My page - topic 1, topic 2, topic 3

நிலத்தைப் பண்படுத்தும் உழவுக் கருவிகள்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019

ண்ணும் மக்களும் ஓய்வெடுக்கும் காலம் கோடையில், விவசாயிகள் அடுத்த சாகுபடிக்கான ஏற்பாடுகளைச் செய்வார்கள். அவற்றில், முக்கியமானது கோடையுழவு. கோடையுழவு கோடி நன்மை தரும், சித்திரை மாத உழவு பத்தரை மாற்றுத் தங்கம் என்னும் பழமொழிகள் கோடையுழவின் அருமையை உணர்த்தும். கோடையுழவால் மழைநீர் நிலத்துக்குள் செல்லும்; மண்ணரிப்புத் தடுக்கப்படும்; மண் இறுக்கம் குறையும்; தீமை செய்யும் பூச்சிகள் வாழும் களைச்செடிகள், கூட்டுப்புழுக்கள் அழியும். இந்த உழவுக் கருவிகள் பலவகைகளில் உள்ளன.

இரும்புக் கலப்பை

இதில் கலப்பையின் கருத்தடியைத் தவிர மற்ற பாகங்கள் இரும்பால் ஆனவை. கொழு தேயத்தேய நீட்டிக் கொள்ளலாம். மாடுகளின் உயரத்துக்கு ஏற்ப, கருத்தடியின் உயரம், கலப்பை உழும் ஆழம் மற்றும் கைப்பிடியின் உயரத்தையும் மாற்றிக் கொள்ளலாம். கலப்பையின் அடிப்பாகம் இரும்பால் ஆனதால், தேய்மானம் குறைவாகும். மண்ணைப் புரட்டும் வளைத்தகட்டைக் கலப்பையின் மேற்பகுதியில் பொருத்திக் கொள்ளலாம். இரண்டு மாடுகளால் இழுக்கப்படும் இதன் மூலம், ஒருநாளில் அரை எக்டர் நிலத்தை உழலாம்.

சட்டிக் கலப்பை

முதன்முதலில் நிலத்தை உழவும், கடினமான, உலர்ந்த சருகுகள், கற்கள் மற்றும் மரத்தின் வேர்கள் நிறைந்த நிலத்தை உழவும் இக்கலப்பை உதவும். இதில், முக்கியச் சட்டம், வட்டு ஏர்க்கால், கனமான சுருள் உழுசால் சக்கரம், அளவிச் சக்கரம் ஆகியன உள்ளன. இதில், 2, 3 அல்லது 4 உழும் வட்டுகள் இருக்கும். இதில், தேவைக்கேற்ப வட்டு ஏர்க்கால்களைப் பொருத்தலாம். வட்டின் கோணம் 40-45 டிகிரி வரையும், வெட்டப்படும் அகலம் மற்றும் சாய்கோணத்தின் அளவு 15-25 டிகிரி வரையும் இருக்கும். வட்டுகளின் முனைகள் கடினமாக, கூர்மையாக இருக்கும். வட்டிலுள்ள சுரண்டும் கருவிகள், ஒட்டும் மண்ணை அகற்றும். உழுசால் துண்டுகளுடன் முக்கோண வளைவுகள் சேர்ந்து மண்ணைப் புழுதியாக்கும்.

சுழலும் மண்வெட்டி

முதன்முதலில் நிலத்தை உழ உதவும். பயிர் வரிசைகளில் மண் கட்டமைப்பைப் பாதிக்காமல் உழலாம். இதில், முக்கிய இரும்புச் சட்டம், பற்சக்கரப் பெட்டி, சுழலும் மண்வெட்டி, ஆழக் கட்டுப்பாட்டுச் சக்கரம் ஆகியன உள்ளன. முக்கியச் சட்டம், மும்முனை இணைப்புடன் டிராக்டரின் பின்புறம் உள்ளது. மற்ற அனைத்துப் பாகங்களும் முக்கியச் சட்டத்தில் உள்ளன. மண்ணை வெட்டும் அமைப்பு, மண்வெட்டியைப் போல இருக்கும். இக்கருவி, ஆட்கள் மண்வெட்டியைப் பயன்படுத்துவதைப் போல, மண்ணைத் தோண்டிப் பின்புறம் வீசும். இதனால் அருகிலுள்ள பயிருக்குச் சேதமின்றி, ஆழமாக மண்ணை வெட்டலாம்.

வாய்க்கால் அமைக்க, தென்னைக்கு வட்டக்குழி அமைக்க, கரும்பு மற்றும் நெல் கட்டையில் உழ மற்றும் களையெடுக்கப் பயன்படுகிறது. இதன் மூலம் ஒருநாளில் ஒரு எக்டர் நிலத்தைச் சீரமைக்கலாம். 

சட்டிப்பலுகு

நிலத்தை முதல் இரண்டு நிலைகளில் பண்படுத்த உதவுகிறது. இதில் இரண்டு கூட்டு வட்டுகள் ஒன்றன் பின் ஒன்றாக உள்ளன. முதல் கூட்டு வட்டு மண்ணை வெளியே தள்ளவும், அடுத்த வட்டு மண்ணை உள்ளே தள்ளவும் பயன்படும். இதனால் மண், கட்டியின்றித் தூளாகி விடும். வெட்டும் வட்டுகள் கொத்துக் கலப்பையின் முக்கியப் பகுதியாகும். கூட்டு வட்டுகள் ஒன்றுடன் ஒன்று இணைந்திருக்கும் அமைப்பின் எதிர்த் திசையில் நகரும். முன்புறம் உள்ள வட்டு எவ்வளவு மண்ணைத் தள்ளுமோ, அதேயளவு மண்ணைப் பின்புறமுள்ள வட்டும் தள்ளும்.

பழத்தோட்டம் மற்றும் தோட்டப்பயிரில் இயக்கினால், இடது மற்றும் வலப்புறமுள்ள அடிக்கிளை மற்றும் மண்ணை, மரத்தின் அருகில் அல்லது தொலைவில் தள்ளிவிடும். வட்டுகளின் விளிம்பில் சிறிய பள்ளங்கள் இருப்பதால், களைகள் நிறைந்த நிலத்திலும் எளிதாக விதைப் படுக்கையைத் தயாரிக்கலாம்.

கொத்துக் கலப்பை

இக்கலப்பையால், உலர்ந்த மற்றும் ஈர நிலத்தில் விதைப் படுக்கையைத் தயாரிக்கலாம். இதில், முக்கியச் சட்டம், கலப்பையுடன் மீளும் தன்மையுள்ள மண்வாரி, நிலச் சக்கரம், ஒன்றோடொன்று இணைத்தல் அமைப்பு மற்றும் கனச்சுருள்கள் இருக்கும். உழும்போது ஏதேனும் கடினப்பொருள் மோதினால் கலப்பை உடையாமல் இருக்க, சுருள் கம்பிகள் உள்ளன. கலப்பைக் கொழுக்களின் இடைவெளியை மாற்றியமைத்து வரிசைப் பயிரில் களையெடுக்கலாம். இது சேற்றில் உழவும் பயன்படும்.

வாய்க்கால் தோண்டும் கருவி

இக்கருவியில் நீளமான இரு வளைப்பலகைக் கலப்பைகள் ஒன்றன்பின் ஒன்றாக, எதிரெதிராக, ஒரே கோட்டில் இரும்புச் சட்டத்தில் இருக்கும். இந்தச் சட்டம் மும்முனை இணைப்பின் மூலம் டிராக்டரில் பொருத்தப்படும். பலகைக் கலப்பைகளின் அடியில் மண்ணைத் தோண்டும் கொழுவும், தோண்டிய மண்ணை உயர்த்தி இருபுறமும் போடும் நீண்ட வளைப் பலகைகளும் உள்ளன.

ஒரு அடி அகலம் மற்றும் ஆழத்தில் வாய்க்காலை அமைக்கலாம். சொட்டுநீர்ப் பாசனக் குழாய்களைப் பதிக்கும் குழிகளைத் தோண்டலாம். இதை, 45 குதிரைத் திறனுள்ள டிராக்டரால் இயக்கினால் ஒரு மணிக்கு ரூ.200 செலவாகும். இதை ஆட்கள் தோண்டும் வாய்க்காலுடன் ஒப்பிட்டால், 95 மற்றும் 53% நேரம் மற்றும் சக்தி மிச்சமாகும். ஒரு மணி நேரத்தில் 1,700 மீட்டர் நீள வாய்க்காலை அமைக்கலாம்.

இரட்டை வரிசையில் உரமிடும் கருவி

இதன் மூலம் ஒரே நேரத்தில் இரண்டு வரிசைகளில் துல்லியமாக அங்கக, அனங்கக உரங்களைத் தனித்தனியாக இடலாம். பயிர் வரிசைக்கு ஏற்ப, கருவியில் உரமளிக்கும் இடைவெளியை மாற்றலாம். ஒருநாளில் ஒரு எக்டர் நிலத்தில் உரமிடலாம்.

உளிக் கலப்பை

இதன் மூலம் ஆழமாக உழலாம். இதை 35-45 குதிரைத் திறனுள்ள டிராக்டரால் இயக்கலாம். குறைந்த இழுவிசை மற்றும் அதிகச் செயல் திறனைக் கொண்டது. கொழு 20 டிகிரி கோணத்தில், 25 மி.மீ. அகலத்தில், 150 மி.மீ. நீளத்தில் இருக்கும். இக்கலப்பை 3 மி.மீ. தகட்டில் நீள்சதுர இரும்புக்குழல் சட்டத்தைக் கொண்டுள்ளது. இதில், சட்டம், கொழுத்தாங்கி ஆகியன இருக்கும்.

அதிக விசையால் யாரும் பாதிக்கா வகையிலான பாதுகாப்பு அமைப்பு இக்கலப்பையில் உள்ளது. கடினமான அடிமண்ணைத் தகர்த்து, நிலத்தின் நீர் உறிஞ்சும் தன்மையைக் கூட்டும். இதனால் பயிர்களின் வேர்கள் படர்ந்து வளர்ந்து நல்ல மகசூலைக் கொடுக்கும். இதன் மூலம் ஒருநாளில் 1 மீட்டர் இடைவெளியில் 40 செ.மீ. ஆழத்தில் 1.4 எக்டர் நிலத்தை உழலாம். 

பாராக் கலப்பை

இது மானாவாரி நிலத்தில் மழைநீரைச் சேமிக்க உதவும். இக்கருவியில் இரண்டு கொழுமுனைகள் இரும்புச் சட்டத்தில் உள்ளன. 12 மி.மீ. கனமுள்ள இரும்புத் தகட்டால் ஆன இக்கொழுக்கள் இறுதியில் சற்றுச் சாய்வாக இருக்கும். இதன் மூலம் ஒருநாளில் 1.5 எக்டர் நிலத்தை உழலாம். 

லேசர் ஒளிக்கற்றையால் நிலத்தைச் சமப்படுத்தும் கருவி

சிறப்பான பாசனத்துக்கு நிலம் சமமாக இருக்க வேண்டும். ஓரிடத்தில் நீர் அதிகமாக இருந்தாலும் குறைவாக இருந்தாலும் மகசூல் பாதிக்கும். சமமான நிலத்தில் 15-20% நீர் மீதமாவதுடன் மகசூலும் கூடும். இவ்வகையில், டிராக்டரில் இயங்கும் லேசர் ஒளிக்கற்றைச் சமப்படுத்தும் கருவி மூலம் ஒருநாளில் 1.5 எக்டர் நிலத்தைச் சமப்படுத்தலாம்.

இந்த அனைத்துக் கருவிகளையும் விவசாயிகள் சொந்தமாக வாங்க முடியாது. இதற்குத் தீர்வாக, தனியார் பண்ணைக் கருவிகள் வாடகை மையங்கள் இயங்கி வருகின்றன. இவை, உழுவதற்கு வாடகையாக மணிக்கு ரூ.650-750 வரை வசூலிக்கின்றன. வேளாண் பொறியியல் துறையிலும் இவற்றை வாடகைக்கு வாங்கிப் பயன்படுத்தலாம். 


PB_Kamaraj

முனைவர் ப.காமராஜ்,

உதவிப் பேராசிரியர், வேளாண்மைக் கல்லூரி, 

குடுமியான்மலை, புதுக்கோட்டை மாவட்டம்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks