My page - topic 1, topic 2, topic 3

மாடித் தோட்ட சாகுபடி முறைகள்!

Terrace garden

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2019

மாடித் தோட்டத்தை அமைப்பதால் வீட்டின் அழகு கூடுகிறது; தரமான காய்கறிகள் கிடைக்கின்றன; தட்பவெப்ப நிலை சீராகிறது; பயனுள்ள பொழுது போக்காகவும் அமைகிறது. எனவே, மாடித் தோட்டத்தின் தேவை மக்களுக்கு நன்றாகப் புரியத் தொடங்கியுள்ளது.

மாடித் தோட்டத்தின் பயன்கள்

ஆண்டு முழுவதும் தேவையான காய்கறிகளைப் பெறலாம். சிறிய பரப்பில் பயிரிடுவதால், இரசாயனப் பூச்சி, பூசணக் கொல்லிகளைப் பயன்படுத்தாமல், இயற்கை முறையில் நச்சுத் தன்மையற்ற காய்கறிகளைப் பெறலாம். சத்துகள் அழிந்து போகாத வகையில், தேவைக்கேற்ப, அவ்வப்போது பறித்துப் பயன்படுத்தலாம். மழைநீரைச் சேமித்து மாடித்தோட்டப் பயிர்களுக்குப் பயன்படுத்தலாம். காய்கறிகளின் விலையுயர்வைப் பற்றிக் கவலைப்படாமல், அவற்றைத் தேவையான அளவில் சமைத்து உண்ணலாம். உடல் நலம் மற்றும் மன நிறைவை வழங்கும் பயன்மிகு பொழுதுபோக்காக அமைகிறது.

சுற்றுச்சூழல்

நகரங்களில் அமைக்கப்படும் மாடித்தோட்டச் செடிகள், வெப்பத்தைக் குறைத்து, வீடுகளில், சுற்றுப்புறத்தில் குளிர்ந்த சூழல் உருவாகக் காரணமாக உள்ளன. இதனால், மின்சாரப் பயன்பாடு குறைகிறது. மழைநீரை வீணாக்காமல், அதிகளவில் பயன்படுத்தும் சூழலும் உண்டாகிறது. நகரங்களில் உள்ள 50% கட்டடங்களில் மாடித் தோட்டங்களை உருவாக்கினாலே 0.1-0.80 செல்சியஸ் வெப்பம் குறையுமென ஜப்பானியர்கள் கூறுகின்றனர். மாடிகளில் தொட்டிகளை பயன்படுத்தி காய்கறிகள் மற்றும் பூச்செடிகளை வளர்க்கலாம். இடம் மிகக் குறைவாக உள்ள வீடுகளில்  செங்குத்துத் தோட்டங்களை அமைக்கலாம். அதாவது, படரும் கொடி வகைகளை, பூவகைகளை வளர்க்கலாம்.

மாடித் தோட்டம் அமைத்தல்

பெரும்பாலும் மாடித் தோட்டங்கள் சதுர வடிவில் அமைக்கப்படுகின்றன. இம்முறையில் சிறிய இடத்தில் நிறையச் செடிகளை வளர்க்கலாம். 4×4 அடி சதுரத்தில் அமைத்தால், ஒவ்வொரு சதுரத்திலும் விதவிதமான காய்கறிச் செடிகளை வளர்க்கலாம்.

தொட்டிகளில் வளர்த்தல்

தொட்டிகளில் செடிகளை வளர்க்கும் முறை சிறந்ததாகக் கருதப்படுகிறது. 4×4 அடி தொட்டிகள் அல்லது சிறிய தொட்டிகள் அல்லது கெட்டியான பாலித்தீன், தார்பாலின் பைகளில் செடிகளை வளர்க்கலாம். இவற்றில், கொஞ்சம் மண், மட்கிய தென்னைநார்க் கழிவு, மண்புழுவுரம், தொழுவுரம், உயிர் உரங்களைக் கலந்து பயன்படுத்தலாம். இவை கனமில்லாமல் இருப்பதுடன், நல்ல முறையில் நீரைப் பயிர்களுக்குக் கொடுக்கும். தேவையற்ற நீரை வடியச் செய்யும்.

மண்ணை அதிகமாகப் பயன்படுத்த நினைத்தால், மாடியின் தாங்கு திறனை உறுதி செய்து கொள்ள வேண்டும். தொட்டியின் தூரிலிருந்து சற்று மேலே சிறிய துளை இருக்க வேண்டும். பருவநிலைக்கு ஏற்ற செடிகளை வளர்க்க வேண்டும். படரும் காய்கறி, பூ வகைகளுக்குக் குச்சிகளைக் கட்ட வேண்டும். மாடித் தோட்டத்தில், தக்காளி, வெண்டை, கத்தரி, மிளகாய், முள்ளங்கி, பாகல், புடலை, பீர்க்கு, பூசணி, பீன்ஸ், கொத்தமல்லி, புதினா, சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், கீரை வகைகளை வளர்க்கலாம்.

ரோஜா, மல்லிகை, செண்டுமல்லி, சாமந்தி, சம்பங்கி போன்ற பூ வகைகள், கோலியஸ், குளோரோபைடம், டிரசீனா, ரோடோடென்ரான், ரங்கூன் கிரீப்பர், வெர்பினா டெசர்ட், ரோஸ் போன்ற அழகுச் செடிகள், வல்லாரை, கற்றாழை, கரிசலாங்கண்ணி போன்ற மூலிகைகளை வளர்க்கலாம்.

பயிர்ப் பாதுகாப்பு

நோய்களைத் தாங்கி வளரும் செடிகளை வளர்க்க வேண்டும். எடுத்துக்காட்டு: தேமல் நோய்க்கு எதிர்ப்புத் திறனுள்ள அர்கா அனாமிகா, வர்ஷா ஆகிய வெண்டை வகைகள். முடிந்த வரையில் புழுக்களைக் கையால் பொறுக்கி அழிக்க வேண்டும். வேப்ப எண்ணெய், வேப்பங்கொட்டைச் சாறு, வேப்பம் புண்ணாக்குச் சாறு அகியவற்றைத் தெளிக்கலாம். வேப்ப எண்ணெய்யை பயன்படுத்தும் போது, ஒட்டு மருந்து அல்லது சோப்புக் கரைசலைச் சேர்க்க வேண்டும்.

தேவைப்படின், புழுக்களைக் கட்டுப்படுத்த, குறைந்த நச்சுத்தன்மை கொண்ட மருந்தைத் தெளிக்கலாம். மருந்தைத் தெளித்து 10 நாட்கள் வரை காய்களைப் பறிக்கக் கூடாது. பூசண நோய்கள் தென்பட்டால், ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் பைட்டலான் அல்லது 2 சாப் வீதம் கலந்து தெளிக்கலாம். டிரைக்கோடெர்மா விரிடி, சூடோமோனாஸ் புளுரோசன்ஸ் போன்ற பூசணங்கள் மூலம் உபயோகித்து கட்டுப்படுத்தலாம்.


ALAGU KANNAN

முனைவர் பு.அழகுக்கண்ணன்,

இராஜா ஜோஸ்லின், இராஜ்கலா, திருமலைவாசன், அசோக் குமார், சோபனா,

வேளாண்மை அறிவியல் நிலையம், சோழமாதேவி, அரியலூர்-612902.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks