My page - topic 1, topic 2, topic 3

மீனவர்களுக்காக இராமேஸ்வரம் கடலில் இறால் வளர்ப்புத் திட்டம்!

மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில், பிரதான் மந்திரி மத்சய சம்பாட யோஜனா என்னும், பிரதமர் மீன் வளர்ச்சித் திட்டத்தில், இராமேஸ்வரம் கடலில் இறால்களைப் பெருக்கும் திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. இதற்காக, மண்டபம் மத்திய மீன் ஆராய்ச்சி நிலையத்தில், ரூ.1.69 கோடி செலவில், இருபது கோடி இறால் குஞ்சுகளை வளர்க்கும் பணி நடந்து வருகிறது.

இராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதியைச் சேர்ந்த பெரும்பாலான மீனவர்கள், ஏற்றுமதிக்கு ஏற்ற இறால் மீன்களைப் பிடிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். எனவே, இந்த இறாலுக்காக மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கைப் பகுதிக்குள் சென்று விடுவதால், அந்நாட்டுக் கடற்படை வீரர்களால் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்.

இதனால், படகுகள், வலைகள் சேதமடைதல் மற்றும் மீனவர்கள் உயிரிழக்கும் சூழலும் ஏற்படுகிறது. இவற்றைத் தவிர்க்க, கடந்த சில ஆண்டுகளாக இராமேஸ்வரம் மண்டபத்தில் உள்ள மத்திய மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள், பச்சை வரி இறால் குஞ்சுகளை வளர்த்து, பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா பகுதியில் விட்டு வருகின்றனர்.

இந்த இறால் வளர்ப்புத் திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில், பிரதமர் மீன் வளர்ச்சித் திட்டத்தில் மண்டபம் மத்திய மீன் ஆராய்ச்சி நிலையத்துக்கு ரூ.1.69 கோடி ஒதுக்கி உள்ளது. இதன் மூலம், 2022 முதல் 2026 வரை, இருபது கோடி இறால் குஞ்சுகளை இராமேஸ்வரம் கடல் பகுதியில் விட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது. இதனால், மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்கச் செல்வதைத் தடுக்க முடியும் என மத்திய அரசு நினைக்கிறது.

ஆகவே, இத்திட்டத்தை விரைவாகச் செயல்படுத்தும் வகையில், மண்டபம் மத்திய மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள், இருபது தொட்டிகளை அமைத்து, அவற்றில், கடலில் இருந்து சேகரித்த பச்சை வரி இறால்களைப் பராமரித்து வருகின்றனர். இந்த இறால்கள் பொரிக்கும் குஞ்சுகளை 20-30 நாட்கள் வளர்த்து, இராமேஸ்வரம் கடல் பகுதியில் விட உள்ளனர். இதன் தொடக்கமாக, இம்மாதம் (அக்டோபர்) 11 ஆம் தேதி 10.20 இலட்சம் இறால் குஞ்சுகளைக் கடலில் விட்டுள்ளனர்.

வரும் 2026 ஆம் ஆண்டுக்குள் இருபது கோடி இறால் குஞ்சுகளைக் கடலில் விடுவது இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். பச்சை வரி இறால், ஒரு தடவையில் 52 ஆயிரம் முதல் 6 இலட்சம் குஞ்சுகள் வரை பொரிக்கும் தன்மை மிக்கது. எனவே, ஏற்றுமதிக்கு ஏற்ற இந்த இறால்களைக் கடலில் பெருமளவில் உற்பத்தி செய்வது, மீனவர்களுக்குப் பயனுள்ளதாக அமையும்.


பசுமை

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks