கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2018
பூச்சியினத்தைச் சார்ந்த கொசுக்களைப் போன்றே, பல்வேறு பூச்சிகள் மக்களிடம் நோய்களைப் பரப்புகின்றன. இந்த வகையில், பழங்காலந்தொட்டே மனித இனத்தைத் தாக்கி அச்சுறுத்தி வந்த நோய்களில் ஒன்று பிளேக். மனிதனில் இந்த நோய்த்தொற்று இருந்ததற்கான குறிப்புகள் கி.மு.1500-600 ஆம் ஆண்டுகளிலேயே இந்திய பாகவதப் புராண இலக்கியத்தில் உள்ளன.
பிளேக்கும் எலிகளும்
இந்த பிளேக் நோயை எலிகள் பரப்புகின்றன. அந்தக் காலத்தில் வீட்டுக் கூரையிலிருந்து எலி தவறி விழுந்து இறந்து விட்டால், அந்த வீட்டை விட்டு மக்கள் வெளியேறும்படி எச்சரிக்கை செய்யப்பட்டனர். இதற்குக் காரணம், எலியின் மூலம் பரவும் பிளேக் நோயைத் தடுப்பதேயாகும்.
இந்தியாவில் பிளேக்
இந்தியாவில் 1612 ஆம் ஆண்டு ஜஹாங்கீர் ஆட்சிக் காலத்தில், முதன்முதலாக ஆக்ராவில் பிளேக் நோய் கண்டுபிடிக்கப்பட்டது. மூடநம்பிக்கை மற்றும் அறியாமை காரணமாக 19 ஆம் நூற்றாண்டு வரையில், இந்த நோயைப் பற்றிய விமர்சனங்கள் மிகுதியாக எழவில்லை. பிளேக் நோயைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால், அக்காலத்தில் இந்நோய்க்கு உள்ளானவர்கள் இறந்து போனார்கள்.
சமூக மற்றும் நாடுகள் அளவில் பிளேக்
சிறிய சமூக அளவில் ஒரு நோய் பரவுவதை எபிடெமிக் என்றும், நாடளவில் பரவுவதை பான்டமிக் என்றும் அழைக்கின்றோம். இவ்வகையில், பிளேக் நோய் பரவுவது பான்டமிக் வகையில் இடம் பிடிக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அதாவது, 1970-79 ஆம் ஆண்டுகளில், வியட்நாம், பர்மா, பிரேசில், பெரு, மடகாஸ்கர் போன்ற நாடுகளில் பிளேக் பரவியது. இந்நிலையில், இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் எடுத்து வந்தன.
இந்தியாவில் 1898-1918 ஆம் ஆண்டுகளில் 60,32,693 பேர்கள் இந்நோயால் இறந்தனர். 1994 ஆம் ஆண்டு சூரத்தில் 2167 பேர் இந்நோயால் தாக்கப்பட்டனர். அவர்களில் 92 பேர்கள் இறந்து போனார்கள்.
நோய் அறிகுறிகள்
இந்த நோயால் தாக்கப்பட்டவர்களுக்கு முதலில் காய்ச்சல், ஓய்வின்மை, நெறிக்கட்டு போன்ற லேசான அறிகுறிகள் தோன்றும். குறிப்பிட்ட நேரத்துக்குள் சிகிச்சையளிக்கா விட்டால், இரண்டாம் நிலை அறிகுறியாக, நுரையீரலில் நோய்த்தொற்று பரவி, வீரியமிக்க நிமோனிக் பிளேக் உண்டாகி, சுவாசப் பாதிப்பு, சளி போன்றவை ஏற்படும்.
நோய்க்கிருமி
எர்சினியா பெஸ்டிஸ் என்னும் பாக்டீரியச் சிற்றினம் தான் பிளேக் நோயை உண்டாக்கும் காரணியாகும். இந்த பாக்டீரியா வளர்வதற்கு 28 டிகிரி செல்சியஸ் வெப்பம் போதுமானது. இதன் முதல் விருந்தோம்பிகள் ரோடன்ட்கள் மற்றும் எலிகளாகும். மனிதன் தற்காலிக விருந்தோம்பி ஆவான்.
கடத்திகள் (தாங்கிகள்)
பிளேக்கை உண்டாக்கும் எர்சினியா பெஸ்டிஸ் பாக்டீரியாவை, சைமனோப்டிரா வரிசையைச் சார்ந்த பூச்சிகள் தான் கடத்திச் சென்று, ரோடன்ட்கள் மற்றும் எலிகளில் பரப்புகின்றன.
கிழக்காசிய நாடுகளில் எலிகளைத் தாக்கும் பூச்சிகள்
ஜெனோப்சில்லா சியோப்சிஸ் உலகளவில் பரவியுள்ள பூச்சிகள். இந்தப் பூச்சிகள் ஒரு மி.மீ. அளவில் பக்கவாட்டில் அழுத்தப்பட்டு, கடினமான தோலுடன், இறக்கையற்று, அடர்ந்த பழுப்பு வண்ண, வாயுறுப்புகளைக் கொண்டிருக்கும். இந்தப் பூச்சிகள், எர்சினியா பெஸ்டிஸ் பாக்டீரியாவை எடுத்து வந்து எலிகளுக்குள் செலுத்துகின்றன. இந்தப் பூச்சிகள், எலிகள் அல்லது ரோடன்ட்கள் மீதுள்ள துளைகளில் முட்டைகளை இடுகின்றன. இந்த முட்டைகள் பொரிந்து வளர்ந்து முதிர்ந்து பூச்சிகளாகின்றன. பிறகு, இந்தப் பூச்சிகளில் 5-31 நாட்கள் வரையில் பாக்டீரியாக்கள் பெருகி, ரோடன்ட்களில் செலுத்தப்படுகின்றன. இந்நிலை அடைகாத்தல் எனப்படுகிறது.
பாதிப்பு
முதிர்ந்த பூச்சிகள் தான் மனிதனிலும், ரோடன்ட்களிலும் இருந்து இரத்தத்தை உணவாகப் பெற்று நோயைப் பரப்புகின்றன.
நோய்க்கிருமி கடத்தப்படும் முறை
பூச்சிகள் நேரடியாகச் சிரைகளில் இருந்து இரத்தத்தை உறிஞ்சி எடுக்கின்றன. இதனால், விருந்தோம்பியின் இரத்தத்தில் நேரடியாக எர்சினியா பெஸ்டிஸ் பாக்டீரியா செலுத்தப்படுகிறது. அடுத்து, விருந்தோம்பியின் இரத்தத்தை உறிஞ்சி எடுத்துக் கொண்டு, மற்றொரு விருந்தோம்பிக்குக் கிருமியைப் பரப்புகின்றன.
பிளேக்கைக் கட்டுப்படுத்தும் முறை
ரோடன்ட்களைக் கட்டுப்படுத்தி, எர்சினியா பெஸ்டிஸ் பாக்டீரியாக்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பிளேக் நோயைக் கட்டுப்படுத்தலாம்.
பிளேக் நோய்க்கான சிகிச்சை
ஸ்டெப்டோமைசின், டெட்ராசைக்ளின், குளோராம்பினிகால், சல்ஃபோனமைட் போன்ற மருந்துகளை, மருத்துவரின் பரிந்துரைப்படி உடண்டியாகச் செலுத்த வேண்டும். ஸ்டெப்டோமைசின் நன்கு பயனளிக்கக் கூடியது. அதே நேரத்தில் மிகுதியாகச் செலுத்தி விட்டால், இந்த மருந்து விஷமாகவும் மாறிவிடும். சல்படியாஜின் மருந்தை ஒரு நாளைக்கு 12 ஜி வீதம் 4-7 நாட்களுக்கு எடுத்துக் கொண்டால் பிளேக் நோய் படிப்படியாகக் குறையும்.
முனைவர் ம.சி.நளின சுந்தரி,
உதவிப் பேராசிரியர், ம.த.கௌரி, முனைவர் பட்ட ஆய்வு மாணவி, விலங்கியல் துறை, இராணிமேரி கல்லூரி, சென்னை-04.
சந்தேகமா? கேளுங்கள்!