My page - topic 1, topic 2, topic 3

தக்காளி விதைகளைப் பிரிக்கும் கருவி!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2018

முக்கியமான காய்கறிப் பயிரான தக்காளி, தமிழகம் முழுவதும் பயிரிடப்படுகிறது. உற்பத்தி மிகுந்தால், கடும் விலைச்சரிவு ஏற்படுகிறது. சில நேரங்களில் பறிப்புக்கூலி கூடக் கிடைக்காமல் போவது, விவசாயிகளுக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் பேரிழப்பாகும். எனவே, விளைந்த பொருளை வீணாக்காமல் அறுவடை செய்து மதிப்புக்கூட்டுப் பொருளாக மாற்றுவது, வருமானத்தை உறுதி செய்யும் வழியாகும். தக்காளியின் சதைப் பகுதியை மதிப்புள்ள உணவாக மாற்றுவதைப் போல, அதன் விதைகளையும் பதப்படுத்தி நல்ல விலைக்கு விற்கலாம். தக்காளி விதைகளை நான்கு முறைகளில் பிரித்தெடுக்கலாம்.

நொதிக்க வைத்தல்

தக்காளியின் அளவு சிறிதாகவும், விதைகள் கூடுதலாகவும் இருந்தால் இந்த முறையைப் பயன்படுத்தலாம். இம்முறையில் விதைகளைத் தவிர, சதைப்பகுதி முழுவதும் வீணாகி விடும். நன்கு பழுத்த பழங்களைப் பறித்து மண்பானையில் இட்டு இரண்டு நாட்களுக்குப் பழுக்க வைக்க வேண்டும். பிறகு கையால் அல்லது எந்திரத்தால் நன்றாகக் கசக்கி, மேலும் இரண்டு நாட்களுக்கு வேறொரு பாத்திரத்தில் நொதிக்கவிட வேண்டும். சூழ்நிலையைப் பொறுத்து இன்னும் சில நாட்களுக்கு நொதிக்க வைக்க நேரிடலாம்.

பிறகு, நொதித்த கலவையை கை அல்லது குச்சியால் சுழற்றினால் நுரை உண்டாகி, விதைகள் பிரிந்து அடியில் தங்கி விடும்; சதைப்பகுதி மேலாக மிதக்கும். இதை நீருடன் அகற்றி விட்டு விதைகளை 7-8 முறை நல்ல நீரில் கழுவி வெய்யிலில் உலர்த்தி, காற்றுப் புகாத அடைப்பான்களில் இட்டு, உலர்ந்த மற்றும் குளிருள்ள இடத்தில் வைக்க வேண்டும்.

காரச் சுத்திகரிப்பு முறை

பழம் பெரிதாகவும், விதைகள் குறைவாகவும் இருந்தால் இந்த முறையைக் கையாளலாம். இதில், கனிந்த பழங்களை இரண்டாக அறுத்து, விதைப்பகுதி மட்டும் தேநீர்க் கரண்டியால் சுரண்டி எடுக்க வேண்டும். மற்ற பகுதியை உணவுப் பொருளாக மாற்றலாம். பிறகு, 5 லிட்டர் கொதிநீர், 150 கிராம் வாஷிங்சோடா கலந்த கலவையில், விதைகள் நிறைந்த பகுதியை இட்டு, ஒருநாள் இரவு ஊற வைத்தால், விதைகள் தனியாகப் பிரிந்து பாத்திரத்தின் அடியில் தங்கி விடும். பிறகு, நீரை வடித்து விட்டு விதைகளைக் கழுவி வெய்யிலில் உலர்த்திச் சேமிக்க வேண்டும்.

அமிலச் சுத்திகரிப்பு முறை

இம்முறை அதிவேக முறை எனப்படுகிறது. பெருமளவில் விதைகளை உற்பத்தி செய்ய இம்முறை பயன்படுகிறது. இங்கேயும் விதையுள்ள சதைப்பகுதி மட்டும் பிரிக்கப்படுகிறது. பிறகு, 12 கிலோ சதைப்பகுதிக்கு 30 மில்லி ஹைட்ரோ குளோரிக் அமிலம் வீதம் சேர்த்துச் சுத்திகரித்தால் 15-30 நிமிடங்களில் விதைகள் தனியாகப் பிரிந்து விடும். பிறகு, விதைகளைக் கழுவி வெய்யிலில் உலர்த்திச் சேமிக்கலாம். ஒரே நாளில் விதைகள் பிரிக்கப்படுவதால், மற்ற முறைகளில் விதைகள் நிறம் மாறுவதைப் போல இம்முறையில் மாறுவதில்லை. இதிலும், ஏனைய சதைப்பகுதி உணவாகப் பயன்படுகிறது.

கருவி மூலம் பிரித்தல்

இம்முறை மிகவும் எளிதானது. இதில் காரமோ அமிலமோ பயன்படுவதில்லை. இம்முறையில், கனிந்த பழங்கள் கருவி மூலம் கூழாக்கப்படும். பிறகு நீர் மூலம் விதைகளும் சதையும் பிரிக்கப்படும். இதில் பயன்படும் நீர் மறுசுழற்சி செய்யப்படும். இதற்காகச் சிறிய பம்ப் இதில் உள்ளது. இம்முறையில் சதைப்பகுதி வீணாவதில்லை.

இந்தக் கருவியின் அளவு 500x450x1,000 மி.மீ. ஆகும். இது ஒரு மணி நேரத்தில் 180 கிலோ பழங்களைப் பிழிந்து 1.8 கிலோ விதைகளைப் பிரிக்கும். இக்கருவியை இயக்க 0.5-1.0 குதிரைத் திறனுள்ள மோட்டார் தேவை. இதன் விலை 15,000-20,000 ரூபாயாகும். இதை ஒருமணி நேரம் இயக்க, 10 ரூபாய் செலவாகும்.


முனைவர் மா.சித்தார்த்,

முனைவர் க.வேல்முருகன், வேளாண்மை அறிவியல் நிலையம்,

காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks