“அண்ணே… காய்ப்புழு விரட்டித் தயாரிப்பைப் பத்திச் சொல்லுண்ணே…’’
“தழைகளைக் கடித்துண்ணும் புழுக்களை, பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதைப் போல, காய்களைக் கடித்துச் சேதத்தை ஏற்படுத்தும் காய்ப் புழுக்களையும், இலைச்சுருட்டுப் புழுக்களையும் கட்டுப்படுத்தினால் தான் எதிர்பார்க்கும் விளைச்சலை எடுக்க முடியும். இதற்குக் காய்ப்புழு விரட்டிப் பயன்படுகிறது…’’
“சரிண்ணே… இதைத் தயாரிக்க என்னென்ன பொருள்கள் வேணும்ண்ணே?…’’
“சோற்றுக் கற்றாழை 3-5 கிலோ, சீதாச்செடித் தழை அல்லது காகிதப்பூ தழை அல்லது உன்னித்தழை அல்லது பப்பாளித் தழை 3-5 கிலோ… அடுத்ததாக, வேப்ப விதை அல்லது புங்கன் விதை அல்லது மலைவேம்பு விதை அல்லது கடுக்காய் ஒரு கிலோ… அடுத்ததாக, எட்டிக்காய் 500 கிராம் அல்லது சீதா அல்லது தங்கரளி விதை 250 கிராம், சுண்டைக்காய் 1-2 கிலோ அல்லது வில்வக்காய் 5-10 வேண்டும்…’’
“சரிண்ணே… இந்தப் பொருள்கள வச்சு எப்பிடித் தயாரிக்கிறது?…’’
“சோற்றுக் கற்றாழையுடன் அடுத்துக் கூறப்பட்டுள்ள தழைகளில் ஒன்றைச் சேர்த்து, அந்தத் தழைகள் நன்கு மூழ்கும் அளவுக்கு நீரையூற்றி வேக வைக்க வேண்டும்… நன்கு வெந்து சாறு இறங்கியதும் அதை வடித்துச் சிறிதளவு மஞ்சள் பொடியைச் சேர்க்க வேண்டும்… பிறகு, 12 மணி நேரம் ஊறவிட வேண்டும்… இத்துடன் 250-500 கிராம் சூடோமோனாஸ் புளோரன்சைக் கலக்க வேண்டும்… இந்தக் கரைசலில், அடுத்துக் கூறியுள்ள விதைகளை எடுத்து இடித்துப் பொடியாக்கிக் கலந்தால், காய்ப்புழுக்கள் மற்றும் இலைச்சுருட்டுப் புழுக்களைக் கட்டுப்படுத்தும் கரைசல் தயாராகி விடும்…’’
“சரிண்ணே… இதை எப்பிடிப் பயன்படுத்துறதுன்னு சொல்லுண்ணே…’’
“பத்து லிட்டர் நீருக்கு ஒரு லிட்டர் கரைசல் என்னுமளவில் கலந்து, கைத்தெளிப்பான் அல்லது விசைத் தெளிப்பான் மூலம் பயிர்களில் தெளிக்கலாம்…’’
“இதனால கிடைக்கும் நன்மைகளைச் சொல்லுண்ணே…’’
“காய்ப்புழுக்கள் மற்றும் இலைச்சுருட்டுப் புழுக்கள் கட்டுப்படும். மிகுந்த செலவில்லாத இடுபொருள். சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை உண்டாக்காது…’’
பசுமை
சந்தேகமா? கேளுங்கள்!