My page - topic 1, topic 2, topic 3

பனையேறிக் கெண்டையை வளர்ப்பது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019

னையேறிக் கெண்டை மீன் அனபான்டிடே குடும்பத்தைச் சார்ந்தது. இது, நமது மீ20212னினமாகும். இம்மீன், ஆசியாவில் இந்தியா, சீனா முதல் வால்லஸ் வரை காணப்படுகிறது. இந்தியாவில் அனபாஸ் டெஸ்டுடீனஸ், அனபாஸ் ஒலிகோல்ப்பிஸ் ஆகிய இரண்டு இனங்கள் உள்ளன. அனபாஸ் டெஸ்டுடீனஸ் மீன், கோய் அல்லது கவாய் எனப்படுகிறது. மேற்கு வங்கம், அசாம், திரிபுரா, மணிப்பூர், பீகார் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

பனையேறிக் கெண்டைக்குக் காற்றைச் சுவாசிக்கும்  சுவாச உறுப்பு உள்ளதால் காற்றைச் சுவாசித்து நீண்ட நேரம் உயிர் வாழும். அதனால் தான் இம்மீன் உயிருடன் கிடைக்கிறது. இம்மீன், குளம், ஏரி, கால்வாய், கழிமுகங்களில் காணப்படுகிறது. ஆனால், பெரிய மீன்கள், ஆறுகள், பெருகியோடும் நீர்நிலைகள், தேக்கி வைக்கப்பட்டுள்ள நீர்நிலைகளில், குறிப்பாக அடர்ந்த தாவரங்கள் உள்ள பகுதிகளில் காணப்படும். இது 22-23 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையைத் தாங்கி வாழும். மேலும், நீரில் நிறைந்திருக்கும் மாசையும் தாங்கி வாழும். இவ்வகை மீன்கள் நன்னீர் நிலைகளுக்கிடையில் மட்டுமே  இடம் பெயரும்.

இந்த மீனினம் பெரியளவில் அழிக்கப்பட்டதால், பன்னாட்டு இயற்கை மற்றும் இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தால், அச்சுறுத்தலுக்கு உள்ளான இனங்களின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. அதனால், போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. இதற்கான செயற்கை  இனப்பெருக்க முறைகள் பல நாடுகளில் சிறப்பாகக் கையாளப்படுகின்றன.

சினை மீன் மேலாண்மை

முதன்முதலாக இனப்பெருக்கத்துக்குத் தயாராகும் போது 8-10 செ.மீ. நீளமும், 15-20 கிராம் எடையும் இருக்கும். இதன் இனப்பெருக்கக் காலம் மார்ச் முதல் ஆகஸ்ட் வரையாகும். ஆனால், உச்சக்கட்ட இனப்பெருக்கம் மே ஜுனில் நடைபெறும். இக்காலத்தில் ஆண் மீனின் மார்புத் துடுப்பும் இடுப்புத் துடுப்பும் சிவப்பாகவும், வால் பகுதியில் வைர வடிவக் கரும்புள்ளியும் காணப்படும். பெண் மீனின் மார்புத் துடுப்பும் இடுப்புத் துடுப்பும் லேசான சிவப்பிலும், வால் பகுதிக் கரும்புள்ளி நீள்வட்டமாகப் பரவியும் இருக்கும்.

இனப்பெருக்கக் காலத்துக்கு 2-3 மாதங்களுக்கு முன், இந்த மீன்கள் வளர்ப்புக் குளத்தில் இருந்து சிமெண்ட் தொட்டிகளில் விடப்படும். முட்டை மற்றும் மீன் குஞ்சுகளின் தரம் சினை மீன்களின் தரத்தைப் பொறுத்து அமையும். சினை மீன்களின் பராமரிப்பு நிலை, உணவு, ஆண் பெண் விகிதம், சூழ்நிலை மாற்றம் மற்றும் அழுத்தம் ஆகியவற்றைப் பொறுத்து முட்டைகளின் தரமும் எண்ணிக்கையும் அமையும். நீரைத் தரச் சோதனை செய்வது அவசியம். 30-35% புரதம் உள்ள உணவுகளைச் சினை மீன்களின் உடல் எடையில் 3-5% தினமும் 2 முறை தர வேண்டும். தரமான குஞ்சுகளை உற்பத்தி செய்ய இயற்கைச் சூழ்நிலைகள் மற்றும் வேறொரு விவசாயியிடம் இருந்து பெறப்பட்ட சினை மீன்களைப் பயன்படுத்த வேண்டும். ஒளிக்காலம் மீனின் முட்டையிடும் காலத்தைப் பாதிக்கும்.

செயற்கை இனப்பெருக்கம்  

இனப்பெருக்கத்துக்கு 2:1 என்னும் பாலின விகிதம் பரிந்துரைக்கப் படுகிறது. பிட்டியூட்டரி அல்லது ஒவாப்ரிம் மீனின் உடல் எடையில் 1 மை.கி./கி தசை வழியாக ஊசியிடப்படுகிறது. ஊசியிடப்பட்ட 6 மணி நேரத்துக்குப் பின், ஆண் மீன் பெண் மீனை தீண்டத் தொடங்கும். ஒரு பெண் மீன் தனது வாழ்நாளில் 4,000 முதல் 68,000 முட்டைகள் வரையில் இடும். மற்ற மீன்களைப் போல் முட்டையிடக் கூடு கட்டுவதில்லை. இதன் இனவிருத்தி ஆற்றல் 1 கிராம் உடல் எடைக்கு 340-400 முட்டைகள் ஆகும்.

கருவுற்ற முட்டைகள் ஒளிப்புகும் தன்மையுடனும், கருவுறா முட்டைகள் ஒளிப்புகாத் தன்மையுடனும் இருக்கும். கருவுற்ற முட்டையின் விட்டம் 0.80-0.90 மி.மீ. இருக்கும். கடினத்தன்மை அதிகமாக உள்ள நீரில் முட்டைகள் மிதக்கும். கருவுற்ற முட்டைகள் FRP தொட்டியில் பொரிக்க வைக்கப்படும். ஊசியிடப்பட்ட 18-22 மணி நேரத்தில் முட்டைகள் பொரிக்கும். நீரின் வெப்ப நிலையைப் பொறுத்து முட்டைகள் பொரியும் காலம் மாறுபடும்.

மீன் குஞ்சுகளை வளர்த்தல்

பொரிந்த மீன் குஞ்சுகள் 1.6-2.0 மி.மீ. இருக்கும். 27-30 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையில் 96 மணி நேரத்தில் மஞ்சள் கரு முழுமையாக உறிஞ்சப்படும். 28 மணி நேரம் கழித்து இளம் குஞ்சுகளின் வாய் திறக்கும். 32 மணி நேரத்துக்குப் பின் உணவுக்குழாய் வளர்ந்து, ரோட்டிஃபர்களை உண்ணத் தொடங்கும். பத்து நாள் குஞ்சுகள் ரோட்டிஃபர் மற்றும் மொய்னாக்களை உண்ணும். 11 நாட்களுக்கு மேலான குஞ்சுகள் மொய்னாக்களை மட்டும் உண்ணும். 15 நாட்களுக்கு மேலான குஞ்சுகள் மொய்னா மற்றும் பண்ணைத் தீவனங்களை உண்ணும். 16 நாட்களுக்கு மேலான குஞ்சுகள் பண்ணைத் தீவனங்களை மட்டுமே உண்ணும்.

மீன் குஞ்சுகள் 500 லிட்டர் அளவுள்ள தொட்டிகளில் 30-50 செ.மீ. வரையுள்ள நீரில் வளர்க்கப்படும். நீரின் மேற்பரப்பில் 30-40% ஐக்கோர்னியா மற்றும் பிஸ்ட்டியாவை வைத்தால், அதிகப் பிழைப்புத் திறனையும் வளர்ச்சியையும் ஏற்படுத்தலாம். பொதுவாக 1000-1500/மீ2 இருப்பு வைப்பர். வளர்ப்புக் காலத்தில் இம்மீன் குஞ்சுகளுக்கு விலங்கு மிதவை உயிரிகளுடன், 30-35% புரதமுள்ள கடலைப் புண்ணாக்கு மற்றும் அரிசித் தவிடு கலவை உணவாக இடப்படுகிறது.

குளத்தில் வளர்த்தல்

பனையேறிக் கெண்டைகளை வளர்க்க 0.05-0.20 எக்டர் குளம் போதுமானது. குளத்தைத் தயாரித்தல், உரமிடுதல் ஆகியவை கெண்டை வளர்ப்புக்குப் போன்றே செய்யப்படும். மழைக்காலத்தில் பனையேறிக் கெண்டைகள் ஒரு குளத்திலிருந்து மற்றொரு குளத்துக்குச் செல்லும். அதனால், குளக்கரையை 75 டிகிரி கோணத்தில் அமைக்க வேண்டும். இருப்பு விகிதம் 5-6 மீன்கள்/மீ2 ஆகும். ஆனால், 3 மீன்கள்/மீ2 என்று இருப்பு வைத்தால் நல்ல வளர்ச்சி இருக்கும். பறவைகளிடம் இருந்து பாதுகாக்க, பண்ணையைச் சுற்றிப் பாதுகாப்பு வலையை அமைக்க வேண்டும். மீனின் எடையில் 3-5% துணையுணவு அளித்தால் நல்ல வளர்ச்சி இருக்கும். ஓராண்டில் 50-60 கிராம் வளரும். குளத்து நீர் முழுவதையும் வடித்துவிட்டுக் கையால் மீன்கள் பிடிக்கப்படும்.

தொட்டிகளில் வளர்த்தல்

குளத்திலிருந்து மீன்கள் தப்புவதாலும், நிர்வகிக்கக் கடினமாக உள்ளதாலும், சிமெண்ட் தொட்டிகளில் வளர்க்கப்படுகின்றன. 5 கிராம் எடையுள்ள மீன் குஞ்சுகள் 65-70/மீ2 என்னுமளவில் இருப்பு வைக்கப்படும். தொட்டிகளில் 15-20 செ.மீ.க்கு மண்ணை நிரப்பினால் நல்ல வளர்ச்சி இருக்கும். தொட்டியின் மேற்பரப்பில் 30-40% ஐக்கோர்னியா மற்றும் பிஸ்ட்டியாவை வைத்தால், அதிகப் பிழைப்புத்திறன் மற்றும் வளர்ச்சியை ஏற்படுத்தலாம். மீனின் உடல் எடையில் 3-5% துணையுணவு ஒரு நாளைக்கு இருமுறை வழங்கப்படும்.

கூண்டுகளில் வளர்த்தல்

0.6-0.8 கிராம் மற்றும் 2 செ.மீ. அளவுள்ள 550 பனையேறிக் கெண்டைகள்  3மீ.×2மீ.×1.5மீ. கூண்டில் இருப்பு வைக்கப்படும். இவற்றுக்கு நனைத்த நன்னீர் உலர் மீன்கள் உணவாகக் கொடுக்கப்படும். ஒரு மீன் 4 மாதங்களில் சராசரியாக 62 கிராம் வரை வளரும். பனையேறிக் கெண்டைகளில் தாய் என்னும் இனம் கூண்டுகளில் ஓரின வளர்ப்பு மற்றும் பல்லின வளர்ப்பில் நல்ல முடிவுகளைத் தந்துள்ளது. ஓரின வளர்ப்பில் 5.8 கிராம், 12 செ.மீ. நீளமுள்ள 60 மீன்கள்/மீ2 என்னும் கணக்கில் இருப்பு வைத்தால் 67% பிழைப்புத்திறன் இருக்கும். ஆனால், 80-100 மீன்கள்/மீ2 என்னும் கணக்கில் இருப்பு வைத்தால், பிழைப்புத்திறனும் வளர்ச்சியும் குறைவாகவே இருக்கும்.

அயல் நாட்டு மீன்களை வளர்ப்பதற்குப் பதிலாக, நம் நாட்டு மீன்களை வளர்க்க வேண்டும். இதன் மூலம் நமது மீனினங்களைப் பாதுகாப்பதுடன், நமது வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தலாம்.


முனைவர் சா.ஆனந்த்,

ச.இராஜேஸ்வரி, அ.சுரேஷ், வளங்குன்றா மீன்வளர்ப்பு நிலையம், பவானிசாகர்.

சு.பாரதி, டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக்  கல்லூரி, பொன்னேரி.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks