மீன் உற்பத்தியில் வளர்ச்சியற்ற மீன் குஞ்சுகளின் பங்கு!

மீன் 1 Fish 1

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020

க்களின் புரதத் தேவையை நிறைவு செய்வதில் இறைச்சிப் புரதம் முக்கியப் பங்கு வகிக்கிறது. பெருகி வரும் மக்கள் தொகையால், கால்நடைகள் மற்றும் மீன்கள் மூலம் கிடைக்கும் இறைச்சிப் புரதத்தின் தேவை மிகுந்துள்ளது.

குறிப்பாக, சிறந்த மருத்துவக் குணங்களைக் கொண்ட மீன்களைப் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் பெருகி வருவதால், மீன் புரத உற்பத்தியைப் பெருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

உலகளவில் 50% உணவுமீன் உற்பத்தி மீன்வளர்ப்புத் துறையால் செய்யப்படுகிறது. 2018 ஆம் ஆண்டில் மீன்வளர்ப்புத் துறையின் மூலம் 80.31 மில்லியன் டன் மீன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. உலக மீன் உற்பத்தியில் சீனா முதலிடமும் இந்தியா இரண்டாம் இடமும் வகிக்கின்றன.

புதிய உத்திகளின் வரவால் மீன் உற்பத்தி இரு மடங்காக உயர்ந்துள்ளது. ஆயினும், தீவிர வளர்ப்பு முறைகளும், தவறான தாய் மீன்கள் பராமரிப்பும், மீன் குஞ்சுகளின் தரத்தை வெகுவாகப் பாதிக்கின்றன.

தற்போது, தரமான மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்வது தான், மீன்வளர்ப்புத் துறைக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. தரம் என்பது, மீன் குஞ்சுகள் எந்த நோய்க்கும் உள்ளாகாமல் மிக குறுகிய காலத்தில் விற்பனை அளவை எட்டுவதாகும். இதற்கு வளர்ச்சிக் குன்றிய ஆண்டு மீன்களைப் பண்ணையில் வளர்ப்பது மிகவும் ஏற்றதாகும்.

வளர்ச்சிக் குன்றிய மீன் குஞ்சுகள்

பொதுவாக, மீன் குஞ்சுகள் நாற்றங்காலில் 30-60 நாட்கள் வரை இருக்கும். இவை விரலளவு வளர்ந்ததும் பண்ணை வளர்ப்புக்குக் கொடுக்கப்படும். சில சமயம் இந்தக் குஞ்சுகள் நாற்றங்காலில் ஓராண்டு வரை வளர்க்கப்படும்.

இவை, கடும் நெரிசலில், குறைந்த உணவில் வளர்க்கப்படுவதால் வளர்ச்சிக் குன்றியிருக்கும். இவற்றை ஆண்டு மீன் விதைகள் என்பர். இவற்றைக் குளங்களில் முறைப்படி வளர்த்தால் நல்ல வளர்ச்சியை அடைந்து விடும்.

அதாவது, நாற்றங்கால் வளர்ப்பில் கிடைக்காத இடவசதியும் நல்ல உணவும், வளர்ப்புக் குளத்தில் கிடைப்பதால், பொதுவான மீன் குஞ்சுகள் ஓராண்டில் அடையும் ஒரு கிலோ எடையை விட, இந்த ஆண்டு மீன் குஞ்சுகள் இரு மடங்காக, அதாவது, 2 கிலோ வரை வளர்ந்து விடும்.

இவ்வளர்ச்சி, ஈடுகட்டிய வளர்ச்சி எனப்படும். இந்த ஈடுகட்டிய வளர்ப்பு; வரம்பு மீறிய, முழுமையான மற்றும் குறைவான என மூன்று விதமாக உள்ளது.

ஈடுகட்டிய வளர்ச்சியின் சிறப்பு

மீன்கள் அவற்றின் வயதைப் பொறுத்து, தொடர்ந்து வளரும். எனினும், முதிர்ந்த மீன்களில் இந்த வளர்ச்சிக் குறைவாகவே இருக்கும். சுற்றுச்சூழலும், கிடைக்கும் சத்துகளும் அவற்றின் வளர்ச்சியை வெகுவாகக் கட்டுப்படுத்தும்.

ஆனால், சாதாரண மீன்களின் வளர்ச்சியை விட வளர்ச்சிக் குன்றிய மீன்களின் வளர்ச்சி அதிவேகமாக இருக்கும். இந்த வளர்ச்சி; கிடைக்கும் உணவு, சாதகமற்ற காலம் மற்றும் சுற்றுச்சூழல், மீன்களின் முதிரும் வயது ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும்.

வளர்ச்சிக் குன்றிய மீன் குஞ்சுகளின் உண்ணும் திறன் சிறப்பாக இருக்கும். இம்மீன்கள்; சாதகமற்ற சூழலில் அடைய முடியாத உடல் எடையை, சாதகமான சூழலில் இரட்டிப்பாக அடையும். அதாவது, முதலாண்டில் தவறவிட்ட உடல் எடையைவிட இரு மடங்காக, வளர்ப்புக் குளத்தில் வளரும் ஓராண்டிலேயே அடைந்து விடும்.

வளர்ச்சிக் குன்றிய மீன் குஞ்சுகளின் உணவு மாற்றும் திறன், சாதாரண மீன்களை விடக் கூடுதலாக இருப்பதால், இவை வளர்வதற்குக் குறைந்தளவு தீவனமே தேவைப்படுகிறது. எடுத்துக்காட்டாக, சாதாரணக் கெண்டைமீன் ஒரு கிலோ எடையை அடைய 1.5-1.8 கிலோ தீவனம் தேவை.

ஆனால், வளர்ச்சிக் குன்றிய மீன் ஒரு கிலோ எடையை அடைய 1.5 கிலோவுக்கும் குறைவான தீவனமே போதும். மேலும், வளர்ப்புக் குளத்தில் இவற்றின் பிழைப்புத்திறன், சாதாரண மீன் குஞ்சுகளை விடக் கூடுதலாக உள்ளது.

ஈடுகட்டிய வளர்ச்சியால் ஏற்படும் மாற்றங்கள்

சரியான உணவு கிடைக்காத நிலையில், மீன்களின் உடல் இயக்கம், அவை உயிர் வாழ்வதற்கு வழிவகுக்கும். பிறகு, சூழ்நிலை சரியாகும் போது, அவற்றின் உடலியக்கத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்படும்.

அதாவது, அவற்றின் இரத்த அணுக்கள், நோயெதிர்ப்புத் திறன் மற்றும் செரிமானத் திறன் பன்மடங்கு கூடும். கடினச் சூழலில் இருந்து இயல்பு நிலைக்கு மாறும் போது, இரத்தத்தில் உள்ள கூறுகளின் அளவு அதிகமாகும்.

நோயெதிர்ப்புச் சக்தியைத் தரும் ஆல்புமின், குளோபுலின் ஆகியன, ஈடுகட்டிய வளர்ச்சியில் உள்ள மீன்களின் இரத்தத்தில் அதிகமாகி, அவற்றின் நோயெதிர்ப்புத் திறனைக் கூட்டும்.

கடந்த சில ஆண்டுகளாக மீன் வளர்ப்பில் தொற்று நோய்கள் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இவற்றிலிருந்து மீள வேண்டுமானால், மீன்களின் நோயெதிர்ப்புத் திறன் வலிமையாக இருக்க வேண்டும்.

குளத்தில் வளரும் மீன்களின் ஆற்றலுக்கு நாம் அளிக்கும் உணவே ஆதாரமாகும். ஈடுகட்டிய வளர்ச்சியின் போது, மீன்களுக்கு உணவு மூலம் கிடைக்கும் ஆற்றலில் பெரும்பகுதி, நோயெதிர்ப்புச் செல்களை உற்பத்தி செய்யவே பயன்படுகிறது. எனவே, வளர்ச்சிக் குன்றிய மீன்கள் எளிதில் நோய்களுக்கு உள்ளாவதில்லை. 

உணவு செரிமானம் மீன்களின் முக்கிய உடலியக்கம். இது தான் மீன்கள் இயங்கத் தேவையான சத்துகளை உணவிலிருந்து பிரித்தெடுக்க உதவுகிறது. இவற்றைப் பிரித்தெடுக்கச் செரிமான நொதிகள் உதவுகின்றன.

எ.கா: மாவுச்சத்தைச் செரிக்கும் அமைலேஸ், புரதத்தைச் செரிக்கும் புரட்டியேஸ், கொழுப்பைச் செரிக்கும் லைபேஸ். ஈடுகட்டிய வளர்ச்சியின் போது மீன்கள் தங்களின் எடையைக் கூட்ட, அதிகமாக உண்ணுகின்றன. இந்த உணவைச் செரிப்பதற்காக மீன்களின் வயிற்றில் இந்நொதிகள் அதிகமாகச் சுரக்கின்றன. இதனால், மீன்கள் உண்ட உணவில் பெரும்பகுதி செரித்து விடுவதால், குறைவாகவே கழிவு வெளியேறுகிறது.

ஈடுகட்டிய வளர்ச்சியால் ஏற்படும் தரம்

உடலுக்கு நன்மை செய்யும் உணவாக இருப்பதால், மக்களிடம் மீனுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இரசாயனங்களைப் பயன்படுத்தாமல், சரியான உணவுகள் மூலம் வளர்த்தால், மீன்களில் இயல்பான சத்துகள் நிறைவாக இருக்கும்.

ஈடுகட்டிய வளர்ச்சியில் இருக்கும் மீன்கள், அவற்றின் உடலில் முதலில் சத்துகளையே சேர்த்து வைக்கின்றன. குறிப்பாக, கொழுப்பையும் புரதத்தையும் சேர்க்கின்றன. மீன்களின் ஈடுகட்டிய வளர்ச்சியை இந்தக் கொழுப்பு தான் கட்டுப்படுத்துகிறது.

இம்மீன்கள் தசை மற்றும் உறுப்பு வளர்ச்சிக்கு அதிக ஆற்றலைச் செலவிடுவதால், சதை முள்ளெலும்பு குறைவாக உள்ளது. எனவே, ஈடுகட்டி வளரும் மீன்கள், சாதாரண மீன்களை விடத் தரமாக உள்ளன.

இனிவரும் காலத்தில் உற்பத்தியைப் பெருக்குவதும் மட்டுமே மீன் வளர்ப்பின் இலக்காக அமையாது; அதிகத் தரமும் நோக்கமாக அமையும். மாறிவரும் சூழலால் மீன் வளர்ப்புக்கு ஏற்ற நீர்நிலைகள் அமைவது மிகப்பெரிய சவாலாக உள்ளது.

அவற்றில் 6-8 மாதம் நீர் இருப்பதில்லை. அதனால், 4-6 மாத வளர்ப்பைக் கொண்டதாக மீன் வளர்ப்பு மாறி வருகிறது. மேலும், தீவிர வளர்ப்பு முறைகள் மற்றும் முறையற்ற செயல்களால் அதிகளவில் நோய்கள் பரவி வருகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த உதவும் இரசாயனப் பொருள்களையும் மக்கள் எதிர்க்கின்றனர்.

ஆக, உணவுப் பொருளின் தரத்தை மக்கள் உன்னிப்பாகக் கவனிக்கப் போகின்றனர். அதனால் மீன் வளர்ப்பில் தரமான மீன் குஞ்களை உருவாக்க வேண்டும். அவை நோய்க்கு உள்ளாகாமல், குறுகிய காலத்தில் விற்பனை எடையையும், சத்துகளையும் கொண்டிருக்க வேண்டும்.

இந்த நோக்கங்களை, வளர்ச்சிக் குன்றிய மீன் குஞ்சுகளால் மட்டுமே நிறைவேற்ற முடியும். ஏனெனில், அவை ஈடுகட்டிய வளர்ச்சி என்னும் சிறப்புப் பண்பைக் கொண்டுள்ளன. எனவே, மீன் பண்ணையாளர்கள் இவற்றை வளர்த்தால், உற்பத்தியைப் பெருக்கி, தரமான உணவை மக்களுக்கு வழங்க முடியும்.


இரா.சோமுசுந்தர்லிங்கம்,

பா.யுவராஜன், சா.ஆனந்த், ப.வேல்முருகன்,

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகம்,

நாகப்பட்டினம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading