My page - topic 1, topic 2, topic 3

ஏ1, ஏ2 பால் என்றால் என்ன?

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2021

சும்பால், எருமைப்பால், ஆட்டுப்பால், ஒட்டகப்பால், கழுதைப்பால் தான் நமக்குத் தெரியும். அது என்ன ஏ1, ஏ2 பால்? ஏ2 பால் நாட்டுப் பசுவின் பாலென்றும், ஏ1 பால் சீமைப்பசு மற்றும் கலப்பினப் பசுவின் பாலென்றும் சொல்லப்படுவது உண்மையா? ஏ2 பால் நல்லதென்றும், ஏ1 பால் கெடுதல் செய்யும் என்றும் சொல்வது உண்மையா?

பாலில், சர்க்கரை, புரதம், கொழுப்பு, தாதுப்புகள் மற்றும் பிற சத்துகள் அடங்கி உள்ளன. பாலில் பத்துக்கும் மேற்பட்ட கேசின் புரதங்கள் உள்ளன. அவற்றில் உள்ள பீட்டா கேசின் என்னும் புரதத்தின் மாறுபட்ட வடிவங்களே ஏ1, ஏ2 ஆகும். ஒரு புரதத்தின் மாறுபட்ட வடிவத்துக்குக் காரணம், அது கொண்டுள்ள அமினோ அமிலங்களின் தொகுப்பிலுள்ள வேறுபாடாகும்.

பசுவின் மடித்திசுவில் பீட்டா கேசின் புரதத்தை உற்பத்தி செய்யும் மரபணுவில் பிறழ்வு ஏற்படுவதே, ஏ1, ஏ2 பீட்டா கேசின் புரதம் உருவாகக் காரணமாகும். இதைத் தான் சுருக்கமாக, ஏ1, ஏ2 பால் என்று கூறுகிறோம். இந்த மரபணுப் பிறழ்வு, பசுவின் பால் உற்பத்தியைப் பாதிக்காமல் இருந்ததால், இதன் முக்கியத்துவம் பல ஆண்டுகளாக அறியப்படாமல் இருந்தது.

நாம், சீமைப் பசுக்களைப் பால் உற்பத்திக்காக மட்டுமே இனவிருத்தி செய்கிறோம். அதனால், ஏ1 பீட்டா கேசின் புரதத்தை உற்பத்தி செய்யும் மரபணு, தொடர்ந்து அடுத்தடுத்த சந்ததிகளுக்குக் கடத்தப்பட்டதால், இன்று முழுவதுமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், நம் நாட்டுப் பசுக்களில் இந்த மரபணு மாற்றம் நிகழாததால், இவற்றின் அடுத்தடுத்த சந்ததிகளில் ஏ2 பீட்டா கேசின் தொடர்ந்து உற்பத்தியாகி வருகிறது. இந்தப் பண்பைத் தான், சீமைப்பசு ஏ1 பாலைத் தருகிறது என்றும், நாட்டுப்பசு ஏ2 பாலைத் தருகிறது என்றும் கூறுகிறோம்.

இங்கே நாம் கவனிக்க வேண்டியது, பசுவின் மடித் திசுவில் மரபணுப் பிறழ்வு என்பது, பீட்டா கேசின் புரத மரபணுவில் மட்டும் நிகழ்வதல்ல. இது, பசுவினத்தின் மொத்த மரபணுவின் எந்த இடத்திலும் நிகழக் கூடியது தான். இந்த மாற்றம், அது சார்ந்த அமினோ அமில உற்பத்தியில், அடுத்து அது சார்ந்த புரத உற்பத்தியில், அடுத்து அது சார்ந்த உயிர் வேதி வினைகளில், அடுத்து அது சார்ந்த உடலியக்கம், பண்பு மற்றும் அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தும். பீட்டா கேசின் புரத உற்பத்தியில் பசு இனங்களிடம் உள்ள வேற்பாடு, சந்ததி வழி வேறுபாடு தான்.

செரிப்பதில் உள்ள வேறுபாடு

நாம் பருகும் பசும் பாலிலுள்ள புரதம் செரித்து, சிறுகுடலால் கிரகிக்கப்பட்டு, இரத்த நாளங்கள் மூலம் உடலின் அனைத்துப் பாகங்களையும் அடைகிறது. இறுதியாக, அவற்றின் செல்களில் வளர்சிதை மாற்றத்துக்கு உள்ளாகிறது. இப்படி, ஏ1, ஏ2 பீட்டா கேசின் புரதங்கள் செரித்து, பீட்டா கேசோ மார்பின் 21, பீட்டா கேசோ மார்பின் 13, பீட்டா கேசோ மார்பின் 7 என்னும் சிறு அமிலத் தொகுப்புகளாக, சிறுகுடலால் உறிஞ்சப்பட்டு, இரத்த ஓட்டத்தில் கலக்கின்றன.

பீட்டா கேசோ மார்பின் 7 என்பது, ஏ1 பீட்டா கேசின் புரதம் செரிப்பதால் மட்டுமே வெளிப்படும். ஏ2 பீட்டா கேசின் புரதம் செரிக்கும் போது, பீட்டா கேசோ மார்பின் 7 வெளிப்படுவதில்லை. சுருக்கமாகச் சொன்னால், ஏ1 பாலைத் தரும் சீமைப் பசுவின் பாலைக் குடித்தால், பீட்டா கேசோ மார்பின் 7, பாலைக் குடித்தவரின் சிறுகுடலில் வெளிப்படும். ஏ2 பாலைத் தரும் நாட்டுப் பசுவின் பாலைக் குடித்தால், பீட்டா கேசோ மார்பின் 7, பாலைக் குடித்தவரின் சிறுகுடலில் வெளிப்படுவதில்லை.

பி.சி.எம்.ஏழும் நலப் பாதிப்பும்

ஏ1 பாலைக் குடிப்பதால் உருவாகும் பி.சி.எம்.7க்கும், நீரிழிவு, இதயநோய், மூளை வளர்ச்சிக் குறை மற்றும் பிற தொற்றா நோய்களுக்கும் தொடர்பு இருப்பது, சில ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. ஆனாலும், இவ்வளவு முக்கியத் தகவலை, ஐயமற மெய்ப்பிக்கும் ஆய்வு எதுவும், நம்பத் தகுந்த இதழ்களில் வரவில்லை. மேலும், முன்பு கூறியுள்ள தொற்றா நோய்களுக்குப் பல்வேறு காரணங்கள் உண்டு என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

உண்மையில் இந்த நோய்களுக்கு பி.சி.எம்.7 தான் காரணம் என்றால், ஐரோப்பிய மக்களுக்குப் பல வகைகளில் தொல்லைகள் ஏற்பட்டிருக்க வேண்டும். ஏனெனில், அவர்கள் தான் ஆண்டாண்டுக் காலமாக ஏ1 பாலை, அதிகளவில் உண்டு வந்திருக்கிறார்கள். ஆனால், களநிலை வேறாக உள்ளது.

அதாவது, ஏ1 பாலை அதிகமாக உண்ணாத இந்திய மக்களுக்குத் தான், முன்கூறிய நோய்கள் உள்ளன. அப்படியே பி.சி.எம்.7 மூலம் சிறியளவில் சிக்கல் இருப்பினும் அச்சப்படத் தேவையில்லை. ஏனெனில், ஐரோப்பிய மக்களைப் போல, தினமும் அரை லிட்டர் பாலை நாம் உணவில் சேர்த்துக் கொள்வதில்லை.

கடந்த முப்பது ஆண்டுகளாகத் தான் கணிசமான அளவில் நாம் பாலை அருந்தி வருகிறோம். இதற்கு முக்கியக் காரணம், கறவை மாடுகளில் கலப்பினச் சேர்க்கை என்னும் கொள்கையைச் செயல்படுத்துவது தான். கலப்பினச் சேர்க்கையில் சீமைப் பொலி காளைகளுக்கு மிகுந்த பங்குண்டு.

மனதில் கொள்ள வேண்டியவை

நாட்டின் அனைத்து உயரின, வெளிநாட்டின, கலப்பினப் பசுக்களை, கேசின் புரத மூலக்கூறு மரபியல் ஆய்வுக்கு உட்படுத்தி, மரபணு பிறழ்வை அறியலாம். ஏ1 பால், மக்களுக்குத் தீமையைத் தருவது என்பதற்குத் திடமான ஆதாரம் ஏதுமில்லை. ஏ1 பாலைத் தருவதால், சீமை மற்றும் கலப்பினப் பசுக்கள் மீது ஒவ்வாமை கொள்ளத் தேவையில்லை.


முனைவர் இரா.சரவணன்,

முனைவர் அ.தென்னரசு, கால்நடைப் பல்கலைக் கழகப் பயிற்சி

மற்றும் ஆராய்ச்சி மையம், குண்டலப்பட்டி, தருமபுரி.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks