பரமக்குடி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020

ரமக்குடி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் பல நிலைகளைக் கடந்து இன்றைய நிலையை அடைந்துள்ளது. முதலில் தமிழ்நாடு அரசின் வேளாண்மைத் துறையின் கீழ் இயங்கும் ஆராய்ச்சி நிலையமாக 1952 இல் தொடங்கப்பட்டது. 1952-1958 வரையில் நெல் ஆராய்ச்சிக்கான துணை நிலையமாகவும், 1958-1978 வரையில் அரசு விதைப் பண்ணையாகவும், 1978-1981 வரையில் பல பயிர்கள் ஆய்வுக்கான துணை நிலையமாகவும் இயங்கி வந்தது.

இந்நிலையில், 1981 ஆம் ஆண்டிலிருந்து, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் நிர்வாகத்தில், வேளாண்மை ஆராய்ச்சி நிலையமாகச் செயல்பட்டு வருகிறது.

இருப்பிடம்

மதுரை இராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் வைகை நதியின் தெற்கே, கடல் மட்டத்தில் இருந்து 39.83 மீட்டர் உயரத்தில், 9.36 எக்டர் பரப்பில் இந்நிலையம் அமைந்துள்ளது. இங்கே பெய்யும் வடகிழக்குப் பருவமழை, சராசரியாக 473 மி.மீ. ஆகும். ஆண்டு சராசரி மழை 840 மி.மீ. ஆகும்.

சாகுபடிக் காலம்

இது வண்டல் கலந்த களிமண் பூமியாகும். இதன் கார அமில நிலை 8.0 ஆக உள்ளது. இங்கே வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் சாகுபடி நடந்து வருகிறது.

நோக்கங்கள்

இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களின், மானாவாரி மற்றும் நேரடி விதைப்புப் பகுதிகளில், குறுகிய, மிகக் குறுகிய காலத்தில் விளையும் உயர் விளைச்சல் நெல் இரகங்களைத் தெரிவு செய்தல். மானாவாரியில் உயர் விளைச்சலைத் தரவல்ல குண்டு மிளகாய் இரகங்களைத் தெரிவு செய்தல். மானாவாரி நெல், மிளகாய் மற்றும் காய்கறிப் பயிர்களுக்கு உகந்த, உழவியல் தொழில் நுட்பங்களைக் கண்டறிதல்.

இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள தரிசு நிலங்களில் விளையும் மரங்கள் மற்றும் பழமரங்களை ஆய்வின் மூலம் தெரிவு செய்தல். மானாவாரி நெற்பயிருக்கு மாற்றாக, நல்ல வருவாயைத் தரவல்ல மாற்றுப் பயிர்களைக் கண்டறிதல்.

சாதனைகள்

பரமக்குடி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் உழவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு, நெல் மற்றும் மிளகாயில் புதிய இரகங்களைக் கண்டறிந்து வெளியிட்டுள்ளது.

பரமக்குடி நெல் 1: கோ.25, ஆடுதுறை 31 ஆகிய நெல் இரகங்களை மூலமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த இரகம், 1985 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. வறட்சியைத் தாங்கி வளர்வதும், சாயாமல் இருப்பதும் இதன் சிறப்புகளாகும். 120-125 நாட்களில் விளையும். எக்டருக்கு 2,650 கிலோ மகசூல் கிடைக்கும். இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் நேரடியாக விதைப்பதற்கு ஏற்றது.

பரமக்குடி நெல் 2: ஐ.ஆர். 3564-149-3, அம்பாசமுத்திரம் 4 ஆகிய இரகங்களை மூலமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த இரகம், 1994 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. வறட்சியைத் தாங்கி வளர்வது, மழைநீர்த் தேங்கும் பகுதியிலும் வளர்வது, சாயாமல் இருப்பது, 110-115 நாட்களில் விளைவது இதன் சிறப்புகளாகும். மானாவாரி மற்றும் நேரடி விதைப்புக்கு ஏற்றது. மானாவாரியில் எக்டருக்கு 3,200 கிலோ மகசூலைத் தரவல்லது.

பரமக்குடி நெல் ஆர் 3: யு.பி.எல்.ஆர்.ஐ.7, கோ.43 ஆகிய இரகங்களை மூலமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த இரகம், 2003 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. அரிசி நீளமாக, திடமாக, வெள்ளையாக இருக்கும். வறட்சியைத் தாங்கி, குறைந்த வயதில் விளைவது, சாயாமல் இருப்பது, தானியம் சிதறாமல் இருப்பது இதன் சிறப்புகளாகும்.

பரமக்குடி நெல் அண்ணா 4: பந்த் தான் 10, ஓ.ஐ.இ.டி.9911 ஆகிய இரகங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த இரகம், 2009 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. வறட்சியைத் தாங்கி, நடுத்தர உயரத்தில் வளர்வது, சாயாமல் இருப்பது, 100-105 நாட்களில் விளைவது, பரமக்குடி 3 இரகத்தை விட 14.7% கூடுதல் மகசூலைத் தருவது இதன் சிறப்புகளாகும்.

இராமநாதபுரம் சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கு ஏற்றது. இதை செப்டம்பர் அக்டோபரில் விதைக்கலாம். 62.1% அரிசிக் கட்டுமானம் உள்ளது. அரிசி நீண்டு, சன்னமாக, உடையாத தன்மையில் வெள்ளையாக இருக்கும். எக்டருக்கு 3,700 கிலோ மகசூலைத் தரும்.

பரமக்குடி 1 மிளகாய்: கோ.2, இராமநாதபுரம் குண்டு மிளகாய் ஆகிய இரகங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த இரகம், 1994 இல் வெளியிடப்பட்டது. மானாவாரி சாகுபடிக்கு ஏற்றது. வற்றல், கூம்பு வடிவத்தில் கருஞ்சிவப்பாக இருக்கும். காரத்தன்மை 0.36% இருக்கும். உள்ளூர் இரகத்தைவிட 53% கூடுதல் மகசூலைத் தரும். எக்டருக்கு 2,400 கிலோ வற்றல் கிடைக்கும்.

சிறப்புக் கட்டமைப்பு

மழைத்தடுப்புக் கூடம்: இது, கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் உயிரியல் தொழில் நுட்ப ஆராய்ச்சி நிகழ்வுகளுக்கான ஒத்துழைப்பு மற்றும் மேம்பாடு என்னும் ஆய்வுத் திட்டத்தின் கீழ் 7.30 இலட்சம் ரூபாய் செலவில், 2009 இல் அமைக்கப்பட்டது. நன்செய் பண்ணை நில நெற்பயிரின் வளர்ச்சிப் பருவத்தில், செயற்கை வறட்சியை உருவாக்கி, பயிர் வளர்ப்புகளின் வறட்சியைத் தாங்கும் திறனை அறிவதே இதன் நோக்கமாகும்.

கூடத்தின் சிறப்புகள்: இந்தக் கூடம் 72×38 அடி நீள, அகலத்தில் 2,736 சதுரடிப் பரப்பில் உள்ளது. மின்சார மோட்டார் மூலம் நகரும். அதற்கு ஏற்ப, வயலின் மறுபுறம் 2,736 சதுரடி இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

பயிர் நிர்வாகம்

ஆண்டின் 39 ஆம் வாரம், அதாவது, செப்டம்பர் மாதத்தின் கடைசி வாரம், இராமநாதபுரம் மாவட்டத்தில் நேரடி நெல் விதைப்புக்கு ஏற்றது. எக்டருக்கு 12.5 டன் தொழுவுரம் மற்றும் 50:25:25 கிலோ தழை மணி, சாம்பல் சத்துகளை இட வேண்டும். இந்த உர நிர்வாக முறையைப் பின்பற்றினால் 19% மகசூல் கூடுதலாகக் கிடைக்கும்.

மானாவாரி சாகுபடியில் எக்டருக்கு 750 கிலோ ஊட்டமேற்றிய தொழுவுரம், 2 கிலோ பாஸ்போபாக்டீரியாவை இட்டால் நெல் மகசூல் அதிகமாகும். நேரடி நெல் விதைப்பில், தொழுவுரத்தை இடுவதற்குப் பதிலாக, எக்டருக்கு 12.5 டன் மட்கிய தென்னைநார்க் கழிவை அடியுரமாக இடலாம்.

விரிவாக்கப் பணிகள்

வேளாண்மைத் துறையுடன் இணைந்து, விரிவாக்கப் பணியாளர்கள் மற்றும் விவசாயிகளுக்குப் பயிற்சியளித்தல். வயல் விழா மற்றும் உழவர் தின விழாவை நடத்தி, விவசாயிகளின் கருத்துகளைக் கேட்டறிதல். விசாயிகளின் நிலங்களில் செயல் விளக்கத் திடல்கள் மற்றும் முன்னிலை விளக்கத் திடல்களை அமைத்து, புதிய நெல் இரகம் மற்றும் உத்திகளை விவசாயிகளிடம் கொண்டு சேர்த்தல்.

திட்டங்கள்

தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டம் (2018-20): விவசாய மறு சீரமைப்பு: இராமநாதபுரம் மாவட்ட சாகுபடிப் பரப்பில் 70% க்கும் அதிகமாக மானாவாரி விவசாயமே நடைபெறுகிறது. வடகிழக்குப் பருவமழை தான் நீராதாரமாக உள்ளது. தற்போது பருவமழை சில நாட்கள் மட்டுமே பெய்வதால், பயிரின் கடைசிக் காலம் வறட்சிக்கு உள்ளாகி விடுகிறது. இதனால், குறைவான மகசூலே கிடைக்கிறது.

எனவே, இம்மாவட்ட விவசாயிகள், அரசின் அனுமதி மற்றும் உதவியுடன், ஏரி வண்டலை எடுத்து வந்து நிலத்தில் இடுவது, சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது, பண்ணைக் குட்டைகளை வெட்டுவது போன்ற வேலைகளைச் செய்து வருகின்றனர். இத்தகைய விவசாயிகளின் சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக உத்திகள் மூலம் மண்வளத்தை மேம்படுத்தல், மாற்றுப்பயிர் சாகுபடியை ஊக்கப்படுத்தல், பண்ணைக்குட்டை நீரை சாகுபடிக்குப் பயன்படுத்தல், கோடையில் கால்நடைகளின் தீவனப் பற்றாக்குறையை நீக்கல் போன்றவை இத்திட்டத்தின் முக்கியப் பணிகளாகும்.

இவ்வகையில், வட்டத்துக்கு நான்கு வீதம் பத்து வட்டங்களில் நாற்பது மாதிரி செயல் விளக்கத் திடல்களை அமைப்பதற்கு இடுபொருள்கள் வழங்கப்பட்டன. பரமக்குடி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில், மானாவாரி உத்திகள் அனைத்தும் அடங்கிய மாதிரி செயல் விளக்கத்திடலை அமைத்து, 5000 விவசாயிகளுக்குப் பயிற்சியளித்து அவர்களின் திறன் மேம்படுத்தப்பட்டது.

நாவல், கொடுக்காப்புளி சாகுபடி நுட்பச் செயல் விளக்கம் (2019-21): மானாவாரிப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு ஊட்டப் பாதுகாப்பைத் தரும் வகையில், நாவல், கொடுக்காய்ப்புளி, விளாம்பழ மரங்கள் உள்ளன. இவற்றின் சாகுபடிப் பரப்பையும், உற்பத்தித் திறனையும் கூட்டும் நோக்கில், தரமான கன்றுகளும், நவீன உத்திகளும் வழங்கப்பட்டன.

இதற்கான செயல்விளக்கத் திடல்கள் விவசாயிகளின் நிலங்களிலேயே அமைக்கப்பட்டன. தேவையான பயிற்சிகள், பரமக்குடி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் வழங்கப்பட்டன.

நடுவண் அரசின் உயிரித் தொழில் நுட்பத் துறையின் திட்டம் (2019-2021): உயிரித் தொழில் நுட்ப உழவர் மையம் அமைத்தல்: கால்நடைத் தீவனப் பற்றாக்குறையைப் போக்கும் பொருட்டு, குறைந்த செலவில் இரசாயன உணவு மூலம் நீரில் வளரும் தீவனப்பயிர்க் கூடங்களை விவசாயிகளின் நிலங்களில் அமைத்து, தேவையான பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. பெரியளவில் அமைந்துள்ள தீவனப்பயிர்க் கூடங்களுக்கு விவசாயிகளை அழைத்துச் சென்று, தொழில் நுட்பம் சார்ந்த அவர்களின் ஐயங்கள் தீர்த்து வைக்கப்பட்டன.


முனைவர் செ.முத்துராமு,

தி.இராகவன், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், பரமக்குடி-623707.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!