My page - topic 1, topic 2, topic 3

நன்றாக நடந்தது காளான் வளர்ப்புப் பயிற்சி!

விவசாயம் செய்ய நீரில்லை, நிலமில்லை, வேலை செய்ய ஆட்கள் கிடைக்கவில்லை என்னும் கவலை வேண்டாம். கொஞ்சம் நீர், ஒரு குடிசை அமைக்கக் கொஞ்சம் போல இடம், சொந்த உழைப்பு இருந்தால் போதும். நித்தமும் வருமானம் எடுத்துக் கொண்டே இருக்கலாம். அன்றாடம் வருமானம் தரும் அருமையான தொழில். அதுதான் காளான் வளர்ப்பு!

மழைக்காலத்தில் மட்டும் ஏரி, குளக்கரை மற்றும் தரிசு நிலங்களில் அரிதாகக் கிடைத்து வந்த காளான், இன்றைய நவீன அறிவியலால் காலம் முழுவதும் கிடைக்கும் பொருளாக மாறியிருக்கிறது. தாவர இறைச்சி என்று சொல்லும் வகையில் அமைந்த சுவையான பொருள். சிறுவர் முதல் முதியோர் வரை உண்ணத்தக்க பொருள்; அனைவரும் விரும்பி உண்ணும் பொருள் காளான். இந்தக் காளானை எளிதாக உற்பத்தி செய்ய முடியும்.

காளானை உற்பத்தி செய்வதன் மூலம் குடும்பத் தேவைக்கான வருவாயைப் பெற முடியும். கடின உழைப்பு இருந்தால் நித்தமும் ஆயிரக் கணக்கிலும் சம்பாதிக்கலாம். எனவே, காளான் வளர்ப்புப் பயிற்சியை வழங்கினால், பல பேர் பயனடைவர் என்னும் நோக்கில், பச்சை பூமி சார்பில், 04-02-2022 வெள்ளிக்கிழமை அன்று காளான் வளர்ப்புப் பயிற்சி, கூகுள் மீட் (Google Meet) செயலி வாயிலாக நடைபெற்றது.

காலை 10 முதல் 12 மணி வரை நடந்த பயிற்சியை, செங்கல்பட்டு மாவட்டம் காட்டுப்பாக்கத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் முனைவர் காயத்ரி சுப்பையா அருமையாக வழங்கினார்.

பயிற்சிப் பதிவுக் கட்டணமாக, தலா 100 ரூபாய் செலுத்தி, விவசாயிகள், வேளாண் ஆர்வலர்கள், இல்லத்தரசிகள் என 35 பேர் பங்கேற்று, காளான் வளர்ப்புக் குறித்து தெரிந்து கொண்டனர். முதல் ஒரு மணிநேரம், காளான் வகைகள் குறித்தும், அவற்றை வளர்க்கும் விதங்கள் பற்றியும் முனைவர் காயத்ரி சுப்பையா எடுத்துரைத்தார். இரண்டாவது ஒரு மணிநேரம், கேள்வி-பதில் நேரமாக அமைந்தது.

பயிற்சியில், காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வளர்க்கப்படும் காளான்கள் காட்சிப்படுத்தப் பட்டன. கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த பண்ணையாளர் ஒருவரும் தனது பண்ணையைக் காட்சிப்படுத்தி பயிற்சிக்கு உதவினார்.

வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்புத் தொடர்பாக, இதுபோன்ற பயிற்சிகளை வாரந்தோறும் பச்சை பூமி நடத்தும். ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம்.


பச்சை பூமி

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks