கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2021
மீன் வளர்ப்புக்கு நீர்ச் சுத்திகரிப்பு எந்திரங்கள் முக்கியமாகும். மீன் வளர்ப்புத் தொட்டி சிறியதாகவும், குறைந்தளவு நீரைக் கொண்டுள்ளதாலும், விரைவில் நீரின் தரம் குறைந்து விடும். எனவே, நீர்ச் சுத்திகரிப்பு எந்திரங்கள், மீன் வளர்ப்புத் தொட்டியில் உள்ள அங்கக மற்றும் கழிவுப் பொருள்களை நீக்கித் தொட்டியைத் தூய்மைப்படுத்தும். எனவே, இவை மீன்களுக்கு முக்கியமான பாதுகாப்பு ஆதாரமாகும்.
மீன் தொட்டிகளில் மீன்களின் சுகாதாரம் மற்றும் பராமரிப்பை மேம்படுத்த, சரியான நீர்ச் சுத்திகரிப்பு முறையை மற்றும் எந்திரத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பொதுவாகக் கிடைக்கக் கூடிய நீர்ச் சுத்திகரிப்பு எந்திரங்களின் நன்மைகள் மற்றும் தீமைகளைப் பற்றி இங்கே விளக்கிக் கூறப்பட்டுள்ளது. ஆகவே, இக்கட்டுரை மீன்வளர்ப்புத் தொட்டிகளுக்குச் சரியான வடிகட்டிகளைத் தேர்வு செய்வதற்கு உதவியாக இருக்கும்.
மீன் வளர்ப்புத் தொட்டிகளைச் சுத்தமாக வைத்திருக்க, இயந்திரச் சுத்திகரிப்பு, இரசாயனச் சுத்திகரிப்பு, உயிரியல் சுத்திகரிப்பு என, மூன்று வகையான நீர்ச் சுத்திகரிப்பு உத்திகள் உதவுகின்றன.
இயந்திரச் சுத்திகரிப்பு
இது, நீரிலுள்ள துகள்களை நீக்கும் செயல்முறை ஆகும். இம்முறையில், மீன் வளர்ப்புத் தொட்டியிலுள்ள நீர், சல்லடை போன்ற வடிகட்டி அமைப்பின் வழியாக வேகமாகச் செல்லும் போது, சிறிய துகள்கள் மாட்டிக் கொள்ளும். இவ்வகை வடிகட்டிகள்; பஞ்சு, கூழாங்கற்கள், குண்டுகள், மணிகள், உடைந்த கற்சில்லுகள் போன்ற பொருள்களைக் கொண்டிருக்கும்.
அனைத்து இயந்திரச் சுத்திகரிப்பு எந்திரங்களும் அதிகப் பயன்பாட்டின் போது துகள்களால் அடைபடும். இதனால், நீரின் ஓட்டம் குறையும் அல்லது நீரானது வடிகட்டிக்குள் ஊடுருவிச் செல்லாமல் பொருள்களைச் சுற்றி ஓடி விடும். இச்சமயத்தில், வடிகட்டியைச் சுத்தம் செய்ய வேண்டும். அநேக நேரங்களில், நாம் மீன் வளர்ப்புத் தொட்டியின் திறனை விடப் பெரிய வடிகட்டிகளைப் பொருத்துவதால் சுத்தம் செய்யும் இடைவேளையை அதிகப்படுத்துகிறோம்.
இதனால், மீன் வளர்ப்புத் தொட்டியின் நீர் சுத்தமாகத் தெரியும். ஆனால், வடிகட்டியில் அதிகளவில் உயிரிக் கழிவுகளும் மற்ற கழிவுகளும் தேங்கி மெதுவாகச் சிதைந்து, அம்மோனியா, நைட்ரைட், நைட்ரேட்டுகள் போன்ற நச்சுப் பொருள்களைக் கொண்டு நீரை மாசுபடுத்திக் கொண்டிருக்கும். இவ்வகையான கழிவுப் பொருள்கள் மீன்களைப் பாதித்து விடும். எனவே, இயந்திர வடிகட்டிச் சரியாகச் செயல்பட, வடிகட்டிகளில் சிக்கியுள்ள துகள்களை அடிக்கடி நீக்கிச் சுத்தம் செய்வது மிகவும் அவசியமாகும்.
இரசாயனச் சுத்திகரிப்பு
இதில், நீரிலுள்ள தேவையற்ற அல்லது நச்சுக் கழிவுகள்; இரசாயனப் பொருள்களின் வழியே செல்லும் போது, பரப்புக் கவர்ச்சி மூலம் நீக்கப்படும். இதில், நீரிலிருந்து குறிப்பிட்ட இரசாயனங்கள் அல்லது அதிகமான சத்துகளை நீக்குவதற்கான புதிய பொருள்கள் நிறைய உள்ளன. செறிவூட்டிய கரி, பஞ்சு போன்றவை அதிகமாகப் பயன்படும்.
இந்தப் பொருள்களைச் சரியான முறையில் பயன்படுத்தினால், இம்முறையைச் சுத்திகரிப்புக்கு உட்படுத்தலாம். இதன் மூலம் மீன் வளர்ப்புத் தொட்டியின் நீரின் தரத்தை மேம்படுத்தி, சுகாதாரத்தைக் காத்து, நீரை மாற்றுவதையும் குறைக்கலாம். எனினும், நீரிலுள்ள வேதிப் பொருள்களைக் கவனமாகக் கண்காணிப்பது மற்றும் தேவையின் போது நீரை மாற்றுவது மிகவும் முக்கியம்.
இரசாயனச் சுத்திகரிப்பு நன்கு இயங்க, சரியான கரியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அனைத்துக் கரி வகைகளும் ஒரே மாதிரி இருக்காது. கரியானது குண்டூசித் தலை அளவில், மங்கலான நிறத்தில், நீரில் மிதக்கும் தன்மையில் இருக்க வேண்டும். மரம் அல்லது தேங்காய்ச் சிரட்டையில் இருந்து பெறப்படும் கரி சிறந்தாகும்.
உயிரி சுத்திகரிப்பு
இயந்திரச் சுத்திகரிப்பு, நீரில் மிதக்கும் திடப் பொருள்களை மட்டுமே நீக்கும். ஆனால், நீரில் கரைந்துள்ள பொருள்களை நீக்க, உயிரி சுத்திகரிப்பு உதவும். இம்முறையில், மீன் வளர்ப்புத் தொட்டியில் உருவாகும் நச்சுமிக்க இரசாயனத் துணைப் பொருள்களைக் குறைந்த நஞ்சுள்ள சத்துகளாக, தொட்டியிலுள்ள பாக்டீரியாக்கள் மாற்றும்.
நைட்ரஜன் சுழற்சி சரியாக நடப்பதற்குத் தேவையான பாக்டீரியாக்கள் வளர, போதிய இடமும், ஆக்ஸிஜனும் கிடைக்க வேண்டும். உயிரி சுத்திகரிப்பு, அனைத்துச் சுத்திகரிப்பு எந்திரங்களிலும் ஓரளவில் நடைபெறும். இது, மீன் தொட்டியில் இத்தகைய பாக்டீரியாக்கள் இருக்கும் நீர் மூலக்கூறுகள் மற்றும் அலங்காரங்களில் நடைபெறும்.
இது, உயிரி வடிகட்டியின் திறன், பாக்டீரியாக்கள் வளரும் பரப்பு மற்றும் நீரிலுள்ள ஆக்ஸிஜன் இருப்பை வைத்துத் தீர்மானிக்கப்படும். எல்லா வடிகட்டிகளிலும் உயிரி வடிகட்டுதல் திறன் சமமாக இருக்காது. உயிரிப் பொருள்களின் காற்று வெளிப்படும் வகையில் உள்ள வடிகட்டிகள் அதிகத் திறனுடன் இருக்கும்.
எந்திரங்களின் வகைகள்
மீன் வளர்ப்புத் தொட்டியில், நீர்ச் சுத்திகரிப்பு எந்திரங்களைத் தேர்ந்தெடுக்கும் முன், எவ்வகை மீனை வளர்க்கப் போகிறோம் என்பது குறித்துத் திட்டமிடல் மிகவும் அவசியம். நிறையத் தாவரங்கள் அமைந்துள்ள தொட்டிகளில் இயந்திர மற்றும் இரசாயன வடிக்கட்டிகளை அமைப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும்.
ஏனெனில், நீரில் கரைந்துள்ள சத்துகளை நீக்குவதற்கு அந்தத் தாவரங்கள் உதவியாக இருக்கும். சிக்லிட் மீன்களை வளர்க்கும் தொட்டிக்கு மூன்று வகையான வடிகட்டுதலும் தேவைப்படும். இப்போது சந்தைகளில் இம்மூன்று சுத்திகரிப்பையும் செய்யும் வடிகட்டிகள் உள்ளன. அவையாவன: உள் வடிகட்டிகள், சரளை வடிகட்டிகள், பவர் வடிகட்டிகள், குப்பி வடிகட்டிகள், ஈரமான/உலர் வடிகட்டிகள்.
உள் வடிகட்டிகள் (Internal filters): இந்த வடிகட்டிகள் தொட்டிக்குள் வைக்கும் வகையில் இருக்கும். இவை, நேரடியாக மூலக்கூறுகளின் மேல் அல்லது தொட்டியின் ஏதாவது ஒரு பக்கத்தில் வைப்பது போன்ற வடிவங்களில் உள்ளன. இவற்றில் கார்னர் பாக்ஸ் வடிகட்டி, பஞ்சு வடிகட்டி ஆகியன அடங்கும்.
இவ்வகை வடிகட்டிகள் மீன் வளர்ப்புத் தொட்டியின் வெளியே அமைந்துள்ள காற்றடிப்பான் மூலம் பெறப்படும் காற்றின் உதவியால் செயல்படும். காற்றுக் குமிழிகளின் செயல் மூலம் நீர் உறிஞ்சப்பட்டு, வடிகட்டியின் வழியாக நீர் செல்வதால் நீர்ச் சுத்திகரிப்பு நடைபெறும்.
கார்னர் பாக்ஸ் வடிகட்டி (Corner box filter): இது, அனைத்துச் சுத்திகரிப்புகளையும் செய்யும் வகையில் உள்ளது. ஆனால், குறைந்தளவில் ஆக்ஸிஜனும் நீரோட்டமும் இருப்பதால், சுத்திகரிப்புத் திறன் குறைவாக இருக்கும். இயந்திர வடிகட்டுதலுக்குப் பஞ்சும், இரசாயன வடிகட்டுதலுக்குக் கரியும் இந்த எந்திரத்தில் அடுக்குகளாக அமைந்துள்ளன.
எனினும், இயந்திர மற்றும் இரசாயன வடிகட்டுதலுக்கு வேறு பொருள்களைக் கொண்டும் இந்த வடிகட்டியை மாற்றிக் கொள்ளலாம். வடிகட்டிப் பொருள்களின் மேல் வளரும் பாக்டீரியாக்களால் உயிரி வடிகட்டுதல் நடக்கும். இதன் இயந்திர மற்றும் உயிரி திறன், வடிகட்டியின் குறைந்தளவு ஆக்ஸிஜன் மற்றும் குறைந்தளவு நீர் ஓட்டத்தால் குறைவாக இருக்கும்.
இதை மலிவாகவும், எளிதாகவும் பராமரிக்கலாம் என்பதால், அதிகளவில் பயன்பாட்டில் உள்ளது. பஞ்சில் உள்ள கரிமப் பொருள்களை நீக்குவதற்கு வாரம் ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும். உயிரி சுத்திகரிப்புக்கு நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் அழியாமல் இருக்க, மீன் வளர்ப்புத் தொட்டியின் நீரால் பஞ்சைச் சுத்தம் செய்ய வேண்டும். இது, குறைந்தளவு மீன்கள் உள்ள சிறிய மீன் வளர்ப்புத் தொட்டிகளுக்கு ஏற்றது.
சரளை வடிகட்டி: இதில், தொட்டியின் கீழே துளையிட்ட தட்டுகள் இருக்கும். அதன் மேல் மண், கல் அல்லது கூழாங்கல் போன்றவை மூலக்கூறுகளாக இடப்பட்டிருக்கும். இத்தட்டில், செங்குத்துக் குழாய்கள், காற்று அல்லது நீர் பம்புகள் மூலம் நீரை உயர்த்துவதற்காக அமைக்கப்பட்டிருக்கும்.
நீரானது மண், கல், கூழாங்கல் வழியாக ஊடுருவிச் செல்லும் போது, துகள்கள் நீக்கப்பட்டு இயந்திர வடிகட்டுதல் நடைபெறும். பெரிய பரப்பைக் கொண்ட மூலக்கூறுகளின் மேல் வளரும் பாக்டீரியாக்களால் உயிரி வடிகட்டுதலும் நடைபெறும்.
சில சரளை வடிகட்டிகள், இரசாயனச் சுத்திகரிப்புகாகக் கரிப் பொதியுறையால் அமைக்கப்பட்டிருக்கும். இந்த வடிகட்டியில் சில தீமைகளும் இருக்கின்றன. மூலக்கூறுகளின் வகைகள், ஆழம் மற்றும் மூலக்கூறுகள் மேல் வெவ்வேறாக அமைக்கப்படும் அலங்காரப் பொருள்களால் நீரோட்டம் சமமாக இருப்பதில்லை. எனவே, வடிகட்டியில் திறன் செயல்படாத இடங்கள் தோன்றும். இந்த இடங்களில் கழிவுப் பொருள்கள் தேங்கி நின்று, ஆபத்தான ஹைட்ரஜன் சல்பைட் உருவாக வாய்ப்பளிக்கும்.
இவ்வகை வடிகட்டியைப் பயன்படுத்தும் போது, மூலக்கூறுகளாக இருக்கும் மண், கல், கூழாங்கல் ஆகியவற்றைச் சுத்தம் செய்ய வேண்டும். சரளை வடிகட்டியைப் பயன்படுத்தும் தொட்டியைச் சரியாகப் பராமரிக்காமல் இருந்தால், நைட்ரேட்டும் பாஸ்பேட்டும் அதிகமாகி விடும்.
சரளை வடிகட்டிகள் குறைந்தளவு மீன்களுள்ள தொட்டிகளில் பெரும்பாலும் பயன்படுகின்றன. நன்னீர்த் தாவரங்கள் உள்ள மீன் வளர்ப்புத் தொட்டிகளில் சரளை வடிகட்டிகளைப் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில், தாவரத்தின் வேர்கள் சரளையில் வளர்வதால் நீரோட்டம் பாதிக்கப்படும்.
பவர் வடிகட்டி: இது, பல்வேறு வடிவங்களில் சந்தைகளில் அதிகளவில் உள்ளன. இது, மீன் வளர்ப்புத் தொட்டியில் பின்னால் வைப்பதற்கு உருவாக்கப்பட்டது. இந்த வடிகட்டி மூன்று விதமான வடிகட்டுதலையும் செய்யும். பராமரிப்பதற்கு எளிதாக இருக்கும்.
மீன் வளர்ப்புத் தொட்டியின் நீர், பஞ்சு அல்லது நுரைப் பொருள்கள் வழியே செல்லும் போது வடிகட்டுதல் நடக்கும். இயந்திர வடிகட்டுதலின் ஒரு பலவீனம் என்னவெனில், வடிகட்டுதல் அமைப்பு விரைவில் அடைத்துக் கொள்ளும். இதனால், நீரானது வடிகட்டுதல் அமைப்பில் செல்லாமல் அதன் மேலே செல்லும். எனவே, வடிகட்டுப் பொருள்களை நீக்கிக் கழுவுதல் அவசியமாகும்.
வடிகட்டுதல் அமைப்பைச் சுத்தம் செய்வது மற்றும் மாற்றுவது; வடிகட்டி அமைப்பில் உள்ள உயிரியல் சுமையைப் பொறுத்து அமையும். வடிகட்டி அமைப்பில் இருக்கும் பாக்டீரியாக்களால் உயிரி வடிகட்டுதல் நடக்கும். சில வகைகளில், வடிகட்டி அமைப்பில் செறிவூட்டிய கரி தனியாக வைக்கப்படும். இது, நீரில் கரைந்துள்ள சத்துகளை நீக்குவதற்கு உதவும்.
இந்த வடிகட்டி குறைந்த அல்லது நடுத்தர விலையில் இருப்பதாலும், பராமரிப்பு எளிதாக இருப்பதாலும், தொடக்க நிலை மீன் வளர்ப்போருக்கு ஏற்றதாகும். நன்னீர்த் தாவரமுள்ள மற்றும் உவர்நீர் மீன் வளர்ப்புத் தொட்டிகளுக்கு இவ்வடிகட்டி ஏற்றதல்ல.
நன்னீர்த் தாவரமுள்ள மீன் வளர்ப்புத் தொட்டிகளில் நீரின் மேற்பரப்பு தொந்தரவு இல்லாமல் இருக்க வேண்டும். அப்போது தான், நீரின் கரியமில வாயுவின் செறிவு சீராகி, நன்னீர்த் தாவரங்கள் செழித்து வளரும்.
குப்பி வடிகட்டி(Canister Filters): இது, அழுத்தம் ஏற்றப்பட்ட அமைப்பாகும். இது மீன் வளர்ப்புத் தொட்டிக்குக் கீழே இருக்கும். மூன்று விதமான வடிகட்டுதல்களைச் செய்யும். முழு அமைப்பாக, சொந்தக் குழாயைக் கொண்டிருக்கும். அல்லது நடுத்தர அமைப்பாகக் கூடுதல் பம்ப் தேவைப்படும் விதத்தில் கிடைக்கும். குப்பி வடிகட்டியின் இயந்திர வடிகட்டுதல், மற்ற வடிகட்டிகளைக் காட்டிலும் மிக உயர்ந்தது.
ஏனெனில், குப்பி வடிகட்டியில் அழுத்தம் ஏற்றப்பட்டு இருப்பதால், நீரானது அதிக வேகத்தில் லேசான, மிகவும் சிறிய துகள்கள் கூட வடிகட்டப்படும். சில நேரங்களில் இந்தப் பொருள்கள் அல்லது வடிகட்டி அமைப்புகள் எந்தளவு துகள்களைப் பிடிக்குமோ அதற்கேற்ப மதிப்பீடு செய்யப்படும். இந்த மதிப்பீடு மைக்ரான்களில் அளவிடப்படும். மைக்ரானின் அளவு சிறியது எனில் அவ்வடிகட்டி சிறிய துகள்களை நீக்கும் திறன் கொண்டதாகும்.
மேலும், இந்தக் குப்பி வடிகட்டியில், இரசாயன வடிகட்டிப் பொருள்களைத் தேவைக்கேற்ப சேர்த்துக் கொள்ளலாம். குப்பி வடிகட்டியின் உயிரி வடிகட்டுதல், நீரிலுள்ள ஆக்ஸிஜனைப் பொறுத்து இருப்பதால் குறைந்து காணப்படும். குப்பி வடிகட்டி நடுத்தர விலையில் கிடைக்கும்.
இதற்கு மிதமான பராமரிப்புப் போதும். இவ்வடிகட்டியின் தன்மைகளால் இது சரியான தேர்வாக அமைகிறது. மீன் வளர்ப்புத் தொட்டியில் உள்ள தாவரங்களின் வளர்ச்சிக்குக் கரியமில வாயு தேவைப்படுவதால், குப்பி வடிகட்டி ஏற்றதாக உள்ளது.
ஈரமான/உலர் வடிகட்டிகள் (Wet/Dry Filters)
ஈரமான/உலர் வடிகட்டிகள், நீர்த்துளி வடிகட்டிகள் எனவும் அழைக்கப்படும். இவை மீன் வளர்ப்புத் தொட்டிக்குக் கீழே இருக்கும். தொட்டியில் இருந்து வழியும் நீரைப் பெற்றுக் கொள்ளும். நீர் வழியும் அமைப்பானது, இரண்டு பெட்டிகளுடன் இருக்கும், அவை மீன் தொட்டியின் பின்புறமும், தொட்டிக்கு உள்புறமும் இருக்கும்.
நீரானது உறிஞ்சுதல் அல்லது பம்ப் மூலம் நீக்கப்படலாம். நீர் ஓடும் போது முதலில் முன் வடிகட்டியைக் கடந்து ஓர் அறைக்குச் செல்லும். அங்கு நீரின் ஆக்ஸிஜன் அளவைக் கூட்டுவதற்காகக் கிளர்ச்சி செய்யப்படும். பிறகு அந்த நீர், சொட்டுநீர்த் தட்டு அல்லது தெளிப்பு வழியாக உயிரியல் வடிகட்டியில் பரப்பப்படும்.
பிறகு, இந்நீர் உயிரியில் பகுதியில் உள்ள பள்ளத்தை அடையும். இங்கே இரசாயன வடிகட்டிப் பொருள்களால் மேலும் சுத்திகரிக்கப்பட்டு, இறுதியாக மீன் வளர்ப்புத் தொட்டியை அடையும். இந்த வடிகட்டிகளின் விலை அதிகமாகும். இவற்றுக்குக் குறைந்தளவு பராமரிப்பே போதுமானது.
சுத்திகரிப்பு எந்திரத் தேர்வு
தொட்டிக்குத் தேவையான திறனுள்ள சுத்திகரிப்பு எந்திரத்தைத் தேர்வு செய்ய வேண்டும். தேர்வு செய்வதற்கு முன், வகைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு, நம் முதலீடு எவ்வளவு என்று தீர்மானிக்க வேண்டும். இறுதியாக, மீன் தொட்டியின் அளவைக் கணித்து, அதற்கு ஏற்ற எந்திரத்தை முடிவு செய்ய வேண்டும்.
எந்திரத் திறனைக் கணக்கிட, முதலில் தொட்டியின் கொள்ளளவைக் கணக்கிட வேண்டும். அதில் நான்கு மடங்கு அதிகத் திறனுள்ள எந்திரத்தைத் தேர்வு செய்ய வேண்டும். உதாரணமாக, தொட்டியின் நீர்க் கொள்ளளவு 100 லிட்டர் என்றால், நமக்குத் தேவையான நீர்ச் சுத்திகரிப்பு எந்திரத்தின் திறன், ஒரு மணி நேரத்தில் குறைந்தது 400 லிட்டர் உந்து திறனைக் கொண்டிருக்க வேண்டும். ஏனெனில், அப்போது தான் சரியான முறையில் நீரைச் சுத்திகரித்து, மீன்களைச் சிறப்பாகப் பராமரிக்க முடியும்.
முனைவர் சா.ஆனந்த்,
ஸ்ரீ.ஜெயப்பிரகாஷ்சபரி, வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையம், பவானிசாகர், ஈரோடு.
ச.சுதர்சன், டாக்டர் எம்.ஜி.ஆர்.மீன்வளக் கல்லூரி, தலைஞாயிறு, நாகப்பட்டினம்.
சந்தேகமா? கேளுங்கள்!