கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019
தொட்டிகளில் வளர்க்கப்படும் டைகர் ஷார்க் என்னும் வெள்ளிக் கெளுத்தி மீன் இப்போது அழகு மீனாக மட்டுமின்றி, உணவு மீனாகவும் பயன்படுகிறது. இம்மீன், பங்கா மீன், சியாமேஸ் சுறா, கட்சிக் கெளுத்தி, ஆற்றுக் கெளுத்தி, நெய்மீன், நாட்டு வஞ்சிரம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த மீன் 12 மாதங்களில் 2 கிலோ எடையை அடையும். இது மேலுணவை நம்பியே வளர்கிறது. அதனால் வளர்ப்புக்குளம் மற்றும் ஏனைய வளர்ப்பு முறைகளில் எளிய முறைகளே பயன்படுகின்றன. கலப்பின மீன்வளர்ப்பில் இந்த மீனைக் கெண்டை மீனுடன் சேர்த்து வளர்க்கலாம்.
இதைத் தனியாக வளர்த்தால் அதிக மீன்களை இருப்பு வைக்கலாம். குறைந்த உப்புத் தன்மையுள்ள நீரில் இம்மீன் வளர்வதால், உவர்நீர்க் குளம் மற்றும் இறால் வளர்ப்புக் குளத்திலும் இம்மீன் நன்கு வளரும். மேலும் இம்மீன், மூச்சுக்காற்று குறைவாக உள்ள நீரிலும் வாழும். அதனால் பங்கா மீன், வளர்ப்புக்கு ஏற்ற அருமையான மீனாகும்.
நாற்றங்கால் வளர்ப்பு
இளங்குஞ்சுகளைச் சதுர மீட்டருக்கு 80-120 என்னுமளவில் இருப்பு வைத்து 3-4 வாரங்களுக்கு வளர்க்க வேண்டும். மீன் தூளையும் அரிசித் தவிட்டையும் சம அளவில் கலந்து மேலுணவாக இட வேண்டும். இந்தத் தீவனத்தை ஒருநாளில் நான்கு முறையாகப் பிரித்துக் கொடுக்க வேண்டும். மொய்னாவை உயிருணவாக அளிக்கலாம். இவ்வளர்ப்பில் ஒவ்வொரு மீனும் 10-20 கிராம் எடையை அடையும்.
குளங்களில் வளர்ப்பு
நாற்றங்காலில் வளர்ந்த பங்கேசியஸ் மீனை மட்டும் வளர்ப்பதெனில், ஏக்கருக்கு 8,000-12,000 மீன்களை இருப்பு வைக்கலாம். கூட்டுமீன் வளர்ப்பில் கெண்டை மீன்களுடன் வளர்ப்பதெனில், 4,000-6,000 பங்கேசியஸ் மீன்களை இருப்பு வைக்கலாம். இந்த மீன்கள் 8-10 மாதங்களில் 1.0-1.5 கிலோ எடையில் இருக்கும்.
மிதவைவலைக் கூண்டில் வளர்த்தல்
இம்முறையில் ஒரு சதுர மீட்டரில் 60-150 மீன்களை இருப்பு வைக்கலாம். எடுத்துக்காட்டாக, 4x6x3 மீ. அளவுள்ள கூண்டில் 3,600-10,800 மீன்களை வளர்க்கலாம். இவற்றில் 80-90 சத மீன்கள் உயிர் வாழும். இவை 10-12 மாதங்களில் ஒரு கிலோ எடையை அடையும். இதைப் போல, குளத்தில் தடுப்புவலைக் கூண்டில் ஏக்கருக்கு 10,000-16,000 மீன்களை வளர்க்கலாம்.
செமெண்ட் தொட்டியில் வளர்த்தல்
செமெண்ட் தொட்டியில் ஒரு கன மீட்டரில் 50-100 மீன்களை வளர்க்கலாம். எடுத்துக்காட்டாக, 4x6x3 அகல, நீள, உயரமுள்ள தொட்டியில் 3,600-7,200 மீன்களை இருப்பு வைக்கலாம்.
உணவு
இயற்கை உணவுகளான தாவர, விலங்கின நுண்ணுயிர்களை, உரமிட்டு உற்பத்தி செய்ய வேண்டும். இம்மீன்கள் அனைத்து வகை உணவுகளையும் உண்ணும். சிறிய மற்றும் சற்று வளர்ந்த மீன்களுக்கு, தவிடு, புண்ணாக்குக் கலவையை மேலுணவாகக் கொடுக்கலாம். குஞ்சுகளுக்குக் கொடுக்கப்படும் உணவு நீர்த்தன்மையில் இருக்க வேண்டும். சிறிய கணுக்காலிகள், மெல்லுடலிகள், அழகிய செடிகள், சிறிய மீன்கள் ஆகியவற்றை இளம் குஞ்சுகள் உண்ணும். பெரிதாக வளர்ந்ததும் உயிர்மீன் இனங்களை இம்மீன்கள் உண்பதில்லை.
கூச்சப்படும் இம்மீன்கள், தொட்டியின் அடியில் கூட்டம் கூட்டமாக நீந்தித் திரியும். இருண்ட பகுதியில் மேய்வதை விரும்பும். குருணை உணவை விரும்பி உண்ணும். இவ்வுணவு வீணாகாமல் இருக்க, உணவுத் தட்டுகளைப் பயன்படுத்தலாம். மீனுணவில் 25% புரதம் இருக்க வேண்டும். இளம் குஞ்சுக்கு அதன் எடையில் 10% அளவில் உணவளிக்க வேண்டும். வளர்ந்த மீன்களுக்கு 5% அளவில் உணவளிக்கலாம். மிதவைவலைக் கூண்டில் மிதக்கும் உணவுகளை மட்டும் கொடுக்க வேண்டும்.
நோய்
இந்த மீன்களை ஒட்டுண்ணிகள் தாக்கும். இவை மீன்களின் உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும். செவிள்களில் தட்டைப் புழுக்கள் இருக்கும். இவற்றைச் சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். பங்கேசியஸ் மீன்கள் கடல் மீன்களைப் போல இருப்பதால், சந்தையில் நல்ல விலை கிடைக்கும். எனவே, இந்த மீன்களை விவசாயிகள் விரும்பி வளர்த்துப் பயனடையலாம்.
முனைவர் கி.சிவக்குமார்,
முனைவர் க.வேல்முருகன், வேளாண்மை அறிவியல் நிலையம்,
காட்டுப்பாக்கம்-603203, காஞ்சிபுரம்.
சந்தேகமா? கேளுங்கள்!