தமிழகத்தின் நெற்களஞ்சியம் எனப் போற்றப்படுவது தஞ்சாவூர் மாவட்டம். சோழநாடு சோறுடைத்து என்னும் புகழ் என்றும் விளங்க, காவிரித் தாயின் அமுதுண்டு, ஊருக்கெல்லாம் சோறூட்டும் மண்ணும் மக்களும் நிறைந்த சிறப்புமிக்க மாவட்டம். இங்குள்ள காட்டுத் தோட்டத்தில், 1972 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது, மண் மற்றும் நீர் மேலாண்மை ஆராய்ச்சி நிலையம்.
தொடக்கத்தில் இந்நிலையம், தமிழக அரசின் வேளாண்மைப் பொறியியல் துறையால் இயக்கப்பட்டு வந்தது. கடந்த 01.04.1981 முதல், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருகிறது. காவிரிப் பாசனப் பகுதி உழவர்களுக்கு உதவும் வகையில் இயங்கி வரும் இந்நிலையம் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, 2020 ஆம் ஆண்டு முதல், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் என்னும் பெயரில் செயல்பட்டு வருகிறது.
நிலையத்தின் குறிக்கோள்கள்
காவிரிப் புதுப்பாசனப் பகுதிக்கு ஏற்ற உயர் விளைச்சல் இரகங்களை உருவாக்கி, மதிப்பீடு செய்து அறிமுகப்படுத்துதல். இந்தப் பகுதியின் முக்கியப் பயிர்கள் மற்றும் அவற்றுக்கான பாதுகாப்பு உத்திகளை உருவாக்குதல். காவிரிப் புதுப்பாசன மண்டலத்தில், முக்கியப் பாசனப் பகுதிக்கு ஏற்ற நீர் நிர்வாக உத்திகளை உருவாக்குதல்.
காவிரிப் பாசனப் பகுதிக்கு ஏற்ற மாற்றுப்பயிர்த் திட்டங்களை உருவாக்குதல். நெல், பயறு, எண்ணெய் வித்துகள் ஆகியவற்றில், வல்லுநர் விதை உற்பத்தி மற்றும் பல்கலைக்கழக ஆதார விதை உற்பத்தியை மேற்கொள்ளுதல். புதிய பயிர் இரகங்கள் மற்றும் தொழில் நுட்பங்களை வயல்களுக்குக் கொண்டு செல்லுதல். வேளாண் விரிவாக்கப் பணியாளர்கள் மற்றும் உழவர்களுக்குத் தேவையான தொழில் நுட்பங்களை வழங்குதல்.
தற்போதைய ஆராய்ச்சித் திட்டங்கள்
இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம் மூலம், அகில இந்திய ஒருங்கிணைந்த உழவியல் ஆய்வுத் திட்டம்-ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டம். சுழல்நிதி உதவியுடன் மெகா விதை உற்பத்தித் திட்டம்-வேளாண்மைப் பயிர்களில் விதை உற்பத்தி. தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டத்தின் கீழ், காவிரிப் பாசனப் பகுதிக்கு ஏற்ற பல்வேறு பணிகளைச் செய்தல்.
பயிர் மேலாண்மை
நெற்பயரில் ஊடுபயிராக, பசுந்தாள் உரப்பயிரான தக்கைப்பூண்டை, 10:1 வரிசையில் நடுவது குறித்த ஆய்வு. நேரடி நெல் விதைப்பில் ஊடுபயிர் இடுவதற்கான வாய்ப்புகள் குறித்த ஆய்வு. தமிழ்நாட்டில் நெல் சார்ந்த பயிர்த் திட்டத்தில் சொட்டுநீர் உரப்பாசன முறை குறித்த ஆய்வு. நெற்பயிருக்குக் காய்ச்சலும் பாய்ச்சலும் பாசனம் குறித்த ஆய்வு. குறுவை நெல் சாகுபடியைச் சேறு கலக்காமல் செய்வதற்கான வாய்ப்புகள் குறித்த ஆய்வு.
புழுதி முறை நேரடி நெல் விதைப்பில் களை நிர்வாகம். நஞ்சைச் சேற்று நெல் விதைப்பில் களை நிர்வாகம். காவிரிப் பாசனப் பகுதிக்கு ஏற்ற மாற்றுப் பயிர்த்திட்ட ஆய்வு. காவிரிப் பாசனப்பகுதி குறு விவசாயிகளுக்கான ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டம் குறித்த ஆய்வு.
பயிர் மேம்பாடு
பயிர் இரகங்களை வெளியிடுவதற்கு முன் பல வயல்களில் ஆய்வு செய்தல். விவசாயிகள் பயிரிட்டு வரும் பெயரில்லா உளுந்துப் பயறை, காவிரிப் பாசனப்பகுதி நெல் தரிசில் சாகுபடி செய்வதற்கு ஏற்ற வகையில் மேம்படுத்துவது பற்றிய ஆய்வு மற்றும் விவசாயிகள் சாகுபடி செய்து வரும் பெயரில்லா குறுகிய கால நெல் விதைகளை, காவிரிப் பாசனப்பகுதி நேரடி நெல் விதைப்புக்கு ஏற்ற வகையில் மேம்படுத்துவது குறித்த ஆய்வு நடந்து வருகிறது.
