My page - topic 1, topic 2, topic 3

நெத்திலி மீன் கருவாடு தயாரிப்பு!

கட்டுரை வெளியான இதழ்: டிசம்பர் 2021

மீனைப் பதப்படுத்துவதற்கு எனப் பல நடைமுறைகள் உலகமெங்கும் உள்ளன. அவற்றில், உலர்த்துதல் அல்லது உப்பிட்டு உலர்த்துதல் முறையும் ஒன்றாகும். தமிழகத்தில், 2017-18 ஆம் ஆண்டில் 6,55,000 டன் கடல் மீன்கள் பிடிக்கப்பட்டன. இவற்றில் நெத்திலி மீன்கள் 2.1% ஆகும்.

மீனில் 60-70% ஈரப்பதம் இருப்பதால், அது இறந்ததும் கிருமிகளின் தாக்கத்துக்கு உள்ளாகித் தரம் குறைந்து விடுகிறது. இந்தச் சிக்கலைத் தவிர்க்க, மீனை மட்டும் அல்லது மீனில் உப்பைச் சேர்த்து உலர்த்தினால் அதன் ஈரப்பதம் 10-15% ஆகக் குறைந்து விடும்.

மீனைக் காய வைக்க உலர்த்திகள் உள்ளன. இதனால், செலவு குறைந்து, மீனின் தரம் உயரும். மழைக்காலத்தில் மீனை உலர்த்த, இந்த உலர்த்திகள் அவசியமாகும். சிறிய மீன்களான நெத்திலி, காரல், சாளை, கூனி இறால் போன்றவை, கருவாடாகத் தயாரிக்கப் படுகின்றன. இங்கே, நெத்திலி மீன்களைக் கருவாடாக மாற்றுவதைப் பற்றிப் பார்க்கலாம்.

மீனை மட்டும் உலர்த்துதல்

தரமான மீன்களைப் பயன்படுத்த வேண்டும். இவற்றைச் சுத்தமான கடல் நீரில் நன்றாகக் கழுவ வேண்டும். தேவையெனில் நன்னீரிலும் கழுவலாம். நெத்திலி, காரல், சாளை மீன்களைச் சுத்தமான தரையிலும், கூனி இறாலைச் சிமென்ட் தரையிலும் உலர்த்தலாம்.

உலர வைக்கும் இடம் திறந்த வெளியாக, காற்றோட்டம் மிக்கதாக, சுத்தமாக இருக்க வேண்டும். ஒரு ச.மீ. பரப்பில் மூன்று கிலோ மீன்களை உலர்த்தலாம்.

இரண்டு அல்லது மூன்று நாட்கள் உலர வைக்கலாம். அதாவது, மீனின் ஈரப்பதம் 10-15% ஆகக் குறையும் வரையில் உலர்த்த வேண்டும். பிறகு இவற்றை நிழலில் 30-60 நிமிடம் உலர்த்த வேண்டும். பிறகு, தேவைக்கு ஏற்ப நெகிழிப் பைகளில் நிரப்பி, சுத்தமான, காற்றோட்டமான அறையில் சேமிக்க வேண்டும்.

உப்பிட்டு உலர்த்துதல்

மீன்களை நன்னீரில் கழுவி நீரை வடிய வைக்க வேண்டும். பிறகு, மீனின் அடிப்பகுதியை வெட்டி இரண்டாகப் பிளந்து, செதில், செவிள் மற்றும் குடலை நீக்கி விட்டு, நன்னீரில் கழுவ வேண்டும். பிறகு, சுத்தமான கத்தியால், சதையைத் தேவைக்கு ஏற்பக் கீறி விட வேண்டும்.

அடுத்து, இதில் ஒரு கிலோ மீனுக்கு 250 கிராம் உப்பு வீதம் தெளித்து நன்கு அழுத்த வேண்டும். இதைச் செய்பவரின் கைகள் மற்றும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும். நெத்திலி போன்ற சிறிய மீன்களில், குடல் மற்றும் செதிலை நீக்குவது கடினம் என்பதால், அப்படியே உப்பிட்டு உலர்த்தலாம். ஆனாலும், சாளை போன்ற மீன்களில் செதிலை நீக்கினால் நல்ல விலைக்கு விற்கலாம்.

இப்படி உலர்த்திய மீன்களை, வழவழப்பான தரையுள்ள சிமென்ட் தொட்டியில் உப்பைத் தூவிச் சேமிக்க வேண்டும். அடுத்து, மேலாகவும் உப்பைத் தூவிச் சுத்தமான மர மூடியால் தொட்டியை மூடி வைக்க வேண்டும்.

அடுத்து, ஒருநாள் கழித்து, மேலேயுள்ள மீன்கள் கீழேயும், கீழேயுள்ள மீன்கள் மேலேயும் வரும்படி அடுக்கி, மேலாக உப்பைத் தூவி விட்டு மூடி வைக்க வேண்டும்.

பிறகு, ஒருநாள் கழித்து இந்த மீன்களை வெளியே எடுத்து நன்னீரில் நன்கு கழுவி, தேங்காய் நார்ப் பாயில் பரப்பி, 2-3 நாட்கள் காய வைக்க வேண்டும். மீனின் ஈரப்பதம் 25% ஆகக் குறைந்ததும் 30-60 நிமிடங்கள் நிழலில் உலர்த்தி, நெகிழிப் பைகளில் அல்லது டப்பாக்களில் சேமிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு, திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை அறிவியல் நிலையம், சிக்கல், நாகை மாவட்டம், தொலைபேசி எண்: 04365 246266.


முனைவர் .மதிவாணன்,

யூ.ஹினோ பர்னாண்டோ, முனைவர் அ.கோபாலக் கண்ணன்,

முனைவர் இரா.ஜெயராமன், முனைவர் சுக.பெலிக்ஸ், வேளாண்மை அறிவியல் நிலையம்,

சிக்கல், நாகை மாவட்டம்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks