My page - topic 1, topic 2, topic 3

மாநில வேளாண் இயந்திரங்கள் தகவல் மையம்!

ந்தியாவிலேயே, விவசாயிகளிடம் வேளாண் இயந்திரமயமாக்கலைப் பிரபலப்படுத்தும் நோக்கில், அனைத்து வேளாண் பொறியியல் தொழில் நுட்பங்களை ஒருங்கிணைத்து, தனித்தன்மை மிக்க, மாநில வேளாண் இயந்திரங்கள் தகவல் மையம், சென்னை, நந்தனத்தில் அமைந்துள்ள வேளாண்மைப் பொறியியல் துறை, தலைமைப் பொறியாளர் அலுவலக வளாகத்தில் சுமார் 27,142 சதுரடி பரப்பில், ரூபாய் 8.89 கோடியில் அமைக்கப்பட்டு உள்ளது.

இங்கே, வேளாண் பொறியியல் நடவடிக்கைகளான வேளாண் இயந்திரமயமாக்கல், விளை பொருள்களை மதிப்புக்கூட்டும் தொழில் நுட்பங்கள், மரபுசாரா ஆற்றல் தொழில் நுட்பங்கள், மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்புத் தொழில் நுட்பங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன.

மேலும், இந்தத் தகவல் மையத்தில் வேளாண் கருவிகளை உற்பத்தி செய்யும் 56 முன்னணி நிறுவனங்கள், தங்களது வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை, பொதுமக்கள் பார்வைக்காகக் காட்சிப்படுத்தி உள்ளன. தற்போது வேளாண்மைப் பணிகளில் அதிகளவில் பயன்படும், நவீன டிராக்டர்கள், பவர் டில்லர்கள் மற்றும் மண்ணள்ளும் இயந்திரங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளன.

நிலத்தைத் தயார் செய்வதிலிருந்து அறுவடை வரை பயன்படும் நவீனக் கருவிகளான, சுழல் கலப்பைகள், திருப்பும் வசதி கொண்ட வார்ப்பு இறகுக் கலப்பை, பல்வேறு விதை நடவுக் கருவிகள், தானியங்கி நெல் நாற்று நடவு இயந்திரம், களையெடுக்கும் இயந்திரங்கள், தீவனப்பயிரை வெட்டும் கருவி, கரும்புத்தோகையை வெட்டும் கருவி, தேங்காய் மட்டை உரிக்கும் கருவிகள், பல்வகைத் தானியக் கதிரடிக்கும் கருவிகள், வைக்கோல் கட்டும் கருவிகள், வேளாண் கழிவுகளைத் துகளாக்கும் கருவிகள், பருத்தி பறிக்கும் கருவி போன்றவை, பயிர்கள் வாரியாக, காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன.

நீர் மேலாண்மைக்கு உதவும் பல்வேறு நிறுவனங்களின் நுண்ணீர்ப் பாசன அரங்குகள், பாசன மோட்டார் பம்புசெட் அரங்குகள், ஆக்சிஜனேற்றியுடன் கூடிய மாதிரி பண்ணைக்குட்டை மற்றும் தானியங்கி நீர்ப்பாசன மாடித்தோட்டம் ஆகியன அமைக்கப்பட்டு உள்ளன.

விளை பொருள்களைப் பதப்படுத்தும் மற்றும் மதிப்புக்கூட்டும் இயந்திரங்களான, மரச்செக்கு இயந்திரங்கள், ஏலக்காய் உலர்த்தும் கருவி, நிலக்கடலைத் தோலை நீக்கும் கருவி, தானியங்களில் இருந்து கற்களை நீக்கும் கருவி, பருப்பு உடைக்கும் இயந்திரம், வெங்காயச் சேமிப்பு அமைப்பு போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன.

மரபுசாரா ஆற்றல் தொழில் நுட்பங்களான, சூரிய மின்வேலி, சூரியக்கூடார உலர்த்தி, சூரியசக்தி பம்புசெட் போன்றவற்றின் இயக்க மாதிரி அமைப்புகள் பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம், விவசாயிகள் மற்றும் படித்த இளைஞர்கள் ஒரே இடத்தில் வேளாண் பொறியியலின் அனைத்து நுட்பங்களையும் அறிந்து கொள்ளலாம்.

மேலும், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் செயல்களை விளக்கும் ஒளி, ஒலி விளக்கக் காட்சிக்கூடம் அமைக்கப்பட்டு உள்ளது. சிறப்பம்சமாக, வருங்காலத் தலைமுறைக்கு வேளாண் இயந்திரங்களின் பரிணாமத்தை உணர்த்தும் விதமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வேளாண்மைக்குப் பயன்பட்டு வந்த பழைமை வாய்ந்த தொழில் நுட்பங்களை விளக்கும் 42 வகையான வேளாண் கருவிகளின் தொகுப்பு, காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது.

இத்தகவல் மையம், முன்னணி நிறுவனங்களிடம் இருந்து ஆறுமாத வாடகை வருமானமாக 30,98,000 ரூபாயை அரசுக்கு ஈட்டிக் கொடுத்துள்ளது. இம்மையத்தை, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கட்டணமின்றி, இலவசமாகப் பார்த்துப் பயனடைந்து வருகின்றனர்.

மேலும், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் ஆகியவற்றின் மூலம் விவசாயிகளுக்காக நடத்தப்படும் பயிற்சிகளில் ஒரு பகுதியாக, அந்த விவசாயிகளை அழைத்து வந்து காண்பிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.


வேளாண்மைப் பொறியியல் துறை, தமிழ்நாடு அரசு.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks