கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2021
காளான் என்பது பூசண வகையைச் சேர்ந்த பச்சையம் இல்லாத கீழ்நிலைத் தாவரமாகும். காளான்கள் பல்வேறு வடிவங்கள் மற்றும் நிறங்களில் உள்ளன. காளானில் மக்களுக்குத் தேவையான அனைத்துப் புரதச் சத்துகள், உயிர்ச் சத்துகள், தாதுப்புகள் அடங்கி இருப்பதால், இதை, பாதுகாப்பான வேளாண் உணவுப் பொருள் என்று கூறலாம்.
பொதுவாக, குடை, சிப்பி, கிழங்கு, புனல் போன்ற உருவங்களில் காளான்கள் இருக்கும். வைக்கோல் காளானின் அடிப்பகுதி, கிண்ணத்தைப் போலவும், மொட்டுக்காளான் தண்டின் நடுப்பகுதி, வட்டத் தட்டைப் போலவும் இருக்கும்.
மனித இனத்தில் தோன்றும் பல்வேறு நோய்களுக்கு அருமருந்தாகவும் காளான் பயன்படுகிறது. குறிப்பாக, இதய நோய், நீரிழிவு, புற்று நோய் மற்றும் மலச்சிக்கலைக் குணமாக்கும் உணவுப் பொருளாகப் பயன்படுகிறது.
கிழக்கத்திய நாடுகளில் காளான்களில் இருந்து பல்வேறு நோய்களுக்கான மருந்துகளைத் தயாரித்து ஏற்றுமதி செய்கிறார்கள்.
உலர்ந்த காளானில் 18.9% புரதம், 1.7% கொழுப்பு, 58% மாவுப்பொருள், 11.1% நார்ப்பொருள், 9.3% சாம்பல் சத்து ஆகியன உள்ளன. இந்திய உணவில் முக்கியப் பங்காற்றும் தானியங்களில் உள்ள லைசின், டிரிப்டோபன் போன்ற அமினோ அமிலங்கள் காளானில் நிறைந்துள்ளன.
உடலுக்குத் தேவையான அமினோ அமிலங்கள், உயிர்ச் சத்துகள், தாதுப்புகள், உயர்வகைப் புரதம், நார்ச்சத்து மற்றும் கொழுப்பும் சர்க்கரையும் குறைவாக இருப்பதால், இதய நோய், வயிற்றுப்புண், நீரிழிவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், காளான் சிறந்த இயற்கை உணவாகும்.
கேனோடெர்மா, லென்டினஸ், ஆரிக்குலேரியா, கிரிபோலா போன்ற காளான் வகைகளில் இருந்து, புற்று நோய், மஞ்சள் காமாலை, மற்றும் பால்வினை நோய்க்கான மருந்துகள், மாத்திரைகள், மருந்துக் குப்பிகள் மற்றும் டானிக் வடிவில் தயாரிக்கப்படுகின்றன.
இவற்றைச் சீனா, கொரியா, தைவான், பிலிப்பைன்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகள் தயாரித்து வருகின்றன. நமது நாட்டிலும் இத்தகைய பொருள்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
ஜப்பானில் மட்டும் ஆண்டுக்கு 358 மில்லியன் டாலர் அளவுக்கு, கோரியோலஸ் வெர்சிகலர் என்னும் காளானில் இருந்து புற்று நோய்க்கான மருந்து தயாரிக்கப்படுகிறது. இது, அந்நாடு தயாரிக்கும் புற்று நோய் மருந்தில் கால் பங்காகும்.
இதைப் போலச் சீனாவிலும், கேனோடெர்மா, கிரிபோலா, லேன்டினஸ், ஹப்சிசைகஸ் போன்ற மருத்துவக் காளான்களை வளர்த்து வருகின்றனர்.
இந்தியாவில் இருந்து மோர்ச்செல்லா போன்ற மருத்துவக் காளான்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மோர்ச்செல்லா காளான் ஏற்றுமதி மூலம் நம் நாட்டுக்கு ஆண்டுதோறும் 100 கோடி ரூபாய் அந்நியச் செலாவணியாகக் கிடைக்கிறது. ஒரு கிலோ மோர்ச்செல்லா காளானின் விலை 3,000 ரூபாயாகும்.
இப்படி, தொடக்கக் காலத்தில் உணவாக மட்டுமே பயன்பட்டு வந்த காளான்களின் மறுபக்கத்தைப் புரட்டிப் பார்த்த அறிவியல் உலகம், அவற்றிலுள்ள சர்க்கரை, புரதம் மற்றும் டிரைடெர்பினாய்டு மூலக்கூறுகளின் மருத்துவக் குணங்களை வெளியே கொண்டு வரும் வகையில் செயலாற்றிக் கொண்டுள்ளது.
முனைவர் பெ.த.சரவணன்,
முனைவர் க.சித்ரா, அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி, திருச்சி-620027.
சந்தேகமா? கேளுங்கள்!