விவரிக்கிறார் எம்.ஐ.டி. கல்விக் குழுமத் துணைத் தலைவர் இ.பிரவீன்குமார்
கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2020
வயிற்றுக்குச் சோறிட வேண்டும்-இங்கு
வாழும் மனிதருக்கெல்லாம்
பயிற்றிப் பல கல்வி தந்து-இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்
என்னும் பாரதியின் கவிமொழிக்கு இணங்க, வயிற்றுப் பசிக்குச் சோறும், அறிவுப் பசிக்குக் கல்வியும் வழங்கி, நம் நாட்டின் சிறப்பை உயர்த்தும் நோக்கத்தில், உலகுக்கு உணர்த்தும் எண்ணத்தில், மணியும் கனியும் விளையும் கழனியாக, அறிவும் திருவும் விளையும் கல்விச் சாலைகளாக மாறியிருக்கிறது, நேற்று வரை பயனற்றுக் கிடந்த அந்தக் கற்காடு.
பல்கலை மையம்
ஆம். திருச்சி மாவட்டம் முசிறியில் இருந்து துறையூர் செல்லும் சாலையில் சுமார் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, எம்.ஐ.டி. கல்விக் குழுமம். சி.பி.எஸ்.இ. பள்ளி, தொழிற்பயிற்சி நிலையம், பல்தொழில்நுட்பக் கல்லூரி, செவிலியர் பயிற்சிக் கல்லூரி, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி, வேளாண்மைக் கல்லூரி ஆகியவற்றை எம்.ஐ.டி. கல்விக் குழுமம் நடத்தி வருகிறது. இந்த குழுமத்தின் வேளாண்மைக் கல்லூரி முசிறியில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் வெள்ளாளப்பட்டி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது.
உலகத் தரத்தில் கட்டமைப்புகள்
வேளாண்மைக் கல்லூரியின் வளாகத்தில் நுழைந்ததும் குளுமையான சூழலை நம்மால் உணர முடிந்தது. அந்தளவிற்கு கல்லூரி மற்றும் கல்லூரி வளாகத்தைச் சுற்றி வளர்ந்து வரும் மரங்கள், மாணவர்களின் களப் பயிற்சிக்கான நிலங்களில் செழிப்பாக வளர்ந்திருக்கும் நெல், கரும்பு, வாழை, கடலை, பழ மரங்கள் மற்றும் மூலிகைகள் பசுமையைப் போர்த்தி இருந்தன. இந்த எம்.ஐ.டி. வளாகம் நகர்ப்புறத்தை விட்டு ஒதுங்கியிருப்பதால், இங்கே அமைதிக்கும், அழகுக்கும் பஞ்சமேயில்லை. உலகத் தரத்தில் என்று சொல்வதைப் போல, கட்டட அமைப்புகளும் வியக்க வைக்கும் வகையில், செய்நேர்த்தியால் அழகு மிளிர, நவீன வசதிகளுடன் அமைந்துள்ளன.
செய்தி சேகரிக்கும் நோக்கில் நாம் வந்திருக்கும் காரணத்தை அறிந்த, எம்.ஐ.டி. கல்விக் குழுமத் துணைத் தலைவர் இ.பிரவீன் குமாரின் உதவியாளர், பார்வையாளர் அறையில் நம்மை அமர வைத்தார். சுமார் 10 நிமிட காத்திருப்புக்குப் பின், புன்னகை தவழ நம்மை வரவேற்றார் பிரவீன் குமார். அவரைப் பார்த்ததும் நமக்கு வியப்பாக இருந்தது. ஏனெனில், மிகப் பெரிய கல்விக் குழுமத்தின் துணைத் தலைவராக இருக்கும் பிரவீன் குமார் 27 வயது இளைஞர்.
பொறுப்பும் முன்னேற்றமும்
அதைத் தொடர்ந்து அவரைப் பற்றிக் கேட்டோம். “நான் இ.பிரவீன் குமார். எனது தந்தை தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கித் தலைவர் சேலம் ஆர்.இளங்கோவன். அ.இ.அ.தி.மு.க.வில் இருக்கிறார். நான் சென்னையில் உள்ள சத்யபாமா பல்கலைக் கழகத்தில் வாகனவியல் துறையில் (BE Automobile Engineering) இளநிலைப் பொறியியல் படிப்பை முடித்து விட்டு, கடந்த 2016 ஆம் ஆண்டு இந்த எம்.ஐ.டி. கல்விக் குழுமங்களின் துணைத் தலைவராக, என்னுடைய 24 வயதில் பொறுப்புக்கு வந்தேன்.
அப்போது, எம்.ஐ.டி. கல்விக் குழுமத்தில் பாலிடெக்னிக் கல்லூரி, தொழிற் பயிற்சி நிலையம், மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவை மட்டுமே இருந்தன. நான் பொறுப்பேற்ற பின்னர் சி.பி.எஸ்.இ. பள்ளி, விவசாயம் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, செவிலியர் கல்லூரி ஆகியவற்றைக் கொண்டு வந்துள்ளோம்’’ என்று, செய்திக்கு முன்னுரை கொடுத்த பிரவீன் குமாரிடம், “வேளாண்மைக் கல்லூரியைத் தொடங்க வேண்டும் என்னும் எண்ணம் எப்படி வந்தது?’’ என்று கேட்டோம்.
வேளாண் கல்லூரியின் நோக்கம்
அதற்கு அவர், “நாம் எல்லோரும் அடிப்படையில் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான். என்னுடைய தந்தை, தீவிர அரசியலில் இருந்தாலும், இன்றும் எங்களுடைய தோட்டத்தில் விவசாய வேலைகள் அனைத்தையும் செய்வார். நானும் அதையெல்லாம் பார்த்து வளர்ந்தவன் என்பதால், எனக்கும் விவசாயத்தின் மீது மிகுந்த ஆர்வம் உண்டு. விவசாயிகள் படும் துன்பங்களைப் பற்றி, நம் எல்லோருக்குமே நன்றாகத் தெரியும்.
இந்நிலை மாற வேண்டுமானால், மேலை நாடுகளில் உள்ளதைப் போன்ற நவீன வேளாண்மை முறைக்கு நம் விவசாயிகள் மாற வேண்டும். விவசாயத்தில், புதிய புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் விவசாயத் துறையில் வல்லுநர்கள் வேண்டும். விவசாயத்தைத் தவிர மற்ற துறைகளில் எண்ணற்ற வல்லுநர்கள் இருக்கிறார்கள். ஆனால், உயிர் நாடியாக விளங்கும் விவசாயத் துறையில் வல்லுநர்கள் மிகக் குறைவாகவே இருக்கிறார்கள்.
எனவே, நாமும் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான விவசாய வல்லுநர்களை உருவாக்க வேண்டும் என்னும் நோக்கத்தில், கடந்த ஆண்டில் இந்தக் கல்லூரியைத் தொடங்கினோம்’’ என்றவர், “கல்லூரியைச் சுற்றிப் பார்த்துக் கொண்டே பேசலாம்’’ என்று கூற, அவரைப் பின்தொடர்ந்தோம். அப்போது எம்.ஐ.டி. வேளாண்மைக் கல்லூரியின் முதல்வர் முனைவர் வி.இராஜேந்திரனும் நம்முடன் இணைந்து கொண்டார்.
முதல் தரத்தில் கணிப்பொறி அறை
முதலில் நாம் பார்த்தது, கல்லூரியின் கணிப்பொறி அறை. நூற்றுக்கும் மேற்பட்ட கணிப்பொறிகள், அதிவேக இணையதள வசதியுடன் மிகப் பெரிய தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தைப் போல இருந்தது. மேலும், மாணவர்களுக்குத் தன்னம்பிக்கையையும், ஆங்கில அறிவையும் வளர்க்கும் பொருட்டு, ஒலி-ஒளி ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கே, கேட்டல், அறிதல், உச்சரித்தல், மேடைப் பேச்சு, நேர்காணல் ஆகியவற்றில் பயமின்றித் தெளிவாகப் பேசுதல் என, பல பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன.
“இந்தப் பயிற்சிகள், மாணவர்கள் படித்து முடித்து வேலைவாய்ப்பைத் தேடிச் சிறந்த நிறுவனங்களுக்குச் செல்லும் போதும், மேலை நாடுகளுக்குச் செல்லும் போதும் பெரியளவில் கைகொடுக்கும்’’ என்றார் பிரவீன் குமார்.
ஐயம் போக்கும் காணொளிகள்
அடுத்து, அங்கிருந்த வகுப்பறைகளுக்குச் சென்றோம். அனைத்து வகுப்பறைகளும் கணிப்பொறி, புரொஜெக்டர், திரை என நவீனத் தொழில் நுட்பத்துடன் அமைக்கப்பட்டிருந்தன. அதாவது, பேராசிரியர் சொல்லித் தரும் பாடங்கள் காணொளிகளாகப் பதிவு செய்யப்படுகின்றன. பிறகு, பாடங்களில் மாணவர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டால், அவற்றைத் திரையிட்டு, தங்கள் ஐயத்தைத் தெளிவாக்கிக் கொள்ளலாம். மேலும், மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும், தங்கள் மடிக் கணினிகளில் போட்டுப் பார்க்கும் வண்ணம், அந்தக் காணொளிப் பதிவுகள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன.
பதின்மூன்று ஆய்வகங்கள்
அதைத் தொடர்ந்து ஆய்வுக் கூடங்களுக்குச் சென்றோம். மண் வேதியியல், சுற்றுச்சூழல், பயிர் இனப்பெருக்கம், பூச்சியியல், பயிர் நோயியல் என, பதின்மூன்று துறைகளுக்கான ஆய்வுக் கூடங்கள் உள்ளன. இவற்றில் ஒவ்வொரு மாணவரும் தனித்தனியே செய்முறைகளைச் செய்து பார்க்கும் வகையிலான பொருள்கள், நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், நுண்ணுயிரியல் துறை, விதைத் தொழில்நுட்பத் துறை ஆய்வகங்கள், மாணவர்கள் ஆராய்ச்சி செய்வதற்கேற்ற அளவில் அமைக்கப்பட்டுள்ளன.
மின்னணு நூலகம்
அதன் பின்னர், நாம் சென்ற இடம் நூலகம். அங்கே, சுமார் 10,000க்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன. இங்கே பாட நூல்களைத் தவிர, அன்றாட நாட்டு நடப்புகளையும், பொது அறிவையும் மாணவர்கள் வளர்த்துக் கொள்ளும் வகையில், நாளிதழ்கள், வார, மாத இதழ்கள், வேளாண்மை சார்ந்த இதழ்கள் என அனைத்து விதமான நூல்களும் வைக்கப்படுகின்றன.
பாதுகாப்பு மிகுந்த விடுதி
அதைத் தொடர்ந்து நாம் சென்று பார்த்தது தேர்வு அறைகள். தேர்வு அறைகள் முழுவதும் சிசிடிவி கண்காணிப்பு காமிரா வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து மாணவர்களின் விடுதிக்குச் சென்றோம். ஒரு அறையில் இரண்டு மாணவர்கள் தங்கும் விதமாக, விடுதி அறைகள் அனைத்தும் நவீன வசதிகளுடன் அமைந்துள்ளன. அங்குள்ள உணவு விடுதி, கேரள முறையில் கட்டப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு மூன்று வேளையும் நல்ல தரமான உணவு மற்றும் காலை – மாலையில் தேனீரும், சிற்றுண்டியும் வழங்கப்படுகின்றன.
விளையாட்டு அரங்கம்
மேலும், கால் பந்து, இறகுப் பந்தாட்டத் திடல்கள், மாணவர்கள் காலையிலும் மாலையிலும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வதற்கான உடற்பயிற்சிக் கூடமும் நவீன வசதிகளுடன் இருந்தது. மேலும், மாணவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டால், அவர்களுக்குச் சிகிச்சையளிக்கவும், ஓய்வெடுக்கவும் இங்கே அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. பிற கல்லூரிகளுக்குப் பயிற்சிகள், விளையாட்டுப் போட்டிகள் போன்றவற்றுக்கு மாணவர்கள் செல்வதற்காக, நவீன வசதிகளுடன் குளிரூட்டப்பட்ட பேருந்துகளும் இந்தக் கல்லூரியில் உள்ளன.
அம்மா கொடுத்த மகிழுந்து
இப்படி, கல்லூரி வளாகம் முழுவதையும் சுற்றிப் பார்த்ததும், “மாணவர்களின் களப்பயிற்சிக்காக அமைக்கப்பட்டிருக்கும் தோட்டங்களைப் பார்க்கலாம்’’ என்றார் பிரவீன் குமார். அப்போது கல்லூரி வளாகத்தில் மிகவும் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாடா சுமோ மகிழுந்துவைப் பற்றிக் கேட்க, “இது அப்பா மாவட்டச் செயலாளராக இருந்த போது, அவரிடம் கார் வசதி இல்லை. இதையறிந்த மாண்புமிகு அம்மா(ஜெயலலிதா) அவர்கள், இந்த காரை அப்பாவுக்கு வழங்கினார். அதைப் பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறோம்’’ என்றார்.
களப் பயிற்சிக்கான நிலம்
அதைத் தொடர்ந்து தோட்டங்களைப் பார்க்கப் புறப்பட்டோம். அப்போது, “இந்தக் கல்லூரியின் மொத்தப் பரப்பளவு 185 ஏக்கர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்தப்பகுதி முழுவதும் செம்மண், களிமண், வண்டல்மண், கற்பாறைகள் என இருந்தது. பாதிக்கும் மேற்பட்ட நிலம் கற்பாறைகளால் ஆனது தான். அந்தக் கற்பாறைகள் அனைத்தையும் வெட்டி எடுத்து, தற்போது நடந்த முதல்வரின் குடிமராமத்துப்பணி மூலம் தோண்டி எடுக்கப்பட்ட ஆறு, குளங்களின் மண்ணைக் கொண்டு வந்து கொட்டி இந்த நிலங்களைச் சரிசெய்துள்ளோம். தமிழ்நாட்டில் மாணவர்களின் களப் பயிற்சிக்கென அதிக இடவசதியைக் கொண்டது நமது எம்.ஐ.டி. வேளாண்மைக் கல்லூரி தான். மாணவர்களின் பயிற்சிக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வேறெங்கும் இல்லாத அளவில் பார்த்துப் பார்த்து உருவாக்கியுள்ளோம்.
விளையும் பொருள்கள்
மாணவர்களின் களப்பயிற்சிக்காகச் சுமார் 40 ஏக்கரில் நெல், 12 ஏக்கரில் மரவள்ளிக் கிழங்கு, 16 ஏக்கரில் கரும்பு, 4 ஏக்கரில் நிலக்கடலை, 4.5 ஏக்கரில் கொய்யா, 4.5 ஏக்கரில் எலுமிச்சை, 14 ஏக்கரில் சாத்துக்குடி, 30 ஏக்கரில் சப்போட்டா, 4 ஏக்கரில் மாதுளை, 2 ஏக்கரில் சீத்தாப்பழம், 16 ஏக்கரில் வாழை, 10 ஏக்கரில் மக்காச்சோளம், 5 ஏக்கரில் தீவனப்புல், 13 ஏக்கரில் மூலிகைப் பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. இவற்றில், நெல், கரும்பு, நிலக்கடலை, மரவள்ளிக் கிழங்கு, கொய்யா, எலுமிச்சை, சப்போட்டா, மாதுளை, சாத்துக்குடி ஆகியவற்றை அடர் நடவு முறையில் பயிர் செய்துள்ளோம்.
மேலும், கம்பு, சாமை, தினை, வரகு, சூரியகாந்தி, எள், காய்கறிகள், கீரைகள் ஆகியவற்றை, தலா 5 சென்ட் நிலத்தில் பயிர் செய்துள்ளோம். கல்லூரி முழுவதும் பரவலாக நூற்றுக்கும் மேற்பட்ட நாவல் மரங்கள், தென்னை மரங்களை வைத்துள்ளோம்.
மேலும், தக்காளி, கத்தரி, வெண்டைக்காய், பூசணிக்காய், மிளகாய், புடலங்காய், பாகற்காய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை முற்றிலும் இயற்கை விவசாய முறையில் இங்கேயே விளைவித்து மாணவர்களுக்கு உணவாக வழங்குகிறோம். எங்கள் கல்லூரிக்குப் போக மீதமுள்ளதை விற்பனை செய்கிறோம்’’ என்று பிரவீன் குமார் கூறிக் கொண்டிருக்க, அங்கிருந்த நவீன நாற்றங்கால் குடிலை அடைந்தோம்.
விவசாயிகளுக்கு உதவும் நாற்றங்கால்
அந்தப் பசுமையான நிழல்வலைக்குடில் சுமார் 70,000 சதுர அடியில் அமைந்துள்ளது. “இதில் ஒரே நேரத்தில் சுமார் 20 இலட்சம் நாற்றுகளை உற்பத்தி செய்ய முடியும்’’ என்று கூறிய கல்லூரி முதல்வர் முனைவர் இராஜேந்திரன், அங்கிருந்த மரக்கன்றுகள், காய்கறி, பழச்செடிகளை நம்மிடம் விளக்கியதுடன், “இங்கே உற்பத்தி செய்யும் நாற்றுகளை, விவசாயிகள் மற்றும் வீட்டுத் தோட்டங்களை அமைக்க விரும்பும் மக்களுக்குக் குறைந்த விலையில் வழங்கி வருகிறோம்’’ என்றார்.
நாட்டு மாடுகளின் கூடம்
அங்கே பேராசிரியர் ஒருவர், சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்களிடம், அங்கிருந்த செடிகளின் தாவரவியல் பெயர், அவை வளரும் விதம், பயன்கள் என அனைத்தையும் விளக்கிக் கொண்டிருந்தார். தொடர்ந்து அங்கிருந்த கால்நடை வளர்ப்புப் பகுதிக்குச் சென்றோம். காங்கேயம், சிந்து, கிர், காராம் பசு, தியோனி, தார்பார்க்கர் எனச் சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட நாட்டு மாடுகள் இருந்தன. அவற்றின் கொட்டம் முழுவதும் அவ்வளவு சுத்தமாக இருந்தது. இந்த மாடுகளுக்கான தீவனப்புல்லைக் கருவி மூலம் நறுக்கிக் கொடுக்கிறார்கள். மாடுகளில் நவீன முறையில் பால் கறக்கப்படுகிறது.
பரணில் விளையாடும் ஆடுகள்
அதற்கருகில் இருந்த ஆட்டுப் பரணுக்குச் சென்றோம். சில ஆடுகள் படுத்துக் கொண்டும், சில ஆடுகள் உலாத்திக் கொண்டும், சில ஆடுகள் அசை போட்டுக் கொண்டும், சில ஆடுகள் நறுக்கிப் போடப்பட்டிருந்த தீவனத்தைத் தின்று கொண்டும் இருந்தன. மெட்ராஸ் ரெட், ஜமுனாபாரி, தலைச்சேரி, போயர், சிரோகி, இரட்டைக்குட்டி போடும் உயரினச் செம்மறி ஆடு போன்றவற்றையும், பரணில் ஆடுகளை வளர்ப்பதால் ஏற்படும் பயன்களையும், அங்கிருந்த கால்நடை மருத்துவர் விவேகானந்தன் மாணவர்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தார்.
கோழிகளின் சங்கமம்
அப்போது நம்மிடம், “இந்த ஆடு மாடுகளின் சாணத்தைத் தான் இங்குள்ள நிலத்துக்கு உரமாக இடுகிறோம்’’ என்ற கல்லூரியின் தோட்ட மேற்பார்வையாளர் க.பாலமுருகன், நம்மை அருகிலிருந்த கோழிப்பண்ணைக்கு அழைத்துச் சென்றார். அங்கு நாட்டுக் கோழி, உலகிலேயே மிகப்பெரிய இறைச்சிக் கோழி, கறிக் கோழி, கடக்நாத் என்னும் கருங்கோழி, சண்டைச் சேவல், கினிக் கோழி எனச் சுமார் 1000க்கும் மேற்பட்ட கோழிகள் இருந்தன. “இந்தக் கோழிகளின் முட்டைகளை வாரத்தில் இரு நாட்கள் மாணவர்களுக்குக் கொடுக்கிறோம். மீதமுள்ள முட்டைகளை விற்று விடுகிறோம்’’ என்றார்.
தொடர்ந்து அருகிலிருந்த முயல் பண்ணைக்குச் சென்றோம். அங்கே 50க்கும் மேற்பட்ட உயரின முயல்கள், வெள்ளை முயல்கள் இருந்தன. அவற்றில் சில முயல்கள் குட்டிகளை ஈன்றிருந்தன. தொடர்ந்து பேசிக் கொண்டே, அருகிலிருந்த நெல் வயலை அடைந்தோம்.
விவசாயிகளுக்கு இலவசப் பயிற்சி
அதைப் பார்வையிட்டுக் கொண்டே நம்மிடம் பேசிய பிரவீன் குமார், “எங்கள் கல்லூரியில் மாதம் ஒரு முறை விவசாயிகளுக்குப் பயிற்சியளிக்கிறோம். திருச்சி, பெரம்பலூர், நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் அதிகளவில் கலந்து கொள்கிறார்கள். இவர்களுக்கு வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, மண்புழு உரம் தயாரித்தல், தேனீ வளர்ப்பு, மாடித் தோட்டம் அமைத்தல் போன்ற பயிற்சிகளை அளிக்கிறோம். மகளிர் சுய உதவிக் குழுவினருக்கும் பயிற்சியளிக்கிறோம். இந்தப் பயிற்சிகளை இலவசமாகவே வழங்கி வருகிறோம்.
இன்றைய விவசாயத்தில் இஸ்ரேல் உலகளவில் முன்னேறியுள்ளது. எனவே, அங்குள்ள ஏரியல் குளோபல் லிங்ஸ் என்னும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, அதன் மூலம் இஸ்ரேல் முறையில், அவகோடா, மாதுளை, புரான் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் பயிற்சிகளை விவசாயிகளுக்குக் கொடுக்கிறோம். இத்தகைய பயிற்சிகள் மூலம், நமது விவசாயிகளும் முன்னேற முடியும்’’ என்றவர், ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த பெரிய பெரிய தொட்டிகளைக் காட்டி, “இந்தத் தொட்டிகளில் நீரைத் தேக்கி வைத்து, அனைத்துப் பயிர்களுக்கும் சொட்டு நீர், நுண்ணீர், தெளிப்பு நீர்ப் பாசன முறையில் பாசனம் செய்து, பெருமளவில் நீரை மிச்சப்படுத்தி வருகிறோம்’’ என்றார்.
அப்போது வழியின் இருபுறமும் வைக்கப்பட்டுள்ள மரக் கன்றுகள் சாய்ந்திருப்பதைப் பார்த்த பிரவீன் குமார், அங்கிருந்த கல்லூரியின் தோட்ட மேற்பார்வையாளரான ஜெகதீஷை அழைத்து, “இந்தக் கன்றுகளுக்குப் பத்து நாட்களுக்கு முட்டுக் கொடுத்து வைத்தால் நிமிர்ந்து விடும்’’ என்று அறிவுரை கூறி விட்டு, அருகிலிருந்த கரும்புத் தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார்.
நீர் ஆவியாவதைத் தடுக்கும் பாசனம்
அங்கே கரும்புகள் செழிப்பாக வளர்ந்து நிற்க, ஒரு கரும்பின் கீழ்ப் பகுதியில் சிறிது மண்ணைத் தோண்டினார். மேல்மண் காய்ந்திருக்க, அடிமண் ஈரமாக இருந்தது. மேலும் தோண்ட, இன்னும் ஈரமாக இருந்தது. இதை நமக்குக் காட்டி, “இது ஒரு வகையான சொட்டு நீர்ப் பாசன முறை. மண்ணின் மேல் பகுதியில் விழும் நீர் விரைவில் ஆவியாகி வீணாகி விடும். எனவே, இதைத் தடுக்கும் விதத்தில் சொட்டு நீர்ப் பாசனக் கருவியை மண்ணுக்குள் அமைத்துள்ளோம். இதனால் நீர் வீணாகாமல் கரும்பின் வேருக்கே சென்று விடும். இம்முறையில் பின்செய் நேர்த்திகளையும் எளிதாகச் செய்யலாம்.
இந்தக் கரும்புகளைச் சர்க்கரை ஆலைக்கு அனுப்பாமல், மோகனூரில் உள்ள கூட்டுறவுக் கரும்பாலை விவசாயிகளுக்கு விதைக் கரும்பாகக் கொடுக்க முடிவு செய்துள்ளோம்’’ என்று கூறிக்கொண்டே, அடுத்திருந்த வாழைத்தோப்பை நோக்கிச் சென்றார். நாமும் பின் தொடர்ந்து சென்றோம்.
அடர்நடவு வாழைக்குள் ஊடுபயிர்கள்
“இங்குள்ள வாழைகள் உயர் அடர் நடவு முறையில் நடவு செய்யப்பட்டுள்ளன. சாதாரண முறையில் ஒரு ஏக்கரில் 150 கன்றுகள் வரை வைக்க முடியும். ஆனால், இந்த முறையில் ஏக்கருக்கு 450 கன்றுகள் வரை வைக்கலாம். அதனால் விளைச்சல் கூடுவதுடன், பராமரிப்பதும் எளிது. இதற்கிடையில் கொத்தமல்லி, புதினா முதலியவற்றை ஊடுபயிராக வைத்துள்ளோம்’’ என்றார்.
அப்படியே அருகிலிருந்த மூலிகைத் தோட்டத்தைக் காட்டி, “இங்குள்ள மூலிகைச் செடிகள் அனைத்தும், பெங்களூருவில் இருந்து கொண்டு வரப்பட்டவை. சுமார் 600க்கும் மேற்பட்ட மூலிகைச் செடிகள் இங்கே உள்ளன’’ என்று கூறினார்.
அம்மா வழங்கிய வாழ்க்கை
இப்படி, சுமார் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக, ஒட்டுமொத்தக் கல்லூரியையும் சுற்றி முடித்த பிறகு மீண்டும் அவரது அலுவலக அறையை அடைந்தோம். அங்கே மின் விளக்குகளால் ஒளிர்ந்து கொண்டிருந்த, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தைப் பக்தியோடு வணங்கித் தன் இருக்கையில் அமர்ந்து, “இந்த வாழ்க்கை அம்மா அவர்களால் கிடைத்தது’’ என்று நெகிழ்ச்சியுடன் கூறிய பிரவீன் குமார், “நான் படித்தது பி.இ. ஆட்டோமொபைல் இன்ஜினியரிங். ஆனால், இந்தக் கல்லூரியைத் தொடங்கிய பிறகு, விவசாயத் துறையிலும் ஓரளவுக்கு நிபுணத்துவம் பெற்று விட்டேன்’’ என்றார், சிரித்துக் கொண்டே.
விவசாயிகளை மேம்படுத்துவதே நோக்கம்
தான் சார்ந்துள்ள கல்விக் குழுமம் சிறந்து விளங்க வேண்டும் என்னும் நோக்கில் ஓடி ஓடி உழைக்கும் இளைஞர் பிரவீன் குமார், “அல்லும் பகலும் அயராமல் பாடுபட்டு உலக மக்கள் அனைவருக்கும் சோறு போடும் விவசாயப் பெருங்குடி மக்களின் வளர்ச்சிக்காக, இந்த வேளாண்மைக் கல்லூரியைத் தொடங்கியுள்ளோம்’’ என்று முகமலர்ச்சியுடன் கூறியபோது, இந்த எண்ணத்தை அவருக்குள் விதைத்த இயற்கைக்கு மனதார நன்றியும், சாதனை இளைஞரான பிரவீன் குமாருக்கு வாழ்த்துகளையும் சொல்லி, அங்கிருந்து கிளம்பினோம்.
மு.உமாபதி
படங்கள்: முசிறி மோகன்
சந்தேகமா? கேளுங்கள்!