கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020
“அண்ணே பூச்சி விரட்டியைப் பத்திச் சொல்லுண்ணே…’’
“தழைச்சத்தை அதிகமாகக் கொடுத்தால், பயிர்கள் பச்சைப் பசேலென்று வளரும். இது பூச்சிகளைக் கவர்ந்திழுக்கும். இந்த இலைகளைத் தின்ன வரும் பூச்சிகள், பயிர்கள் முழுவதையும் அழித்து விடும். பூச்சிகளில் சைவப் பூச்சிகள், அதாவது, தழையுண்ணிப் பூச்சிகள், அசைவப் பூச்சிகள், அதாவது, ஊனுண்ணிப் பூச்சிகள் என இரண்டு வகைகள் உள்ளன. இவற்றில், தழையுண்ணிப் பூச்சிகள் தான் பயிர்களை அழிக்கும். இந்தப் பூச்சிகளை ஊனுண்ணிப் பூச்சிகள் தின்று அழிக்கும்.
ஆனால், இரசாயனப் பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிப்பதால், சைவப் பூச்சிகளை உண்ணும் அசைவப் பூச்சிகள் தான் அதிகளவில் கொல்லப்படுகின்றன. இதனால், இயற்கைச் சமன்பாடு சீர்குலைந்து, சைவப் பூச்சிகள் மேலும் பெருகுகின்றன. எனவே, பயிர்கள் மிகுதியாகச் சேதமடைகின்றன.
இயற்கை வேளாண்மையில் எந்தப் பூச்சியும் கொல்லப்படுவதில்லை. பூச்சிகளிடம் இருந்து பயிர்களைக் காப்பது மட்டுமே நோக்கம். எனவே, பயிர்களை அண்ட விடாமல் பூச்சிகளை விரட்டும் வகையிலான பொருள்கள் நிறைய உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி, முறையாகக் கலவையைத் தயாரித்துத் தெளித்தால், பயிர்களைத் தாக்காமல் பூச்சிகள் ஓடிவிடும். இவற்றையே பூச்சி விரட்டி என்கிறோம்.’’
“பூச்சி விரட்டியைத் தயாரிக்க உதவும் பொருள்களைப் பத்திச் சொல்லுண்ணே…’’
“ஆடாதொடை, நொச்சி போன்ற ஆடு, மாடுகள் உண்ணாத தழைகள், எருக்கு, ஊமத்தை போன்ற, ஒடித்தால் பால் வரும் தழைகள், கசப்பாக இருக்கும் வேம்பு, சோத்துக் கற்றாழை போன்றவை, உவர்ப்பாக இருக்கும் காட்டாமணக்கு போன்றவை, கசப்பும் உவர்ப்பும் உள்ள எட்டிக்கொட்டை, வேப்பங்கொட்டை போன்றவை. இவற்றை ஊற வைத்து அல்லது காய்ச்சி எடுக்கப்படும் சாறுகள் மிகச் சிறந்த பூச்சி விரட்டிகளாகப் பயன்படுகின்றன.’’
“சரிண்ணே… இதுல எந்தெந்தப் பொருள்களை எடுத்துக்கிறது?…’’
“சோற்றுக் கற்றாழை அல்லது பிரண்டை 2 கிலோ, எருக்கு அல்லது ஊமத்தை 2 கிலோ, நொச்சி அல்லது பீச்சங்கு அல்லது சீதா தழை 2 கிலோ, வேம்பு அல்லது புங்கன் 2 கிலோ, காட்டாமணக்கு அல்லது உன்னித்தழை 2 கிலோ.’’
“சரிண்ணே… தயாரிக்கிறதைப் பத்திச் சொல்லுண்ணே…’’
“இதில் இரண்டு முறைகள் உள்ளன. ஊறல் முறையில், இந்தத் தழைகள், 3 லிட்டர் சாணக் கரைசல், 12 லிட்டர் கோமியம் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து 7-15 நாட்களுக்கு ஊற வைக்க வேண்டும். இப்படிச் செய்யும் போது, தழைகள் கூழாகக் கரைந்து, கரைசல் தயாராகி விடும்.
வேக வைத்தல் முறையில், இந்தத் தழைகளை இடித்துக் கொள்ள வேண்டும். பிறகு சுமார் 15 லிட்டர் நீரைச் சேர்த்து 2-3 மணி நேரம் சீரான நெருப்பில் வேக வைக்க வேண்டும். பிறகு, சாற்றை வடிக்க வேண்டும். இதில், ஒரு படி மஞ்சள் பொடியைச் சேர்த்து 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.’’
“எப்பிடிண்ணே பயன்படுத்துறது?…’’
“பத்து லிட்டர் நீருக்கு ஒரு லிட்டர் கரைசல் என்னுமளவில் கலந்து, கைத்தெளிப்பான் அல்லது விசைத் தெளிப்பான் மூலம் தெளிக்கலாம்.’’
“இதோட நன்மைகளைச் சொல்லுண்ணே…’’
“பயிர்களைப் பூச்சிகள் அண்டாது. சுற்றுச்சூழல் மாசடையாது. செலவில்லாமல் தயாரிக்கப்படும் இடுபொருள்.’’
பசுமை
சந்தேகமா? கேளுங்கள்!