கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019
மலையை ஒட்டி அமைந்துள்ள நிலங்களில் உள்ள பயிர்களை, யானை, கரடி, காட்டுப்பன்றி போன்ற விலங்குகள் சேதப்படுத்துவதால், விவசாயிகள் வருமானத்தை இழக்கும் சூழல் ஏற்படுகிறது. மேலும், அவர்கள் மன உளைச்சலுக்கும் உள்ளாகின்றனர். பயிர்களைச் சேதப்படுத்தும் காட்டு விலங்குகள் சில நேரங்களில் அங்கிருக்கும் விவசாயிகளையும் தாக்குவது அடிக்கடி நிகழ்வதாகும். எனவே, இந்தக் காட்டு விலங்குகளால், பயிர்ச்சேதம், பொருளாதார இழப்பு, உயிரிழப்பு போன்ற இன்னல்கள் உண்டாவதால் அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டுவது மிக மிக அவசியமாகிறது.
குறிப்பாக, காட்டுப்பன்றிகள் கால முழுதும் பயிர்களுக்குப் பாதிப்பை உண்டாக்கிக் கொண்டேயிருக்கும். நிலக்கடலை, நெல், காய்கறிகள், பயறு வகைகளை இவை அதிகளவில் சேதப்படுத்தும். இதனால் 10-75% வரை மகசூல் இழப்பு உண்டாகும். இங்கே, பயிர்களை நாசப்படுத்தும் காட்டுப்பன்றிகளைக் கட்டுப்படுத்துவதற்கான சில உத்திகளைக் காணலாம்.
நாட்டுப் பன்றிகளின் சாணத்தைத் தெளித்தல்
ஊருக்குள் வளரும் நாட்டுப் பன்றிகளின் சாணத்தைச் சேகரித்து நீரில் கரைத்து, பயிரைச் சுற்றி ஒரு அடி அகலத்தில் நிலத்தில் தெளிக்க வேண்டும். இப்படி ஒரு வார இடைவெளியில் 2-3 முறை தெளிக்க வேண்டும். இந்த வாசத்தை உணரும் காட்டுப்பன்றிகள், வேறு பன்றிகளின் எல்லைக்குள் வந்து விட்டோமென நினைத்து அங்கிருந்து சென்று விடும். இதனால் அவற்றால் ஏற்படும் பாதியளவுச் சேதத்தைத் தவிர்க்கலாம்.
மனித முடியை இடுதல்
காட்டுப் பன்றிகளுக்கு நுகர்வுத் திறன் அதிகம். அதனால் இவை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு மோப்பம் பிடித்துக் கொண்டே போகும். எனவே, பன்றிகள் போகும் பாதையில் மனித முடிகளைப் போட்டு வைத்தால், மோப்பத்தின் போது மனித முடிகள் பன்றிகளின் நாசிக்குள் சென்று அரிப்பை உண்டாக்கும். இந்த எரிச்சலைத் தாங்க முடியாத பன்றிகள் கத்தத் தொடங்குவதுடன் அங்கிருந்து ஓடி விடும். இதனால் பயிர்ச் சேதமும், மற்ற பன்றிகள் வருவதும் தடுக்கப்படும்.
வண்ணச் சேலைகளைப் பயன்படுத்துதல்
பயிரைச் சுற்றிலும் வண்ணச் சேலைகளைக் கட்டி விட்டால், காட்டுப் பன்றிகள் அங்கு வராது. மேலும், நாட்டுப் பன்றிகளின் காய்ந்த சாணத்தைக் கொண்டு புகை மூட்டம் போடலாம். இந்தப் புகையைச் சுவாசிக்கும் காட்டுப் பன்றிகள் அந்தப் பக்கம் வருவதைத் தவிர்த்து விடும். இதனால், பயிர்ச்சேதம் தவிர்க்கப்படும்.
முனைவர் காயத்ரி சுப்பையா,
முனைவர் க.வேல்முருகன், வேளாண்மை அறிவியல் நிலையம்,
காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம்-603203.
சந்தேகமா? கேளுங்கள்!