இன்று நீர் வசதியுள்ள பகுதிகளில் இருக்கும் விவசாயிகள் நீரைப் பயன்படுத்தி இதர தொழிலில் ஈடுபட விருப்பம் காட்டுகிறார்கள். குறிப்பாக, சொந்தமாக ஆழ்துளைக் கிணறுகளை வைத்திருப்போர், பண்ணைக்குட்டை மற்றும் குளங்களை வைத்திருக்கும் விவசாயிகள், நீரைப் பயன்படுத்தி மீன் வளர்ப்பது மட்டுமே இலாபமென நினைக்கிறார்கள். ஆனால், அதிக இலாபம் தருவது மீன் குஞ்சு உற்பத்தி தான். ஆம். குறுகிய காலத்தில் விற்று விட்டு மீண்டும் புதிய குஞ்சுகளை வளர்த்துக் கனமாகக் காசு பார்க்கலாம்.
இதைவிட இன்று பலர் அலங்கார மீன்களை வளர்த்துப் பணம் பார்ப்பதுண்டு. குறிப்பாக, வாஸ்து மீன் என்று விளம்பரப்படுத்தி நல்ல விலைக்கு விற்கிறார்கள். குறைந்த செலவில் மாடியில் சிறு தொட்டிகளில் புதுப்புது அழகு மீன் வகைகளை உற்பத்தி செய்கிறார்கள். இதற்கு, மீன்வளத்துறை சிறப்புப் பயிற்சியைத் தருகிறது.
திருச்சியிலுள்ள பாசன மேலாண்மைப் பயிற்சி மையம், பரம்பூர், நீர்ப் பயன்படுத்துவோர் சங்கத்துடன் இணைந்து பலவித ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, எப்போது பாசனம் செய்தால் உச்சநிலை மகசூலை எடுக்கலாம் என்பதற்கும்; நெல்லில் வரிசை நடவு மற்றும் இயந்திர அறுவடை எனப் பல உத்திகளைக் கடைப்பிடித்தாலும், நீரை முறையாகப் பயன்படுத்தினால் தான் நல்ல மகசூலைப் பெற முடியும் என்பதற்கும் உரிய ஆய்வுப் பணிகள் முடியும் நிலையில் உள்ளன.
இப்பகுதியில் கள ஆய்வு செய்தபோது, அங்குள்ள விவசாயி பொன்னையா, இந்தப் பாசனச் சங்கத் தலைவராக சிறந்த முறையில் இயங்கி வருகிறார் என அறியப்பட்டது. அவர் நீரைப் பயன்படுத்தி ஒரு ஆண்டு மீன் வளர்த்து மறு ஆண்டு நெல் சாகுபடி செய்கிறார். இதன் மூலம் நெல்லுக்கு எந்த உரமும் இடாமல் நல்ல மகசூலைப் பெறுகிறார்.
ஒவ்வொரு பயிரும் தனக்குத் தேவையான சத்தை மண்ணிலுள்ள நன்மை செய்யும் உயிரினங்கள் உதவியால் தான் பெறுகின்றன. இவரது அனுபவத்தை மற்ற விவசாயிகளும் பின்பற்றலாம். நகர்ப்புறங்களில் உள்ளோர் சிறு தொட்டிகளிலும், சிறு விவசாயிகள் பயோப்ளாக் முறையிலும் மீன்களை வளர்க்கலாம். இதுவும் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் முறை தான்.
பொறிஞர் எம்.இராஜமோகன்,
தலைமை இயக்குநர், பாசன மேலாண்மைப் பயிற்சி நிலையம்,
துவாக்குடி, திருச்சி.
சந்தேகமா? கேளுங்கள்!