My page - topic 1, topic 2, topic 3

Advertisement:

பதினேழு புதிய இரகங்களை வெளியிட்டது வேளாண் பல்கலைக் கழகம்!

TNAU

கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகம், 9 வேளாண் பயிர்கள், 8 தோட்டக்கலை மற்றும் காய்கறிப் பயிர்கள் என, 17 புதிய இரகங்களையும், நான்கு விவசாயத் தொழில் நுட்பங்கள் மற்றும் ஐந்து பண்ணை எந்திரங்களையும் உருவாக்கி உள்ளது. இவற்றை விவசாயிகளின் பயன்பாட்டுக்காக, இந்தப் பல்கலைக் கழகச் செயல் துணைவேந்தர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டார். அந்த இரகங்கள் விவரம் வருமாறு:

நெல் கோ.55

தமிழகத்தின் சொர்ணாவாரி, கார், குறுவை, நவரை ஆகிய பருவங்களில் 115 நாட்களில் விளையும் குறுகிய கால இரகம். எக்டருக்கு, 6,050 கிலோ மகசூல் கிடைக்கும். அரிசி, மத்திய சன்ன இரகமாக இருக்கும்.

நெல் ஏ.டி.டீ.57

கார், குறுவை, நவரை மற்றும் கோடைப் பருவத்துக்கு ஏற்ற இரகம். 115 நாட்களில் விளையும் குறுகிய கால இரகம். எக்டருக்கு 6,500 கிலோ மகசூல் கிடைக்கும். கருகல் நோய்க்கு எதிர்ப்புத்திறன் கொண்டது. அரிசி சன்ன இரகமாக இருக்கும்.

நெல் டி.கே.எம்.15

வறட்சி, நீர்ப்பற்றாக்குறை சூழ்நிலையில் வளரக் கூடியது. வடகிழக்குப் பருவமழைக் காலத்தில், அதாவது, செப்டம்பர், அக்டோபரில் விதைக்கலாம். 115-120 நாட்களில் விளையும் குறுகிய கால இரகம். எக்டருக்கு 5,800 கிலோ மகசூல் கிடைக்கும்.

நெல் டி.ஆர்.ஒய்.5

தமிழகத்தின் குறுவை மற்றும் நவரையில் விளையக் கூடியது. 115-120 நாட்களில் விளையும் குறுகிய கால இரகம். உவர் நிலத்துக்கு ஏற்றது. எக்டருக்கு 5,100 கிலோ மகசூல் கிடைக்கும். அரிசி மத்திய சன்ன இரகமாக இருக்கும்.

உளுந்து ஏ.டீ.டி.7

இந்த இரகம் தரிசு நிலத்துக்கு ஏற்றது. 60-70 நாட்களில் விளையும். எக்டருக்கு 724 கிலோ மகசூல் கிடைக்கும்.

பச்சைப்பயறு வி.பி.என்.5

கரீப் பருவமான ஜூன்-ஜூலை, ரபி பருவமான செப்டம்பர்-அக்டோபர், கோடைக்காலமான ஜனவரி-பிப்ரவரியில் விதைக்க ஏற்றது. 70-75 நாட்களில் முதிர்ச்சி அடையும். எக்டருக்கு 870 கிலோ மகசூல் கிடைக்கும்.

நிலக்கடலை வி.ஆர்.ஐ.9

சித்திரை, ஆடி, ஐப்பசி ஆகிய பருவங்களுக்கு ஏற்றது. மார்கழியில் இறவைப் பயிராகப் பயிரிடலாம். 95-110 நாட்களில் விளையும் குறுகிய கால இரகம். இலைப்புள்ளி, துரு நோய்க்கு மிதமான எதிர்ப்புத்திறன் கொண்டது. எக்டருக்கு 2,500 கிலோ மகசூல் கிடைக்கும்.

நிலக்கடலை வி.ஆர்.ஐ.10

சித்திரை, ஆடி, ஐப்பசி ஆகிய பருவங்களுக்கு ஏற்றது. மார்கழியில் இறவைப் பயிராகப் பயிரிடலாம். குறுகிய கால இரகம். எண்ணெய்ச்சத்து 45 சதம் இருக்கும். இலைப்புள்ளி, துரு நோய்க்கு மிதமான எதிர்ப்புத்திறன் கொண்டது. எக்டருக்கு 2,530 கிலோ மகசூல் கிடைக்கும்.

கரும்பு கோ.ஜி.7

நல்ல மண் வளத்தில் சராசரியாக எக்டருக்கு 134 டன்; உவர் நிலத்தில், எக்டருக்கு, 126 டன் மகசூல் கிடைக்கும். சிவப்பழுகல் நோய்க்கு மிதமான எதிர்ப்புத்திறன் கொண்டது.

வாழை கோ.3

கற்பூரவள்ளி மரபு கலப்பினச் சேர்க்கையால் உருவாக்கப்பட்டது. வயது 13 மாதங்கள். வாழைக் குலையின் எடை சராசரியாக 12 கிலோ இருக்கும். இது, வேர் நுண்புழுத் தாக்குதலைத் தாங்கி வளரக்கூடியது.

பலா பி.கே.எம்.3

மார்ச்-மே, நவம்பர்-டிசம்பர் என இருமுறை அறுவடை செய்யலாம். ஒரு பழம் 21 கிலோ இருக்கும். ஒரு மரத்தில் 2.3 டன் பழங்கள் வரை காய்க்கும். மரத்துக்கு 106 பழங்கள் கிடைக்கும். எக்டருக்கு 156 மரங்கள் நடலாம்.

நாவல் பி.கே.எம்.1

வறண்ட, பயன்படாத நிலங்களில் பயிர் செய்யலாம். ஒரு பழத்தின் எடை 17 கிராம். மரத்துக்கு 82 கிலோ மகசூல் கிடைக்கும். மருத்துவக் குணங்களான ஆன்ட்டி ஆக்சிடன்ட் மற்றும் முக்கியத் தாதுகள் உள்ளன.

கத்தரி எம்.டி.யூ.2

இந்த இரகத்தின் வயது 140 நாட்கள். ஜூன்-செப்டம்பர் மற்றும் நவம்பர்- பிப்ரவரி ஆகிய காலங்களில் பயிரிட ஏற்றது. தண்டுத் துளைப்பான் மற்றும் பூசண நோய்க்கு மிதமான எதிர்ப்புத்திறன் மிக்கது. சராசரியாக எக்டருக்கு 31 டன் மகசூல் கிடைக்கும்.

அவரை கோ.15

கொம்பில் வளரக்கூடிய இரகம். செடிக்கு 14 கிலோ மகசூல் கிடைக்கும். பச்சை அவரைகள் நட்ட 70 நாட்களில் காய்க்கத் தொடங்கி, 240 நாட்கள் வரை காய்க்கும். 25 முறை அறுவடை செய்யலாம்.

சேனைக்கிழங்கு கோ.1

சரளை மண்ணுக்கு ஏற்றது. இதன் வயது 240 நாட்கள். பிப்ரவரி-மார்ச்சில் நடவு செய்யலாம். எக்டருக்கு 50 டன் மகசூல் கிடைக்கும்.

மஞ்சள் பி.எஸ்.ஆர்.3

மே-ஜூன் மாதங்களில் நடவு செய்யலாம். இதன் வயது 240-250 நாட்கள். மஞ்சளைப் பயிரிடும் அனைத்து மாவட்டங்களுக்கும் ஏற்றது. இலைப்புள்ளி, இலைக்கருகல் நோய்களுக்கு மிதமான எதிர்ப்புத்திறன் கொண்டது.

கொத்தமல்லி கோ.5

கரீப் மற்றும் ரபி பருவத்தில் பயிர் செய்யலாம். தழைக்காக 35 நாளில் இருந்து அறுவடை செய்யலாம். எக்டருக்கு 4.7 டன் மகசூல் கிடைக்கும்.


தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம், கோவை

Share:

Advertisement:

  சந்தேகமா? கேளுங்கள்!  

Advertisement:

இன்னும் படியுங்கள்!