கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019
இன்றைய நாகரிக உலகில் வசதி மிக்கவர்கள் பெரும்பாலும் நாய்களை வளர்த்து வருகின்றனர். இவற்றில் 25 சத நாய்கள், உணவுக் கட்டுப்பாடும், உடற்பயிற்சியும் இல்லாததால், உடல் பருமன் நோய்க்கு உள்ளாகின்றன. வெளிநாட்டு நாய்களான லேப்ரடார், காக்கர் ரிபேவியல், டால்மேஷன் போன்றவை இவ்வகையில் அடங்கும். உடல் பருமன், மெட்டபாலிக் கோளாறால் ஏற்படுவதாகும். இதனால், இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், கால்மூட்டுகள் பாதிக்கப்படும்.
உடல் பருமனுக்கான காரணங்கள்
அதிக உணவு: நாய்களுக்கு அளிக்கப்படும் அதிக கலோரி எரிசக்தியுள்ள உணவு, கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் சேமித்து வைக்கப்படுகிறது. இப்படி மிகுந்துள்ள ஒவ்வொரு சத கலோரி எரிசக்தியும் 25 சத அளவில் எடை கூடுவதற்குக் காரணமாகி விடுகிறது.
உடற்பயிற்சி: நாம் இடும் உணவைச் சாப்பிட்டு விட்டு, தெருவில் போவோர் வருவோரைப் பார்த்துக் குறைப்பது மட்டும் நாயின் வேலையில்லை. அதற்குப் போதியளவில் உடற்பயிற்சியும் தேவை. இல்லையெனில் உடல் பருமன் ஏற்பட்டு விடும்.
மரபு: வெளிநாட்டு நாய்களான லேப்ரடார், காக்கர் ரிபேவியல், டால்மேஷன் போன்றவற்றில் பரம்பரையின் காரணமாக உடல் பருமன் ஏற்படுகிறது. ஆயினும் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி மூலம் உடல் பருமனைத் தடுக்கலாம். இராஜபாளையம், கோம்பை, சிப்பிப்பாறை போன்ற தமிழக நாய்களில் உடல் பருமன் ஏற்படுவதில்லை.
தீய பழக்கங்கள்: நிறைய நாய்கள் இருக்கும் இடங்களில், ஒரு சில நாய்கள், மற்ற நாய்களை விரட்டி விட்டு அவற்றின் உணவையும் சாப்பிடும். சில நாய்கள் தங்களின் உணவைச் சாப்பிட்டு விட்டு, மேலும் நம்மிடம் உணவை எதிர்பார்த்து நிற்கும். இந்நிலையில், நாம் இடும் அதிக உணவாலும் உடல் பருமன் ஏற்படும்.
குடும்பக் கட்டுப்பாடு: ஆண் நாய்களில் ஆண்மை நீக்கமும், பெண் நாய்களில் கருப்பை நீக்கமும் செய்து நாய்ப் பெருக்கம் தடுக்கப்படுகிறது. இப்படி அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட நாய்கள் குண்டாவதற்குக் காரணம், அதிகமாகச் சாப்பிடுவதும், உடற்பயிற்சி இல்லாமையும் ஆகும்.
ஹார்மோன் கோளாறுகள்: தைராய்டு சுரப்பியும் பியூட்டரி சுரப்பியும் சரியாக வேலை செய்யாத போது, ஹைப்போ தைராய்டிசம் ஏற்பட்டு, குச்சின் சிண்ட்ரோம் நோய் ஏற்படும். ஹைப்பர் அட்ரினோ கார்டிசிசம் ஏற்பட்டு அடிசன்ஸ் நோய் ஏற்படும். மேலும், நீரிழிவு, இதயநோய், மூட்டுவலி, இடுப்பெலும்பு விலகுதல், படேலா லக்சேசன் போன்ற நோய்களும் தாக்கும்.
உடல் பருமனின் விளைவுகள்
நாயால் நெடுநேரம் நடக்க முடியாது. உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் அதிகளவில் இரத்தத்தைக் கொடுப்பதால் இதயம் பலவீனமாகி விடும். இதனால், இரத்தழுத்தம் உண்டாகி மரணம் நிகழும். கல்லீரலில் கொழுப்பு மிகுவதால் அதன் செயல் திறன் குறைந்து விடும். உடல் வெப்பநிலை கட்டுக்குள் இல்லாமல் போவதால், நோயெதிர்ப்புச் சக்தி குறைந்து பல்வேறு நோய்கள் ஏற்படும்.
இனப்பெருக்கம் பாதிக்கப்படும். சுகப்பிரசவம் இருக்காது. அறுவைச் சிகிச்சையின் போது அதிகளவில் மயக்க மருந்தைக் கொடுப்பதால், இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் ஆகியன பாதிக்கப்படும். புண் ஆறவும் பல நாட்கள் ஆகும். கருப்பைப் புற்றுநோய் ஏற்படும்.
சிகிச்சை
உணவைக் குறிப்பிட்ட நேரத்தில் அளவுடன் வழங்க வேண்டும். உணவில் நார்ச்சத்தும், புரதமும் நிறைந்திருக்க வேண்டும். நீரையும் நிறையக் கொடுக்க வேண்டும். உடற்பயிற்சி அவசியம். இதைப் படிப்படியாகத் தொடங்க வேண்டும். வாரம் அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை நாயின் எடையை அறிய வேண்டும். ரொட்டி, வர்க்கி, ரஸ்க், ஐஸ்கிரீம் போன்ற நொறுக்குத் தீனிகளைக் கொடுக்கக் கூடாது.
மரு.ஏ.ஆர்.ஜெகத்நாராயணன்,
மேனாள் மண்டல இணை இயக்குநர்,
கால்நடைப் பராமரிப்புத்துறை, சேலம்-636008,
சந்தேகமா? கேளுங்கள்!