ளாட்டின் சினைக் காலம் 151 நாட்கள். குதிரையின் சினைக் காலம் 336 நாட்கள்.

இந்த அடிப்படையில், ஜனவரி முதல் தேதியில் இனச் சேர்க்கை செய்யப்படும் இந்தக் கால்நடைகள் எந்த நாளில் ஈனும் என்பதைப் பார்ப்போம்.

பசுமாடு அக்டோபர் 11 இல் ஈனும். எருமை மாடு நவம்பர் 6 இல் ஈனும். பன்றி ஏப்ரல் 25 இல் ஈனும். செம்மறியாடு மே 29 இல் ஈனும். வெள்ளாடு ஜூன் 1 இல் ஈனும். குதிரை டிசம்பர் 3 இல் ஈனும்.

அதாவது, இனச் சேர்க்கை செய்த நாளை விட்டு விட்டு, அடுத்த நாளிலிருந்து கணக்கிட்டால், சினைக் காலத்தின் கடைசி நாளில் அந்தக் கால்நடை ஈனும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

அதற்காகத் தான், விவசாயிகள் தங்களின் கால்நடைகளுக்கு இனச் சேர்க்கை செய்யும் நாளைக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறோம்.

இதனால் மேலும் பல நன்மைகள் உண்டு. குறிப்பிட்ட கால்நடை சினையாகி விட்டதா இல்லையா என்பதை அறிய முடியும். குறிப்பிட்ட நாளில் ஈனவில்லை என்றால், உடனே என்ன காரணம் என்பதைக் கால்நடை மருத்துவரிடம் காட்டித் தெளிவைப் பெற முடியும். ஏனெனில் ஈற்றுக் காலம் கடந்து போதல், அந்தக் கால்நடைக்கும், வயிற்றில் இருக்கும் கன்றுக்கும் ஆபத்தாகக் கூட முடியலாம்.

அதனால், இதுவரையில் இந்தப் பழக்கம் இல்லா விட்டாலும், இனிமேல் இந்த முறையைக் கடைப்பிடித்து விவசாயிகள் பயனடைய வேண்டும்.


டாக்டர் வி.இராஜேந்திரன், முன்னாள் இணை இயக்குநர், கால்நடைப் பராமரிப்புத் துறை, நத்தம், திண்டுக்கல் மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!