சாதனைகள்
குறிப்பிட்ட வயலுக்கேற்ற உர மேலாண்மை என்னும் ஆராய்ச்சியின் மூலம், காவிரிப் புதுப்பாசனப் பகுதியில் மணிச்சத்து அதிகமாக இருப்பது தெரிய வந்தது. அதனால், பரிந்துரையில் பாதியளவு மணிச்சத்தை இட்டால் போதும் எனவும், சாம்பல்சத்தை, பரிந்துரையைவிட ஒரு மடங்கு அதிகமாக இட்டால் விளைச்சல் அதிகமாகும் எனவும் உழவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டன.
மண்ணாய்வுப்படி வயலுக்கேற்ப உரமிடுவதால், மண்வளமும், சுற்றுச்சுழலும் காக்கப்படுவதுடன், மகசூலும், நிகர வருவாயும் கூடுமெனக் கண்டறியப்பட்டது. தழைச்சத்தை மேலுரமாக இட வேண்டிய நேரமும் அளவும், பச்சை வண்ண அட்டை மூலம் கண்டறியப்பட்டது. குறுவை நெற்பயிரில், பச்சை வண்ண அட்டையின் குறியீடு நான்குக்குக் கீழே வரும்போது, எக்டருக்கு 35 கிலோ தழைச்சத்து வீதம் இட வேண்டும் என அறியப்பட்டது.
காவரிப் பாசனப் பகுதியில், பல்வேறு மண் வகைகளின் நீர்ப்பிடிப்புத் திறன், நீர் கிடைக்கும் திறன், வறட்சிநிலை ஆகியன அறியப்பட்டுள்ளன. நெல், நெல் சர்ந்த பயிர்களுக்கு ஏற்ற, களை, உர, நீர் நிர்வாக முறைகள் விவசாயிகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
திருந்திய நெல் சாகுபடி குறித்த விரிவான ஆய்வை, நிலையத்திலும், உழவர்களின் வயல்களிலும் மேற்கொண்டதில் கிடைத்த துல்லியமான அணுகுமுறைகள், உழவர்களுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
காவிரிப் பாசனப்பகுதி குறு விவசாயிகளுக்கான ஒருங்கிணைந்த பண்ணைய முறை குறித்த ஆய்வில் கிடைத்த முடிவுகளைப் பின்பற்றும்படி உழவர்களுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த பண்ணைய மாதிரித்திடல் செயல்பட்டு வருகிறது. ஆய்வின் அடிப்படையில், காவிரிப் பாசனப்பகுதிக்கு ஏற்ற மாற்றுப் பயிர்களைப் பயிரிடும்படி விவசாயிகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
நெற்பயிருக்குக் காய்ச்சலும் பாய்ச்சலும் பாசன முறையைப் பின்பற்றினால், மகசூல் பாதிக்காமல் நீரையும் சேமிக்கலாம். அதாவது, ஏற்கெனவே பாய்ச்சிய நீர், வயலில் 10 செ.மீ. அளவில் குறைந்த பிறகு பாசனம் செய்தால் போதும். கரு உருவாகும் நிலை, தொண்டைக்கதிர் நிலை மற்றும் பூக்கும் போது பாசனம் அவசியம்.
எதிர்கால ஆய்வுகள்
மண்வளப் பாதுகாப்பு மற்றும் சூழல் மேம்பாட்டுக்கான மாதிரிப் பண்ணை உருவாக்கம், ஒருங்கிணைந்த நீர் நிர்வாக மாதிரிப் பண்ணை உருவாக்கம், நெல் சாகுபடியை இயந்திரமயமாக்கல், ஒருங்கிணைந்த களை மேலாண்மை, காவிரிப் பாசனப்பகுதி நெல் தரிசில் உளுந்து சாகுபடி உத்திகளைக் கண்டறிதல், நெல் சாகுபடியில் வறட்சி மேலாண்மை குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
பிற பணிகள்
மண்ணாய்வு, நீராய்வு மற்றும் தொழில் நுட்ப ஆலோசனைகளை வழங்குதல். வல்லுநர் விதைகள், உண்மை நிலை விதைகளை உற்பத்தி செய்தல். வேளாண் விரிவாக்கப் பணியாளர்கள் மற்றும் உழவர்களுக்குப் பயிற்சியளித்தல். கள ஆய்வு மற்றும் பண்ணை வளர்ச்சி ஆலோசனைகளை வழங்குதல். புதிய தொழில் நுட்பங்களை உழவர்களிடம் கொண்டு சேர்த்தல்.
மேலும் விவரங்களுக்கு: பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், தஞ்சாவூர்-613 501. தொலைபேசி: 04362-67680. மின்னஞ்சல்: arsswmri@tnau.ac.in
முனைவர் ச.பொற்பாவை,
முனைவர் அ.இராஜேஸ்குமார், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், தஞ்சாவூர்-613501.
சந்தேகமா? கேளுங்கள்!