கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019
மருத்துவமனையே இல்லாத அக்காலம் முதல், நவீன மருத்துவ வசதிகள் கிடைக்கும் இக்காலம் வரை, மனிதப் பிணிகளைக் களைவதில் நொச்சிக்கு முக்கிய இடமுண்டு. தானாகவே வளர்ந்து கிடக்கும் நொச்சி, சிறிய மரவகைத் தாவரமாகும். வெண் நொச்சி, கருநொச்சி, நீர்நொச்சி எனப் பல இரகங்கள் இருந்தாலும், வெண்நொச்சி தான் பெரும்பாலான இடங்களில் வளர்கிறது. கருநொச்சி மருத்துவக் குணம் வாய்ந்தது. விடெக்ஸ் நெகுண்டோ என்னும் தாவரப் பெயரைக் கொண்ட நொச்சியின் இலை, பட்டை, வேர் என அனைத்திலும் மருத்துவக் குணம் உண்டு.
கொசுவை ஒழிக்கும்
கொசுக்களை ஒழிக்கத் தான், உலகின் முதல் பூச்சிக்கொல்லி மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 70 ஆண்டுகளில் எத்தனையோ ஆய்வாளர்கள், பணத்தை, நேரத்தைச் செலவழித்து, புதுப்புது மருந்துகளைக் கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் கொசுக்கள் அனைத்தையும் மீறி முன்னைவிட வீரியமாக வலம் வருகின்றன. இந்நிலையில், கொசுக்களை ஒழிக்கும் நொச்சியின் மீது மக்களின் கவனம் திரும்பியுள்ளது. நொச்சியிலைப் புகைக்குக் கொசுக்கள் வராது. கொசுக்களை விரட்ட, நொச்சிச் செடிகளை வீடுகளில் வளர்க்க வேண்டும்.
போலியோ குணமாகும்
ஒரு கைப்பிடி நொச்சியிலை, அரைக் கைப்பிடி மூக்கிரட்டை வேர், அரைக் கைப்பிடி காக்கரட்டான் வேரை ஒன்றாகப் போட்டு இடித்து, ஒரு லிட்டர் நீர் விட்டு, ஒரு சுக்கு, தலா ஒரு கரண்டி மிளகு, சீரகம் ஆகியவற்றைப் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி, காலை, மாலையில் என ஒரு வாரம் கொடுத்து வந்தால், தொடக்க நிலையிலுள்ள இளம்பிள்ளைவாதம் குணமாகும். ஆஸ்துமா, மூச்சுத் திணறலால் அவதிப்படுவோர், இரண்டு நொச்சி இலையுடன் நான்கு மிளகு, ஒரு இலவங்கம், நான்கு பூண்டுப்பல்லை வாயில் போட்டு மென்று விழுங்கினால் சரியாகும். இடுப்புவலி, மூட்டுவலி, வீக்கத்துக்கு ஒரு கரண்டி நொச்சியிலைச் சாறுடன், ஒரு கிராம் மிளகுத்தூள், சிறிது நெய் சேர்த்துக் காலை, மாலையில் உண்டு, வேலிப்பருத்தி இலையை வதக்கி ஒத்தடம் கொடுத்தால் குணமாகும்.
கழுத்து வாதம் போக்கும்
தலைக்கனம், தலையில் நீர் கோர்த்தல், சளி, காய்ச்சல் போன்றவற்றுக்கு, நொச்சியிலையில் ஆவி பிடிக்கும் பழக்கம் இன்றைக்கும் கிராமங்களில் இருக்கிறது. பானையில் நொச்சியிலை, செங்கல் துண்டுகள் அல்லது வெங்கிச்சான் கல்லைப் போட்டு மூடி நன்கு வேகவிட்டு, உடல் முழுவதும் கனமான போர்வையால் மூடி, அந்த ஆவியைப் பிடித்தால், இரண்டு நிமிடங்களில் உடலிலுள்ள துர்நீர் முழுதும் வியர்வையாக வெளியேறும். நொச்சியிலையைப் பறித்து, பருத்தித் துணியில் கட்டித் தலையணையாகப் பயன்படுத்தினால், தலைவலி, கழுத்து வீக்கம், கழுத்து வாதம், ஜன்னி, நரம்புவலி, மூக்கடைப்புக் குணமாகும். நொச்சியிலைச் சாற்றைப் பற்றுப் போட்டால், உடலிலுள்ள கட்டிகள் கரைந்து விடும். நொச்சியிலையை அரைத்து மூட்டில் வைத்துக் கட்டினால் மூட்டு வீக்கம் குறையும்.
தானியங்களைப் பாதுகாக்கும்
நொச்சி வேரை நீரிலிட்டுக் காய்ச்சி, காலையில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி குடித்து வந்தால், வயிற்றிலுள்ள புழுக்கள் வெளியேறும். வேர்ப் பட்டையைக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி, ஒரு சிட்டிகைப் பொடியைத் தேனில் குழைத்து, வாரம் இருமுறை காலையில் உண்டால், நரம்புவலி, வாதப்பிடிப்புக் குணமாகும். தானியங்களைச் சேமித்து வைக்கும் பாத்திரத்தில் நொச்சி இலையைப் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.
முனைவர் கோ.சதிஸ்,
முனைவர் இரா.மணிமேகலை, முனைவர் மு.சபாபதி, வேளாண்மை அறிவியல் நிலையம்,
திரூர்-602025, திருவள்ளுர் மாவட்டம்.
சந்தேகமா? கேளுங்கள்!