My page - topic 1, topic 2, topic 3

அழகுக்கு அழகு சேர்க்கும் ரெயின்போ ஷார்க்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019

ரெயின்போ ஷார்க் என்பது, சிப்ரினிடே குடும்பத்தைச் சேர்ந்த வெப்ப மண்டல நன்னீர் மீனினமாகும். இது, தென்கிழக்கு ஆசியாவின் வெப்பமான நதிகளிலிருந்து தோன்றியது. இதன் உடல் இரு வண்ணங்களில் இருப்பதாலும், முதுகுத் துடுப்பானது சுறாவின் துடுப்பைப் போல இருப்பதாலும், ரெயின்போ ஷார்க் எனப்படுகிறது. இம்மீன் 6 அங்குல நீளம், 15-20 கிராம் எடை வரை வளரும். இந்த மீன்கள் 5-8 ஆண்டுகள் வரை வாழும். பொதுவாக இந்த மீன்களுக்குச் சண்டையிடும் குணமுள்ளதால், இதைத் தவிர்க்கும் வகையில் தொட்டிகளை வடிவமைக்க வேண்டும்.

உயிரியல் அமைப்பு

ரெயின்போ ஷார்க் மீனின் உடல் அடர் சாம்பல் நிறத்திலும், துடுப்புகள் சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்திலும் இருக்கும்.  வயிறு நீண்டு, தட்டையாகவும், முகவாய் கூராகவும், முதுகுத் துடுப்பு மேல்நோக்கியும் இருக்கும். இளம் வயதில் ஆண் மற்றும் பெண் மீன்களை அடையாளம் காண்பது மிகவும் கடினம். இனப்பெருக்க  வயதில் தான் அடையாளம் காண முடியும். இனப்பெருக்க வயதிலுள்ள பெண் மீன்களின் உடல் தடிமனாகவும், ஆண் மீன்களின் உடல் மெல்லியதாகவும், ஒளிரும் வண்ணங்களிலும் இருக்கும். மேலும், வால்நுனியில் சிறிய கறுப்புக் கோடுகளும் காணப்படும். அல்பினோ ரெயின்போ ஷார்க் மீனானது, ரெயின்போ ஷார்க் மீன்களைப் போன்ற அனைத்துச் சிறப்பம்சங்களையும் கொண்டிருக்கும். இவற்றின் துடுப்புகள் சிவப்பாகவும், உடல் வெள்ளையாகவும் இருக்கும்

ரெயின்போ ஷார்க்கின் குணங்கள்

இனப்பெருக்க முதிர்ச்சியடைந்த மீன்கள், வளர்ப்புத் தொட்டிகளில் கோபமாகவும், ஆதிக்கக் குணத்தோடும், சண்டையிட்டுக் கொண்டும் இருக்கும். இதனால், சிறிய மீன்கள் எப்பொழுதும் மறைவிடத்தில் ஒளிந்து கொள்ளும். ரெயின்போ ஷார்க் சுறுசுறுப்பாக நீந்தும். தொட்டியின் அடிப்பகுதியில் வளரும் பாசிகளைச் சாப்பிட்டு அங்கேயே வாழும். அதனால், இந்த மீன் அக்வாரியம் கிளீனர் எனப்படுகிறது. தொட்டியின் மேற்பரப்பில் வாழும் மீன்களுடன் சண்டையிட்டுக் கொள்வதில்லை. ஆனால், அடிப்பரப்பில் வாழும் மீன்களுடன் கடுமையாகச் சண்டையிட்டுக் கொள்ளும். இந்தச் சண்டைகளைக் குறைக்க, வளர்ப்புத் தொட்டிகளில் நீர் அதிகமாகவும், மீன்கள் குறைவாகவும் இருக்க வேண்டும். ரெயின்போ ஷார்க் மீன்கள் தொட்டியில் இருந்து வெளியே குதிக்கும் தன்மையுள்ளவை.  அதனால், தொட்டி எப்பொழுதும் மூடியிருக்க வேண்டும். பொதுவாக இவ்வகை நிகழ்வு முதன்முதலாக மீன்களைத் தொட்டியில் விடும் பொழுது ஏற்படும். நாளடைவில் இது குறைந்து விடும்.

வளர்ப்புத் தொட்டியைத் தேர்வு செய்தல்

ரெயின்போ ஷார்க் மீன்களை 200 லிட்டர் தொட்டிகளில் வளர்க்க வேண்டும். ஒரு தொட்டியில் ஒரு மீனை மட்டுமே விடவேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட மீன்களை விட நினைத்தால் தொட்டியின் நீளம் குறைந்தது ஆறு அடியும், 500 லிட்டர் கொள்ளளவும் இருக்க வேண்டும். தொட்டிகளில் நீர்வாழ் தாவரங்களை வளர்த்தால், மீன்களுக்கான மறைவிடமாக விளங்கி,  மீன்களிடையே மோதல்களைக் குறைக்கவும், உணவாகவும் பயன்படும். மீன் தொட்டியில் கூரிய சரளைக் கற்களைப் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில், அவை மீன்களின் உடலில் காயங்களை ஏற்பத்தும். அவற்றுக்குப் பதிலாக, மணல் மற்றும் கூரற்ற கற்களைப் பயன்படுத்தலாம்.

இணக்கமான மீன் இனங்கள்

தொட்டியில் ரெயின்போ ஷார்க் மீன்களுடன், மேற்பரப்பு அல்லது நடுப்பரப்பில் வாழக்கூடிய, அமைதித் தன்மையுள்ள மீன்களை வளர்க்கலாம். எடுத்துக்காட்டாக, கௌராமி, பார்ப், டேனியோ, ரெயின்போ போன்றவற்றை வளர்க்கலாம். சிச்சிலிட்ஸ், கேட் ஃபிஸ், ரெட் டைல்ஷார்க், பாலாஷார்க் போன்ற மீன்களை வளர்க்கக் கூடாது.

உணவு முறைகள்

இந்த மீன்கள், இயற்கையில் அல்லது காடுகளில் சிதைவுற்ற தாவரங்கள், பாசிகள், பூச்சிக் குஞ்சுகள், சிறு இறைச்சித் துண்டுகளை உண்ணும் தன்மை மிக்கவை. அடிமட்டத்தில் உள்ள பொருள்களை மட்டுமே உண்ணும். மிதக்கும் பொருள்களை உண்பதில்லை. தொட்டிகளில் இருக்கும் சரளைகள், தாவரங்கள் மற்றும் அலங்காரப் பொருள்களில் ஒட்டியிருக்கும் பொருள்களைச் சாப்பிடும். இந்த மீன்களை அலங்காரத்  தொட்டியில் வளர்க்கும் போது, துகள் உணவு, உறைந்த உணவு, உயிரி உணவு, தாவர வகைகள், உயிருள்ள பூச்சிகள் போன்றவற்றைக் கொடுக்கலாம்.

ஒரேவகை உணவைக் கொடுக்காமல் பல்வேறு உணவுகளைக் கொடுத்தால், விரைவாக வளர்ந்து இனபெருக்க வயதை அடையும். தாவர வகைகள், கீரை வகைகள், சீமைச் சுரைக்காய், பட்டாணி போன்றவற்றை உணவாகக் கொடுத்தால் நோயெதிர்ப்புத் திறன் கிடைக்கும். உயிரிகள் மற்றும் உறைந்த இறைச்சியைக் கொடுத்து வந்தால், இந்த மீன்களின் துடுப்புகளில் உள்ள சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம் அதிகமாகும். இவ்வகை மீன்களின் உண்ணும் நேரம் சுமார் 5 நிமிடங்கள் மட்டுமே இருக்க வேண்டும். அதற்கு மேல் உணவுப்பொருள் இருந்தால் அது நைட்ரஜன் சுழற்சியைப் பாதிக்கும். எனவே, ஒருநாள் உணவை 2-3 பகுதிகளாகப் பிரித்துக் கொடுக்க வேண்டும்.

இனவிருத்தி

இயற்கையில், இந்த மீன்களின் இனப்பெருக்கக் காலம் அக்டோபர் முதல் நவம்பர் வரையாகும். ஆனால், இது பருவக்கால மாற்றங்களால் மாறுபடுகிறது. முதலில் 280 லிட்டர் தொட்டியின் அடியில் 2 அங்குல உயரத்துக்குச் சரளைகளை அடுக்க வேண்டும். பின்னர், தீங்கைத் தரும் திரவ குளோரினை நீக்கும் இரசாயனங்களைச் சேர்க்க வேண்டும். மீன்கள் மறைவாக வாழ்வதற்கு ஏற்ப, தொட்டியைச் சுற்றிப் பாறைகள் மற்றும் அலங்காரப் பொருள்களை வைக்க வேண்டும். பின்னர், நீர் சுத்திகரிப்பான் மற்றும் நீர் சூடேற்றியைத் தொட்டியில் பொருத்த வேண்டும். இவை, நீரிலுள்ள அழுக்குகள், வேண்டாத பொருள்களை நீக்கவும், நீரின் வெப்பநிலையைச் சரி செய்யவும் உதவும். தொட்டியில் நீரின் வெப்ப நிலை 22-26 டிகிரி செல்சியஸ் இருக்க வேண்டும்.

பின்னர், இனப்பெருக்க மீன்களைத் தொட்டியில் விடவேண்டும். நான்கு  அங்குல நீளமுள்ள ரெயின்போ ஷார்க் மீன்கள் இனப்பெருக்க முதிர்ச்சியை அடைந்து விடும். ஒரு வாரம் கழித்து மீன்களின் உடலில் சேதம் எதுவும்  ஏற்படாமல் இருந்தால், செயற்கை முறையில் இனப்பெருக்கம் செய்ய முயலலாம். மீன்கள் சண்டையிட்டு, உடலில் காயங்கள் இருந்தால், அவை இனப்பெருக்கத்துக்கு ஏற்ற இணையில்லை என்பதை அறிந்து, புதிய இனப்பெருக்க முதிர்ச்சியடைந்த மீன்களைத் தொட்டியில் விடவேண்டும். அவற்றுக்குப் புரதம் மிகுந்த உணவுகளை வழங்க வேண்டும்.

தொட்டியில் தினமும் 25% நீரை மாற்ற வேண்டும். இது இனப்பெருக்கத்தைத் தூண்டும். பெண் மீன்கள் தொட்டியிலுள்ள சரளைக் கற்கள் மீது முட்டைகளை இடும். ஆண் மீன்கள் விந்தணுக்களை இந்த முட்டைகள் மீது தெளித்துக் கருவுறச் செய்யும். இந்த முட்டைகளை 40 லிட்டர் தொட்டிக்கு மாற்ற வேண்டும். தொட்டியில் நீர் சுத்திகரிப்பான், நீர் சூடேற்றி, காற்றுப்புகுத்தி ஆகியவற்றை இணைக்க வேண்டும். குறைந்தது 7 நாட்களுக்குள் முட்டைகள் பொரிந்து மீன் குஞ்சுகள் வந்து விடும்.

இந்த மீன் குஞ்சுகளுக்கு உணவாக, இன்ஃபுசோரியா, பாசி போன்றவற்றைக் கொடுக்க வேண்டும். இவ்வுணவை இரண்டு வாரங்களுக்குத் தொடர்ந்து கொடுக்க வேண்டும். பிறகு ஆர்டீமியா நாப்பிலியைக் கொடுக்க வேண்டும். மீன் குஞ்சுகள் ஒரு அங்குலம் வளர்ந்ததும் வளர்ப்புத் தொட்டிக்கு மாற்ற வேண்டும்.


பொ.கார்த்திக் ராஜா,

சா.ஆனந்த், ஜ.ஸ்டீபன் சம்பத் குமார், 

வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு இயக்ககம், தஞ்சாவூர்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks