இறைவனின் அற்புதப் படைப்பு விவசாயிகள்!

விவசாயி

செய்தி வெளியான இதழ்: 2018 செப்டம்பர்.

ஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி உள்ளிட்ட காவிரிப் பாசனப் பரப்பு, தமிழகத்தின் நெற்களஞ்சியம் எனப்படுகிறது. ஆனால், இதற்கான நீராதாரம் கர்நாடக மாநிலத்திடம் இருக்கிறது. காவிரி நீரில் காலங்காலமாக நமக்கிருக்கும் உரிமையை, அந்த மாநிலம் வழங்க மறுத்து வந்ததால், நமது உரிமையைத் தக்க வைப்பதற்காக, 1991-96 காலக்கட்டத்தில் அப்போதைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அதையடுத்து, இந்த வழக்கை விசாரிப்பதற்காக, காவிரி நடுவர் நீதிமன்றம் அமைக்கப்பட்டது. அந்த மன்றம், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க ஆணையிட்டது. ஆனால், அதன்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாத நிலையில், மேலும் மேலும் வழக்குகள், விசாரணைகள் என்று காலம் கடந்து கொண்டே வந்தது. என்று முடியும் இந்தக் காவிரி வழக்குகள், என்று காத்துக் கிடந்தோம்.

எதற்கும் ஒரு முடிவுண்டு என்பதற்கு இணங்க, இந்தாண்டில் உச்ச நீதிமன்ற ஆணைப்படி, மத்திய அரசால் காவிரி மேலாண்மை ஆணையமும், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவும் அமைக்கப்பட்டன.

காவிரி நீர் விவகாரத்தில், நமக்கான உரிமையை நிலை நாட்ட வேண்டும் என்பதில், ஜெயலலிதா திடமாக இருந்தார். அவர் மறைவுக்குப் பின், தற்போதைய முதல்வரும் இதே நிலையை எடுத்ததால், இன்று காவிரிச் சிக்கலுக்குத் தீர்வு ஏற்பட்டிருக்கிறது.

தன்னை ஒரு விவசாயி என்று உறுதிப்படுத்திய ஜெயலலிதா, விவசாயத்தை வளரச் செய்வதற்காக, தரிசுநில மேம்பாட்டுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். நிலத்தடி நீரை உயர்த்துவதற்காக, மழைநீர்ச் சேமிப்புத் திட்டத்தைக் கொண்டு வந்தார்.

ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர்வதற்காக, கறவை மாடுகள் வழங்கும் திட்டம், ஆடுகள் வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்தார். இரண்டு மடங்கு உற்பத்தி, மூன்று மடங்கு வருமானம் என்னும், இரண்டாம் பசுமைப் புரட்சியை அறிமுகம் செய்தார்.

இப்படி, தமது மதிப்புக்குரிய தலைவி அறிவித்துச் செயல்படுத்திய அத்தனை திட்டங்களையும், அப்படியே செயல்படுத்தி வருகிறார் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி. இந்தாண்டும் காவிரி விவசாயிகளின் நன்மைக்காக, குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தை அறிவித்தார்;

காவிரி வெள்ள எச்சரிக்கை விடப்பட்ட நேரத்தில், அந்தப் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். முக்கொம்பு அணை உடைப்பை நேரில் பார்வையிட்டு, அதைப் போர்க்கால வேகத்தில் சரி செய்ய உத்தரவிட்டார்.

வெள்ளக் காலத்தில் கடலுக்குச் செல்லும் காவிரி நீரைச் சேமித்து வைத்துப் பயன்படுத்தவும், அதை நிலத்தடி நீராக மாற்றவுமான திட்டத்தைத் தயாரித்துக் கொடுக்கும் பொறியாளர்கள் குழுவை அமைத்திருக்கிறார்.

ஒரு கிராமத்தில் பிறந்து, இன்று தமிழகத்தின் முதல்வராக இருந்தாலும், தமது தலைவியைப் போலவே, தன்னை ஒரு விவசாயி எனப் பெருமையுடன் சொல்லிக் கொள்ளும் தமிழக முதல்வர், விவசாயிகள் மற்றும் கிராம மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் என்பதிலும், அக்கறையுடன் செயலாற்றி வருகிறார். இதற்கொரு சிறிய எடுத்துக்காட்டாக அண்மையில் அவர் பங்கேற்ற நிகழ்ச்சி அமைந்திருந்தது.

இம்மாதம் (செப்டம்பர்) 1 ஆம் தேதி சேலம் மாவட்டம் கருமந்துறையில், பத்து மலைக் கிராமங்களுக்கு முதல் முறையாக மின் இணைப்பு வழங்கும் திட்டம் மற்றும் புதிய திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டுதல், கருமந்துறை புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையத்தைத் திறந்து வைத்தல், முடிவுற்ற திட்டப் பணிகளை இயக்கி வைத்தல், நலத்திட்ட உதவிகளை வழங்குதல் ஆகியவற்றுக்கான விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது வீட்டிலிருந்து, காலை 9 மணியளவில் கிளம்பினார் முதல்வர். வழியெங்கும் அவருக்குப் பொது மக்களும் கட்சியினரும், மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அவர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டே வந்தவர், அனுப்பூர் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள அம்மா உடற்பயிற்சிக் கூடம் மற்றும் பூங்காவைத் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளைத் திறந்து வைத்துப் பேசினார்.

விவசாயி

“இந்தப் பகுதியில் இருக்கும் இளைஞர்கள் உடல் வலுவைப் பெறுவதற்கும், வயதானவர்கள் நலமாக வாழ்வதற்கும் உடற்பயிற்சி மிகவும் முக்கியம். அதற்காக, அம்மா பூங்காவும், அம்மா உடற்பயிற்சிக் கூடமும் இப்போது திறக்கப்பட்டு உள்ளன.

நல்ல சுகாதாரமாக, காற்றோட்டமாக இங்கே அம்மா பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. காலையிலும், மாலையிலும் நடை பயணம் செய்து திடமான வாழ்க்கையைப் பெற, இந்த அம்மா பூங்காவைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதைப்போல, இளைஞர்கள் நல்ல உடற்பயிற்சி மூலம் உடல் வலுவைப் பெறுவதற்கு, நலமான வாழ்வைப் பெறுவதற்கு, விளையாட்டில் மேம்பாடு அடைவதற்கு, அம்மா உடற்பயிற்சிக் கூடம் அமைக்கப்பட்டு உள்ளது.

சாதாரணக் குடும்பத்தில் பிறந்த ஏழை எளிய மாணவ, மாணவிகள், இளைஞர்கள், பெரியோர்கள் இந்த அம்மா பூங்கா, அம்மா உடற் பயிற்சிக் கூடத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம். இதைப் போல எல்லா கிராமங்களிலும் அம்மா பூங்கா, அம்மா உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

ஒரு முன்னோடி மாவட்டமாகத் திகழக்கூடிய அளவில், நம்முடைய சேலம் மாவட்டத்தில் இன்றைக்குப் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் நல்லாசியோடு, எல்லாம் வல்ல இறைவனின் ஆசியோடு, உங்களின் அன்போடு, ஆதரவோடு தமிழகத்தின் முதல்வராகி உள்ளேன்.

கிராமங்களுக்கு முதல்வர்கள் வருவது மிகவும் அரிது. நான் ஏற்கெனவே பலமுறை இந்தப் பகுதிக்கு வந்திருக்கிறேன். ஏற்காடு சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை ஏற்காடு மலைப்பகுதி, கீழேயுள்ள கிராமப்பகுதி, பேரூராட்சிப் பகுதி என, எல்லா இடங்களுக்கும் வந்துள்ளேன்.

2011 இல் புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சியில், நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தபோது, இந்தச் சாலைகளை எல்லாம் சிறப்பாக அமைத்துக் கொடுத்தேன். இங்கே வரும் போது விவசாய சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வைத்தார்கள். அதெல்லாம் அரசின் பரிசீலனையில் உள்ளன.

கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் உயர வேண்டும், கிராம மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் முழுமையாகக் கிடைக்க வேண்டும். அதுதான் அம்மா அரசின் இலட்சியம்.

நகர மக்களுக்குக் கிடைக்கும் அடிப்படை வசதிகள், கிராமத்தில் வாழ்கின்ற ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களுக்கும் கிடைக்க வேண்டும். நானும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் தான். ஒரு விவசாயி தான். இன்றைக்கும் விவசாயம் செய்து கொண்டிருக்கிறேன்.

விவசாயத்தில், எவ்வளவு துன்பம் துயரம் இருக்கும் என்பதை, நான் நன்கு அறிவேன். எந்தத் துறையிலும் இவ்வளவு கஷ்டம் கிடையாது. வெய்யிலில் காய்ந்து, மழையில் நனைந்து வேலை செய்பவன் விவசாயி. இரத்தத்தை வேர்வையாக மண்ணிலே சிந்தி உழைப்பவன் விவசாயி.

இறைவனின் அற்புதப் படைப்பான விவசாயிகள், வாழ்க்கையில் முன்னேற, தமிழக அரசு எப்போதும் துணையாக இருக்கும். அவர்களுக்குத் தேவையான திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தும். விவசாயிகள் செழிப்பாக இருந்தால், நாடு செழிக்கும். அந்தச் செழிப்பான ஆட்சி, நமது ஆட்சியில் கிடைக்கும்.

புரட்சித்தலைவி அம்மா, கிராமங்கள் முன்னுக்கு வர வேண்டும் என்பதற்காக, கிராமப்புறத்தில் சாலை வசதி, மாணவர்களுக்குக் காலணி, விலையில்லாப் புத்தகம், நோட்டுகளைக் கொண்டு செல்வதற்குப் பை, பள்ளிக்குச் செல்வதற்கு மிதிவண்டி, கணினி அறிவைப் பெறுவதற்கு மடிக்கணினி என வழங்கி, ஏழை மாணவர்களின் கல்வியில் மறுமலர்ச்சியை உருவாக்கித் தந்தார்.

அதையே நாமும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறோம். இன்றைக்கு இதைப் போன்ற திட்டங்கள் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கிடையாது. விவசாயத்தையும் கல்வியையும் இரண்டு கண்களைப் போல் காத்து வருகிறோம்.

எல்லாத் துறைகளும் இன்றைக்கு வளர்ந்து வருகின்றன. நமது வேளாண்மைத் துறை சிறந்து விளங்குவதால், உணவு தானிய உற்பத்தியில் இந்தியாவிலேயே அதிகளவு உற்பத்தி செய்து, அதற்கான தேசிய விருதை, தமிழக அரசு பெற்றுள்ளது.

மக்களுக்குத் தேவையான அனைத்தையும் அளிப்பது அம்மாவின் அரசு. நமது மக்களின் குறைகளைப் போக்குவதே எங்கள் இலட்சியம். அதற்காக நமது அரசு தொடர்ந்து பாடுபடும். ஏழை எளிய, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் முன்னேற, கிராமத்தில் இருக்கும் மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை வழங்க, நமது அரசு தொடர்ந்து பாடுபடும்’’ என, விவசாயத்தின் அருமை பெருமைகளைக் குறிப்பிட்டுப் பேசி முடித்தார்.

விவசாயி

அதன்பின், அங்கிருந்து கருமந்துறைக்குப் புறப்பட்டார். அங்கே போகும் வழியில், அருணா என்னும் மலையூரில் வசிக்கும் தீர்த்தனின் வீட்டுக்குத் திடீரெனச் சென்று, அந்தக் குடும்பத்தினரின் வாழ்வாதாரம் குறித்துக் கேட்டறிந்தார். அந்த மலையில் விளையும் தானியங்களைப் பற்றியும், அவற்றை விற்பனை செய்வதைப் பற்றியும் விசாரித்தார்.

மேலும், அவர்களிடம் உள்ள பசுக்கள், செம்மறி ஆடுகள், கோழிகள் குறித்தும், இவற்றால் வாழ்க்கைக்குப் போதுமான வருமானம் கிடைக்கிறதா என்றும் கேட்டறிந்தார். இந்த விசாரிப்புகள், விவசாயிகளின் வாழ்வில் அவருக்குள்ள அக்கறையை, பாசத்தை வெளிப்படுத்தியது.

அந்த மலைவாழ் மக்கள் வளர்க்கும் பசுக்கள் மற்றும் ஆடுகளுக்கு வேண்டிய தீவனங்கள் பற்றியும், என்னென்ன தீவனப் பயிர்களை அங்கே பயிரிடலாம் என்பதைப் பற்றியும் கேட்டதுடன், கம்பு, இராகி, வரகு, சோளம், தினை ஆகிய உணவு வகைகள் பற்றியும்; அவற்றை விளைவிப்பது குறித்தும் ஆர்வத்துடன் விசாரித்தார்.

இப்படி, பாமர மக்களிடம் பாசத்தைக் காட்டிய தமிழக முதல்வர், அவர்கள் வளர்க்கும் ஆடுகளையும், ஒரு பெண் திருக்கையில் தானியம் அரைத்ததையும் பார்த்து மகிழ்ந்தார். அந்த ஏழை மக்கள் மனமுவந்து கொடுத்த நீரைக் குடித்து மகிழ்ந்தார்.

தங்களின் குடிசை வீட்டுக்கு வந்ததற்காக அவர்கள் தெரிவித்த அன்புக்கும், நன்றிக்கும் ஈடாக, புன்னகை தவழ, இருகரம் கூப்பி வணங்கிய முதல்வர், அங்கிருந்து கருமந்துறைக்குப் புறப்பட்டார்.

இதற்கிடையில், சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி, கருமந்துறைக்கு வந்து, முதல்வர் திறந்து வைக்க இருந்த அனைத்தையும் பார்வையிட்டு, அங்கிருந்த அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து, சரியாக மதியம் 1 மணியளவில் கருமந்துறையை வந்தடைந்த முதல்வருக்கு, கருமந்துறை மலைவாழ் மக்கள் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதை ஏற்றுக் கொண்ட அவர், அந்த உச்சி வெய்யிலிலும் திறந்தவெளி வாகனத்தில் ஏறி, மக்களைப் பார்த்தவாறு, முதலில் அங்கிருந்த விநாயகர் கோயிலுக்குச் சென்று வணங்கி விட்டு, கருமந்துறை பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டிருந்த, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவு வளைவைத் திறந்து வைத்தார்.

அதன்பின், மலைவாழ் மக்கள் 25 பேருக்கு, பசு மாடுகளை வழங்கி, கோமாரி நோய்க்கான தடுப்பூசி போடும் திட்டத்தையும் தொடக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து, ஆளுக்கு 30 நாட்டுக்கோழிக் குஞ்சுகள், அவற்றை வளர்க்க உதவும் கூண்டுகள், 100 கிலோ தீவனம் ஆகியவற்றை, மலைவாழ் மக்கள் நூறு பேருக்கு வழங்கினார்.

கருமந்துறை மலைப்பகுதி, கல்வராயன் மலையில் தான் அமைந்து உள்ளது. தமிழ்நாட்டிலேயே இந்தக் கல்வராயன் மலையில் தான், கடுக்காய் அதிகம் விளைவதாகக் கூறப்படுகிறது.

எனவே அங்குள்ள மக்களுக்கு, கடுக்காய் அரவை இயந்திரம், எடை போடும் கருவி, சிப்பமாக்கும் கருவி முதலியவற்றை முதல்வர் வழங்கினார்.

அதைத் தொடர்ந்து, மலைவாழ் மக்கள் விவசாயம் செய்வதற்கு, டிராக்டர், பவர் டில்லர், ரொட்டவேட்டர் முதலிவற்றை வழங்கியதுடன் அங்குள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள், தாங்கள் விளைவித்த பொருள்களை எளிதாக எடுத்துச் செல்ல, இரண்டு நான்கு சக்கர வாகனங்களை வழங்கினார்.

அதன்பின், புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையத்தைத் திறந்து வைத்த அவர், அங்கிருந்த பள்ளிக் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அளித்த பூரணக் கும்ப மரியாதை மற்றும் வரவேற்பை ஏற்றுக் கொண்டு, விழா மேடையில் வந்தமர்ந்தார்.

அவருடன், தமிழ்நாடு மாநில மத்திய கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவர் ஆர்.இளங்கோவன் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ஆகியோரும் வந்தமர்ந்தனர்.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி வரவேற்புரை ஆற்ற, அதன்பின் சிறப்புரையாற்றிய முதல்வர் மலைவாழ் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தங்களையும் மதித்து, தங்களுடைய வாழ்க்கை மேம்பாடு அடைய, தங்கள் பகுதிக்கு வருகை தந்த முதல்வர் பழனிச்சாமியை, கைகூப்பி வணங்கி வழியனுப்பி வைத்த சேலம் மாவட்ட மலைவாழ் மக்கள் பலரும்,

“தமிழகத்தில், இதுவரை எத்தனையோ முதல்வர்கள் இருந்துள்ளனர். ஒருவர்கூட, எங்கள் பகுதிக்கு வந்ததில்லை. ஆனால், புண்ணியவான் முதல்வர் ஐயா, எங்கள் பகுதிக்கு வந்தது மட்டுமல்ல; கிட்டத்தட்ட அரை நாள் எங்களோடு இருந்து, எங்கள் வாழ்க்கையைக் கேட்டறிந்து, எங்கள் வாழ்க்கை முன்னேற அரசு ஏற்படுத்தியுள்ள திட்டங்களையெல்லாம் தொடக்கி வைத்திருக்கிறார்.

அவர், எந்த எண்ணத்தோடு திட்டங்களைத் தொடக்கி வைத்தாரோ, அந்த எண்ணம் ஈடேறும் வகையில், திட்டங்களை முழுமையாகப் பயன்படுத்தி, நாங்கள் எங்கள் வாழ்க்கையில் ஏற்றத்தைக் கொண்டு வருவோம்’’ என்று, நம்மைச் சூழ்ந்து கொண்டு, தங்கள் மனதில் உள்ளதை அப்படியே கூறினர்.

அமைதியாக, மக்கள் மனங்களுக்குள் சென்று, சாதித்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி என்பதை மட்டும், அந்த ஒரு நாள் நிகழ்ச்சி மூலம், நாம் உணர முடிந்தது.


மு.உமாபதி

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!