My page - topic 1, topic 2, topic 3

தமிழக அரசுக்கு கிருஷி கர்மான் விருது!

செய்தி வெளியான இதழ்: ஜனவரி 2020

மிழக அரசின் வேளாண்மைத் துறை, விளைபொருள்களின் உற்பத்தித் திறனைக் கூட்டுவதன் மூலம், இரு மடங்கு உற்பத்தி மும்மடங்கு வருமானம் என்னும் இலக்கில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

2011-12 ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட இரண்டாம் பசுமைப்புரட்சி மற்றும் உணவு தானிய இயக்கத்தின் வாயிலாக, தமிழ்நாட்டில் இப்போது இரு மடங்கு தானிய உற்பத்தி எட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் முயற்சி, வேளாண் உத்திகளால், தமிழ்நாடு 2011-12, 2013-14, 2014-15, 2015-16 ஆகிய ஆண்டுகளில் 100 இலட்சம் மெட்ரிக் டன்னுக்கு மேல் தானிய உற்பத்தியைச் செய்து சாதனை படைத்துள்ளது.

2011-12 ஆம் ஆண்டில் 101.52 டன் அளவில் தானிய உற்பத்தியைச் செய்ததற்காக, 2013-14 ஆம் ஆண்டில் 6.14 இலட்சம் டன் அளவில் பயறு வகைகளை உற்பத்தியைச் செய்ததற்காக, 2014-15 ஆம் ஆண்டில் 40.79 இலட்சம் டன் அளவில் சிறுதானிய உற்பத்தியைச் செய்ததற்காக, 2015-16 ஆம் ஆண்டில் 113.85 இலட்சம் டன் அளவில் தானிய உற்பத்தியைச் செய்ததற்காக என, நான்கு முறை மத்திய அரசிடமிருந்து கிருஷி கர்மான் விருதைத் தமிழக அரசு பெற்றுள்ளது.

இதைப்போல கடந்த 2017-18 ஆம் ஆண்டிலும் 107.33 இலட்சம் டன் அளவில் தானிய உற்பத்தியைச் செய்து சாதனை படைத்துள்ளது. இதில், 10.382 இலட்சம் டன் அளவில் எண்ணெய் வித்துகளை உற்பத்தி செய்ததற்காக, 2017-18 ஆண்டின் கிருஷி கர்மான் விருதுக்குத் தமிழக அரசு தேர்வு செய்யப்பட்டது.

இந்நிலையில் 02.01.2020 அன்று கர்நாடக மாநிலம் தும்கூரில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், தமிழக அரசின் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம், கிருஷி கர்மான் விருது மற்றும் 2 கோடி ரூபாய் ரொக்கப் பரிசையும் வழங்கினார். மேலும், கடலூர் மாவட்டம் செந்தில்குமார், நாமக்கல் மாவட்டம் பாப்பாத்தி ஆகியோர், நிலக்கடலை மற்றும் எள் உற்பத்தியில் அதிக மகசூலை எடுத்ததற்காக முறையே, ரூ.2 இலட்ச ரூபாய் ரொக்கப்பரிசும் சான்றிதழும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து கடந்த 13.01.2020 அன்று தலைமைச் செயலகத்தில் வேளாண்மைத் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களைச் சந்தித்து, இந்த கிருஷி கர்மான் விருதினைக் காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.

இந்நிகழ்வில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் க.சண்முகம், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மைத்துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங்பேடி, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையர் எஸ்.ஜே.சிரு, வேளாண்மைத்துறை இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தி, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள்துறை இயக்குநர் டாக்டர் என்.சுப்பையன், வேளாண்மைப் பொறியியல்துறை தலைமைப் பொறியாளர் முனைவர் ஆர்.முருகேசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.


மு.உமாபதி

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks